முதுமையில் மாரடைப்பை தடுக்கும் வழிமுறைகள்
- இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 25 சதவீத இறப்புகளுக்கு இதய நோய் காரணமாக உள்ளது.
- மாரடைப்பு வராமல் தடுக்கவும், ரத்தக் குழாய் அடைப்பு வராமல் தடுக்கவும் நவீன அறிவியல் அறிவுறுத்திக் கூறுவது மூன்று யுக்திகளைத் தான்.
கடந்த 100 ஆண்டுகளாக அதிகப்படியான இறப்புகளுக்கு காரணமாக இருப்பது இதய நோய்கள் தான். நமக்காக ஒரு நொடிப்பொழுது கூட ஓய்வில்லாமல் துடித்துக் கொண்டிருக்கும் ஓர் உறுப்பு இதயம். சராசரி வாழ்நாளில் கிட்டத்தட்ட 300 கோடி முறை இதயம் துடிப்பதாக இருக்கின்றது. ஆக, முதுமையில் மட்டுமின்றி எக்காலத்திலும், அத்தகைய இதயத்தின் மீது அக்கறை காட்ட வேண்டியது அத்தியாவசியமான ஒன்று.
முதுமையில் ஒவ்வொரு உறுப்பும் தேய்மானத்தின் அறிகுறியாக பல்வேறு நோய்நிலைகளை உருவாக்குகின்றது. அந்த வகையில் இதயத்தின் ரத்த சுற்றோட்ட மண்டலமானது முதுமையில் ரத்தக் குழாய் அடைப்பு எனும் நோய்நிலைக்கு ஆளாகின்றது. இந்த ரத்த குழாய் அடைப்பு தான் பின்னாளில் 'ஹார்ட் அட்டாக்' எனும் மாரடைப்புக்கு காரணமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 63 சதவீத இறப்புகள் தொற்றா நோய் நிலைகளால் உண்டாவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது. அதில் உலக அளவில் முதல் இடத்தைப் பிடிப்பது சர்க்கரை நோய். அதற்கு அடுத்தாற் போல், 27 சதவீத இறப்புகளுக்கு காரணமாக அமைவது இதய நோய்கள். அதுவும் குறிப்பாக 40-69 வயது வரை உள்ளவர்களில் 45 சதவீத அளவு இறப்புக்கு காரணமாக அமைவது இதய நோய்களே. எனவே முதுமையில், இதயம் நொறுங்கி விடாமல் அதன் மீது கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாத்துக்கொள்வது ஆயுட்காலத்தைக் கூட்டும்.
இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 25 சதவீத இறப்புகளுக்கு இதய நோய் காரணமாக உள்ளது. முக்கியமாக இந்தியாவில் பெண்களின் இறப்புக்கு இதய நோய் அதிமுக்கிய காரணமாகும். பெண்களில் கிட்டத்தட்ட 18 சதவீத பேருக்கு இதய நோய்களால் இறப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதய நோயால் நம் நாட்டு பெண்களிடம் ஏற்படும் இறப்பு விகிதம் மார்பகப் புற்றுநோய் மற்றும் பிற புற்றுநோய்களை விட அதிகமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கன் காலேஜ் ஆப் கார்டியாலஜி இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுகளின்படி, இந்தியப் பெண்களில் கரோனரி தமனி நோய்நிலையானது வயதைப் பொறுத்து 3 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியப் பெண்களின் சராசரி மாரடைப்பு வயது 59 ஆகும். அதாவது வளர்ந்த நாடுகளில் உள்ள பெண்களின் சராசரி மாரடைப்பு வயதை விட மிகக் குறைவாகும். எனவே முதுமையில் பெண்கள், ஆண்களைக் காட்டிலும் அதிக அக்கறை செலுத்துவது அவசியம்.
முதுமையில் இதயத்திற்கு செல்லும் கரோனரி ரத்தக் குழாய்களில் ஏற்படும் தேய்மானமும், அதில் படியும் கொலஸ்ட்ரால் எனும் கொழுப்புப் பொருளும் மாரடைப்புக்கு (ஹார்ட் அட்டாக்) காரணமாக நவீன அறிவியல் கூறுகின்றது. இந்தக் கூற்று சித்த மருத்துவம் கூறும் நோய்க்காரணத்திற்கு ஒப்பாக உள்ளது. ரத்த குழாய்களில் படியும் கொழுப்பு பொருளை சித்த மருத்துவம் கபம் என்று கூறுகின்றது. இந்த கபத்துடன் கூடும் வாதம், 'கபவாதமாகி' 'மாரடைப்பு' எனும் தீராத நோய்நிலைக்கு காரணமாகின்றது.
