பிரசவக் கோலம் தாங்கிப் பரவசம் தரும் அங்காளம்மன்
- மண்புற்று மாதாவுக்குச் சற்று தள்ளி, கருவறையில், ஆதி மூலவராக, அங்காள பரமேஸ்வரி அம்பாள் திரிசூலத்துடன் காட்சி தருகிறாள்.
- ஆடி மாதத்திலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் புட்லூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம், பக்தர்களால் நிரம்பி வழியும்.
தாயாகிக் கருணை காட்டுபவள் அம்பிகை. குழந்தைகள் நோயுற்றால், இவளே மருத்துவச்சியாகவும் மாறுவாள். இதே தாய், சேயைத் தாங்கிய திருக்கோலத்திலும் எழுந்தருளியிருக்கிறாள். இப்படிப்பட்ட திருக்கோலத்தில்தான், புட்லூர் கர்ப்பவதி அங்காளத்தம்மனாக இவளை தரிசிக்கிறோம்.
சென்னைக்கு அருகே திருவள்ளூர் செல்லும் மார்க்கத்தில் இருக்கிறது புட்லூர். இந்த ஊருக்கு ராமாபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு.
இந்தத் தலத்தில் இருக்கிறது அங்காள பரமேஸ்வரி அம்பிகையின் கோவில். பூங்காவனத்தம்மன் என்றும் அழைக்கப்படுகிற இந்த அம்பிகையை தரிசிப்பதற்காகத் கோவிலுக்குள் நுழையும்போதே, மஞ்சள் குங்கும வாசம் நாசியைத் துளைத்து நாடி நரம்பெல்லாம் நிறைகிறது. கோவிலுக்குள் சென்று, பூங்காவனத்தம்மனை அடைந்தால், இன்னுமொரு இன்ப அதிர்ச்சி. அம்மனின் கோலமே வித்தியாசமாக இருக்கிறது.
சாதாரணமாக, ஆண் தெய்வத் திருமேனிகள் என்றால் சுவாமியின் கோலத்தை மூன்று வகைகளில் தரிசிக்கலாம். நின்ற கோலம், அமர்ந்த கோலம், கிடந்த கோலம் ஆகியவையே இவை. பெருமாள் திருமேனிகளில் இம்மூன்று வகைகளையும் காணலாம்.
பிரதானமாகச் சிவலிங்கத் திருமேனி தவிர, ஒரு சில சிவன் கோவில்களில் கிடந்த கோலச் சிவனாரைக் காணலாம். ஆனால், அம்மன் கோவில்களில், நின்ற திருக்கோல நாயகியையோ அமர்ந்த திருக்கோல நாயகியையோதான் தரிசிக்கக்கூடும். இந்தக் கோவிலில் மட்டுமே அம்மன் கிடந்த கோலத்தில் சேவை சாதிக்கிறாள்... அதுவும், நிறைமாத கர்ப்பிணியாக!
ஆமாம், நிறைமாத கர்ப்பிணி எப்படி ஆயாசத்துடன் படுத்திருப்பாளோ அப்படிப் படுத்திருக்கிறாள். சொல்லப் போனால், பிரசவ காலத்தில், வேதனையுடன், வாய் திறந்து மூச்சு விடுவதுபோலவே மல்லாந்து கிடக்கிறாள். பிரசவ காலம் போல் தோன்றினாலும், பிரசவத்தில் இருக்கும் பெண்ணின் வலியையும் வேதனையையும் தான் வாங்கிக்கொண்டு, 'கவலைப்படாதே, நான் இருக்கிறேன்' என்று ஆறுதல் கூறும் பாங்கில் இருக்கிறது அம்பாளின் திருமுகம்.
உண்மையில் இவள் மண்புற்று மாதா. இவள் எப்படி இங்கே கோவில் கொண்டருளினாள் என்பதைத் தலபுராணம் கூறுகிறது.
சிவபெருமானும் பார்வதியும் ஒருமுறை பூவுலக உலா வந்தார்களாம். அப்போது அம்பாள் கர்ப்பவதியாம். திருவள்ளூர் பகுதியில் வரும்போது, அம்பாளுக்குத் தாகம் எடுக்க, தண்ணீர் கேட்டாள். சுற்றுமுற்றும் பார்த்தால், சற்று எட்டத்தில் இருக்கும் கூவம் நதி கண்ணில் பட்டது. நீர் எடுப்பதற்காக வேக வேகமாகச் சிவனார் சென்றார். நீர் எடுத்துத் திரும்புவதற்குள், காட்டாற்று வெள்ளம் வந்துவிட, சிவனாரால் உடனடியாகத் திரும்ப முடியவில்லை. ஒரு வழியாக வந்து பார்க்கும்போது, மரத்தடி ஒன்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அம்பிகையைப் புற்று மூடியிருந்தது. அடடா என்று கவலையோடு சிவனார் விழிக்க... 'அட, தாண்டவராயரே, காலைத் தூக்கி ஆடத் தெரிகிறது; மனைவிக்கு நீர் கொண்டுவரத் தெரியவில்லையா?' என்று அம்பாள் அசரீரியாகச் சிரித்தாளாம்.
