சிறப்புக் கட்டுரைகள்

ஆன்மிக அமுதம்- பெருமாளும் துளசியும்!

Published On 2022-09-16 04:27 GMT   |   Update On 2022-09-16 04:27 GMT
  • துளசிக்கு திருத்துழாய் என்றும் ஒரு பெயர் உண்டு. துளசியில் கிருஷ்ணத் துளசி, ராமத் துளசி என்றெல்லாம் பல வகைகளும் உண்டு.
  • சத்யபாமா தான் அணிந்திருந்த ஆபரணங்கள் அனைத்தையும் தராசின் மறுதட்டில் வைத்துவிட்டாள். அப்படியும் கிருஷ்ணர் அமர்ந்திருந்த தட்டுத்தான் தாழ்ந்திருந்தது.

முக்கண்ணை உடைய சிவபெருமானுக்கு விருப்பமான இலை மூன்று இலைகளை ஒன்றாகக் கொண்டிருக்கும் வில்வம். பாற்கடலில் பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளுக்கு விருப்பமான இலை ஆன்மிக மணம் கமழும் துளசி.

பச்சைமா மலைபோல் மேனியுடைய பெருமாள், பச்சை வண்ணத் துளசி இலைகளால் அர்ச்சனை செய்தால் பெரும் மகிழ்ச்சி அடைகிறார். பெருமாளைத் துளசியால் அர்ச்சித்து மகிழ்வித்துத் தங்கள் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்கிறார்கள் பெருமாளின் அடியவர்கள்.

பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுவதென்பது எல்லாப் பெருமாள் ஆலயங்களிலும் வழக்கமாக உள்ளது. அப்படிச் சார்த்தப்பட்ட மாலையில் உள்ள துளசி இலைகளையே பிரசாதமாகத் தருகிறார்கள். அதுமட்டுமல்ல, பெருமாள் கோயில்களில் துளசி இலைகளை ஊறவைத்த துளசி தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

பெருமாள் மட்டுமல்ல, பெருமாளுக்கு அர்ச்சிக்கப்படும் துளசியே கூடக் கடவுள் தான். கடவுளாகவே கருதி வழிபடப்படும் தாவரம் என்ற மகத்தான பெருமை துளசிச் செடிக்கு உரியது.

பிருந்தா என்பது துளசியின் இன்னொரு பெயர். துளசி நிறைந்த இடம் பிருந்தாவனம் எனப்படுகிறது. திருமாலின் மனைவிதான் துளசிச் செடியாகக் காட்சிதரும் பிருந்தா தேவி.

வீட்டில் துளசிமாடம் கட்டி, துளசியை அம்மனாகக் கருதி வழிபடுபவர்கள் நிறையப் பேர் உண்டு. வரலட்சுமி விரதத்தில் அம்மன் முகம் வைத்து வழிபடுவதுபோல், துளசி மாடத்திலும் அம்மன் முகத்தைப் பதிய வைத்து வழிபடும் வழக்கமும் உண்டு.

காலை நீராடியதும் மாடத் துளசிக்கு நீர் வார்ப்பதை ஒரு புண்ணியச் செயலாகக் கருதிப் பல பெண்கள் மேற்கொள்கிறார்கள்.

துளசி மாடத்தில் மாடப் பிறைகள் வைத்து அதில் அகல் விளக்கு வைத்து இரவு நேரத்தில் விளக்கேற்றி வைப்பவர்களும் உண்டு. துளசி நம் ஆன்மிகத்தோடு பிரிக்க முடியாமல் இரண்டறக் கலந்துள்ளது.

துளசியை வழிபடுவதற்கென்றே பல தோத்திரங்கள் உள்ளன. அவற்றில் புகழ்பெற்றது 'ஸ்ரீமத் துளசியம்மா திருவே கல்யாணியம்மா' எனத் தொடங்கும் தோத்திரப் பாடல்.

வெள்ளிக் கிழமை தன்னில் விளங்குகின்ற மாதாவே

செவ்வாய்க் கிழமை தன்னில் செழிக்க வந்த செந்திருவே

மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்

தாயாரே உந்தன் தாளடியில் நான் பணிந்தேன்...

மண்ணின்மேல் நட்டு மகிழ்ந்து நல்ல நீரூற்றி

முற்றத்தில் தான் வளர்த்து முத்துப்போல் கோலமிட்டு

பழங்களுடன் தேங்காயும் தாம்பூலம் தட்டில் வைத்து

இப்படியெல்லாம் துளசியை பூஜிக்க வேண்டும் என்கிறது அந்தப் பாடல். அப்படிப் பூஜித்தால் என்னென்ன பலன் கிட்டும் என்பதைத் துளசி அம்மனே சொல்வதாகப் பாடல் மேலும் வளர்கிறது.