ஆகவே, கபவாதத்தைக் குறைக்கும் சித்த மருந்துகளும், மூலிகைகளும் முதுமையில் இதய நோயை தடுக்க உதவும். எளிமையாக பூண்டு, லவங்கப்பட்டை, லவங்கம், இஞ்சி (சுக்கு), மிளகு ஆகிய அஞ்சறைப்பெட்டிச் சரக்குகளும், மருதம்பட்டை, வெண்தாமரை, குங்கிலியம், சர்பகந்தா, செம்பருத்தி, முருங்கை, சிற்றாமுட்டி, வல்லாரை, அமுக்கரா கிழங்கு ஆகிய மூலிகைகளும், திரிபலை, திரிகடுகு ஆகிய சித்த மருந்துகளும் இதய நோய் நிலைகளில் நல்ல பலன் தருவதாக உள்ளன. மேலும், பல்வேறு மூலிகைகளில் உள்ள 'கார்டியாக் கிளைக்கோசைடு' எனும் வேதிப்பொருட்கள் இதயத்திற்கு நன்மை பயக்கும் வண்ணம் உள்ளன.
மாரடைப்பு வராமல் தடுக்கவும், ரத்தக் குழாய் அடைப்பு வராமல் தடுக்கவும் நவீன அறிவியல் அறிவுறுத்திக் கூறுவது மூன்று யுக்திகளைத் தான். முதலில் கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை குறைப்பதோடு, ரத்தத்தில் கொழுப்பின் அளவினை சீராக பராமரிப்பது. இரண்டாவது ஆன்டிஆக்சிடன்ட் எனும் ஆக்சிஜன் நச்சுப்பொருட்களை (ROS) உடலில் இருந்து நீக்கும் உணவு முறைகளை பின்பற்றுவது. மூன்றாவது விலங்கு உணவுப் பொருட்களை தவிர்த்து தாவர உணவுப்பொருட்களை அதிகம் சேர்ப்பது. அதாவது அசைவ உணவுகளை குறைத்துக் கொள்வது ஆகிய இவை மூன்றும் தான்.
பொதுவாக ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு 200 மிகி/dl என்ற அளவிற்கு இருக்க வேண்டும். 244 மிகி/dl அளவிற்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் உள்ள ஆண்களுக்கு, ரத்தத்தில் 210 மிகி/dl அளவிற்கு கொலஸ்ட்ரால் உள்ள ஆண்களை விட மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் உள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுவது கவனிக்கத்தக்கது. எனவே ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் அவ்வப்போது கண்காணித்துக் கொள்வது இதயத்தைக் காக்கும் எளிய வழிமுறை.
ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க எளிய சித்த மருத்துவ முறைகளாக வெந்தயத்தை வறுத்துப் பொடித்து பகல் நேரங்களில் எடுத்துக்கொள்வது நல்லது. வெந்தயம் அதிகப்படியான நார்சத்துக்களை கொண்டுள்ளபடியால் கொழுப்பினை எளிதில் கரைக்கும்.
லவங்கப்பட்டையைப் பொடித்து அதனுடன் சீரகம், சோம்பு சேர்த்து அவ்வப்போது தேநீரில் கலந்து எடுத்துக்கொள்வது இதயத்திற்கு நன்மை தரும். லவங்கப்பட்டையானது ரத்தக்குழாயில் படிந்துள்ள கொழுப்பினைக் கரைத்து, ரத்த ஓட்டம் சீராக வழி வகை செய்யும். தினசரி பூண்டினை பாலில் வேக வைத்து எடுத்துக்கொள்வதும் கூட ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பினைக் குறைக்கும். மாரடைப்பினைத் தடுக்கவும் உதவும் 'மூலிகை ஆஸ்பிரின்' என்றே பூண்டினை சொல்லலாம். நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் அஞ்சறைப்பெட்டி சரக்கான மஞ்சள் ரத்தத்தில் உள்ள கொழுப்பினை அளவைக் குறைப்பதாக உள்ளது சிறப்பு.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் சேர்ந்த திரிபலை சூரணம் எனும் சித்த மருந்து இதயத்திற்கு கிடைத்த மாபெரும் கொடை. ரத்தத்தில் உள்ள கொழுப்பினைக் குறைக்கும் தன்மையும், மாரடைப்பு வராமல் தடுக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட் தன்மையும் இதற்குண்டு. தினசரி திரிபலை சூரணத்தை இரவில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்வது நல்ல பலன் தரும். அதே போல் குங்கிலியம் எனும் சித்த மருத்துவ மூலிகைப் பொருளும் இதயம் காக்கும் அருமருந்தாக உள்ளது.