நீர்த் தாகம், காட்டாற்று வெள்ளம், புற்று மண் என்று எல்லாமே தன்னுடைய விளையாட்டு என்று தெரிவித்த அம்பாள், பூவுலகப் பெண்களின் நலத்தைக் காப்பாற்றவே தான் இவ்வாறு கோவில் கொண்டதாகவும் கூறினாள். இதற்காகவே, நிறைமாத கர்ப்பவதியாகவும் காட்சி தருகிறாள். தென்மேற்கில் தலை வைத்து வடகிழக்கில் கால் நீட்டிக் கிடக்கிறாள்.
அம்பிகையின் இந்த ஆசையினாலேயே இந்த ஊருக்கும் புட்லூர் என்னும் பெயர் ஏற்பட்டது. 'புட்டக' என்னும் சொல், தெலுங்கு மொழியில் (குழந்தை) 'பிறப்பு' என்பதைக் காட்டும். புட்டக, புட்டின்னதி போன்ற சொற்களின் வழியிலேயே 'புட்லூர்' என்னும் பெயர் தோன்றியுள்ளது.
மண்புற்று மாதாவுக்குச் சற்று தள்ளி, கருவறையில், ஆதி மூலவராக, அங்காள பரமேஸ்வரி அம்பாள் திரிசூலத்துடன் காட்சி தருகிறாள். இவளுக்கு எலுமிச்சை மாலை சார்த்துவது வெகு சிறப்பு.
முன்னொரு காலத்தில் இப்பகுதி, நிறைய நந்தவனத் தோட்டங்களுடன் மலர்க்காடாக இருந்தது. ஆகவேதான், பூங்காவனம் என்று பெயர் பெற்றது. அம்மனும், இதனாலேயே பூங்காவனத்தம்மன் என்னும் திருநாமம் கொண்டாள்.
இந்தத் தலத்தின் தலமரம், வேம்பு. கோவில் வளாகத்திலிருக்கும் இந்த மரத்தின் அடியிலும் சுயம்புப் புற்று ஒன்று உள்ளது. இங்கும் சரி, பிரதானப் புற்றுப் பகுதியிலும் சரி, சில நேரங்களில் பாம்புகளும், மூதாட்டி வடிவமும் பக்தர்கள் சிலரின் கண்களுக்கு புலப்பட்டுள்ளன. அம்பிகையே இவ்வாறு காட்சியளிக்கிறாள் என்பதுதான் உள்ளூர் நம்பிக்கை.
தாயாகி, செவிலியாகிக் கனிவோடு பாதுகாக்கும் அம்பிகை, தானே கர்ப்பவதியாகிப் பிரசவத்தின் வலியையும் துன்பத்தையும் தாங்கிக் கொள்வதென்பது அம்பாலின் பரம கருணையைக் காட்டுகிறது.
ஆடி மாதத்திலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் புட்லூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம், பக்தர்களால் நிரம்பி வழியும். மண்புற்று மாதாவின் திருவடிகளில் எலுமிச்சம்பழத்தை வைத்து வணங்கிவிட்டு, இவளைச் சுற்றி வந்து புடவை முந்தானையை ஏந்தி நிற்கவேண்டும். எலுமிச்சை உருண்டோடி வந்து புடவை முந்தானையில் விழுந்தால், நினைத்த காரியம் யாவும் நிறைவேறும்.
புற்றுக்குப் பால், அம்பாளுக்குக் குங்கும அர்ச்சனை, சுமங்கலிகளுக்கு மஞ்சள் வெற்றிலை, வேப்பமரக் கிளையில் ஊஞ்சல் கட்டுதல் என்று விதவிதமான நேர்த்திக் கடன்கள். எல்லாவற்றையும் பூங்காவனத்தம்மா நிறைவேற்றி வைக்கிறாள்.
குழந்தையின் நலம் காப்பதற்கு எந்தவிதமான பரிசையோ அன்பளிப்பையோ தாய் நாடமாட்டாள். அதே போன்று, எந்தவிதமான ஆடம்பரத்தையோ ஆர்ப்பாட்டத்தையோ ஏற்காமல், எலுமிச்சம்பழங்களை மட்டுமே இந்தத் தாயும் காணிக்கையாக ஏற்கிறாள்.
தாய்க்குத் தாயாகி, தனிப்பெரும் கருணைத் தெய்வமாகி, அன்புக்கு அன்பாகி, அருளின் செறிவாகி ஆனந்தமும் பாதுகாப்பும் நல்குகிற பூங்காவனத்துப் பரமேஸ்வரியை வணங்குவோம், வளம் பெறுவோம்.
தொடர்புக்கு:-
sesh2525@gmail.com