சித்த மருத்துவத்தில் பிரசித்தி பெற்ற மூலிகையான தனி நிலவேம்பு சூரணம் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக உள்ளது என்று எலிகளில் நடந்த சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. அதில் உள்ள 'ஆன்ரோகிராபோலாய்டு' எனும் வேதிப்பொருள் அதன் பல்வேறு மருத்துவ குணங்களுக்கு காரணமாக உள்ளது. மேலும் இது ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுப்பதாகவும் உள்ளது.
செம்பருத்தி எனும் இயற்கை தந்த இதய நிபுணரை பயன்படுத்த துவங்குவது இதய நோய்களைத் தடுக்கும் மற்றுமொரு எளிய வழிமுறை. இதய ரத்தக் குழாய்களில் சேதாரத்தை உண்டாகும் நச்சுத் தன்மை கொண்ட வேதிப்பொருளை நீக்கும் தன்மை செம்பருத்திக்கு உண்டு. செம்பருத்திப் பூவில் உள்ள இயற்கை நிறமிகளான பாலிபினோலிக் வேதிப்பொருட்கள் அதன் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மைக்கும், இதயம் காக்கும் தன்மைக்கும் காரணம் என்கின்றன நவீன ஆய்வுகள். எனவே முதுமையில், இயற்கையில் கிடைக்கும் செம்பருத்திப் பூவை சூடான பாலில் போட்டு எடுத்துக்கொள்ளலாம் அல்லது சித்த மருந்தான 'செம்பருத்தி மணப்பாகு' பயன்படுத்துவதும் நற்பலன் தரும்.
சித்த மருத்துவ மூலிகைகளான 'தசமூலம்' எனும் பத்து மூலிகைகளின் வேரும், அமுக்கராகிழங்கும் இதய நோய்களில் உண்டாகும் படபடப்பை குறைக்க உதவும். மருதம்பட்டை எனும் துவர்ப்பு சுவை கொண்ட மூலிகை பல்வேறு இதய நோய்களில் ஆய்வு செய்யப்பட்டு நல்ல பலன் தருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை நாடுவதும் முதுமையில் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு துணை நிற்கும்.
அமுக்கரா கிழங்கு அதிக ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட சித்த மருத்துவ மூலிகை. மன அழுத்தத்தைப் போக்கும் சிறந்த மூலிகை. இது மன அழுத்தம் போக்கி இதயத்தை வன்மைப்படுத்த உதவும். ஆக, அமுக்கராகிழங்கு சூரணத்தை பாலில் கலந்து எடுத்துக்கொள்ள முதுமையில் பல்வேறு நன்மைகளைத் தரும். ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்க உதவும் மற்றுமொரு எளிய மூலிகை 'வல்லாரை கீரை'. எனவே, வல்லாரை சார்ந்த மருந்துகளை எடுத்துக்கொள்வதும் இதயத்திற்கு நல்லது.
ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை சரியாக பராமரிப்பதும், புகைபிடிப்பதை அறவே நிறுத்துவதும், உடல் பருமனைக் குறைப்பதும், சரியான உடற்பயிற்சியும், இதயத்திற்கு இதமான உணவு முறைகளும் முதுமையில் இதயம் காக்கும் எளிய முறைகள். இவற்றை பழகி வருவது பெரும் பொருட்செலவினத்தை தடுத்து ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். சூரிய வணக்கம் செய்வது இதய நோய்களில் இருந்து நம்மை மீட்டு திரும்ப இயல்பு நிலைக்கு கொண்டு வருமென நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறுவதும் சிறப்பு.
பை பாஸ் அறுவை சிகிச்சை, ஆஞ்சியோபிளாஸ்டி, பலூன் பிளாஸ்டி சிகிச்சை ஆகிய இதயம் காக்கும் சிகிச்சை முறைகள் அசுர வளர்ச்சி பெற்ற நவீன அறிவியலுக்கு சில உதாரணங்கள். இவற்றால் இதயத்தின் ஆயுள் அதிகரித்திருப்பது உண்மை தான். இருப்பினும் அதற்கான செலவும், உடல் வருத்தமும், மன அழுத்தமும் முதுமையில் கூடுதல் சுமைகள். எனவே, வருமுன் காக்கும் நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தை நாடுவது, நோய்களால் இதயமும் ஆயுளும் நொறுங்காமல் பாதுகாக்கும் எளிமையான வழிமுறை.
தொடர்புக்கு:
drthillai.mdsiddha@gmail.com