'தீவினையைப் போக்கிச் சிறந்த பலன் நானளிப்பேன்

அரும்பிணியை நீக்கி அஷ்ட ஐஸ்வர்யம் நான் அளிப்பேன்

தரித்திரத்தை நீக்கிச் செல்வத்தை நான் கொடுப்பேன்

புத்திரன் இல்லாதவர்க்கு புத்திர பாக்கியம் அளிப்பேன்

கன்னிகைகள் பூஜைசெய்தால் நல்ல கணவரைக் கூட்டுவிப்பேன் ...'

என வாக்குறுதி தருகிறாள் துளசி மாதா.

தட்சிணை தரும்போதும் தானம் தரும்போதும் கூடவே துளசி தளத்தையும் உடன்வைத்து நீர்வார்த்து தானம் அளிக்கப்படுகிறது.

துளசி அதன் உடனிருக்கும் எந்தப் பொருளின் மதிப்பையும், (அது காசாக இருந்தாலும் சரி, வேறு எதுவாக இருந்தாலும் சரி) பல மடங்கு கூட்டுகிறது என்பது நம்பிக்கை. தன்னைச் சேர்ந்த எதையும் தோஷங்களை நீக்கிப் புனிதப்படுத்திவிடும் ஆற்றலுடையது துளசி.

துளசிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. பல மருந்துகளில் துளசி சேர்க்கப்படுகிறது.

இன்று பலரிடம் நினைவுப் பழுது என்பது ஒரு குறைபாடாகப் பரவி வருகிறது. ஞாபக சக்தியை வளர்ப்பதில் துளசி இலை சக்தி வாய்ந்தது.

நாள்தோறும் தண்ணீரில் சில துளசி இலைகளை இட்டு அந்தத் தண்ணீரைத் தொடர்ந்து பருகி வந்தால் ஞாபக சக்தி வளரும். ஆனால் துளசி தீர்த்தத்தை அருந்தவேண்டும் என்பதை மட்டும் மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.

துளசி இலைகளை இரவு நேரத்தில் பறிக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. புனித நாட்களிலும் துளசியைப் பறிக்கும் வழக்கமில்லை. துளசியைப் பறிக்கும்போது இறைவன் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டே பறிப்பது நல்லது என்கிறார்கள் ஆன்றோர்.

துளசிச் செடிகள் செழித்து வளர்ந்துள்ள பகுதியைத் துளசி வனம் என்கிறார்கள். அத்தகையதொரு துளசி வனத்தில்தான் பெரியாழ்வார் புனிதமே வடிவான ஆண்டாளை ஒரு துளசிச் செடியின் கீழ் சின்னஞ்சிறு குழந்தையாகக் கண்டெடுத்தார்.

சீதாப்பிராட்டி ஒரு பெட்டிக்குள் குழந்தையாக மண்ணுக்குள் கண்டெடுக்கப்பட்டாள். ஜனகர் உழுத ஏர் முனையில் மண்ணுக்கு உள்ளிருந்து தோன்றிய நிலமகள் ஜானகி என்கிற சீதை. பெரியாழ்வார் மலர் கொய்யும்போது துளசிச் செடியின் கீழ் மண்ணுக்கு மேலே தோன்றிய குலமகள் ஆண்டாள் என்கிற கோதை.

துளசி மூலம் பெருமாளைப் பூஜை செய்ததால்தான் சீதாதேவிக்கு ராமபிரான் கணவனாகக் கிடைத்தார் என்று சொல்கிறது துளசிதாசர் எழுதிய ராமசரித மானஸ் என்கிற துளசி ராமாயணம். அதை எழுதியவரே துளசியின் தாசரல்லவா!

கன்னிப் பெண்கள் துளசி பூஜை செய்தால் அவர்களுக்கு நல்ல குணங்கள் உடைய கணவன் கிடைப்பான் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை.

இந்த நம்பிக்கைக்கு ஆதாரம் சீதாதேவி செய்துவந்த துளசி பூஜைதான். சீதைக்குக் கிடைத்த கணவரை விட உயர்ந்த நற்குணங்கள் படைத்த இன்னொருவர் யார் உண்டு?

துளசிக்கு திருத்துழாய் என்றும் ஒரு பெயர் உண்டு. துளசியில் கிருஷ்ணத் துளசி, ராமத் துளசி என்றெல்லாம் பல வகைகளும் உண்டு.

துளசியின் தண்டைச் செதுக்கி துளசி மணிமாலைகள் செய்கிறார்கள். கிருஷ்ண பக்தர்கள் அத்தகைய துளசி மணிமாலைகளை விருப்பத்துடன் அணிந்து மகிழ்கிறார்கள். துளசியின் அருள் எப்போதும் தங்கள் நெஞ்சோடு இருக்கும் ஆனந்தத்தை அவர்கள் அடைகிறார்கள்.

* கிருஷ்ணரின் மனைவியரான ருக்மணி சத்யபாமா இருவருக்கும் தங்கள் கணவரான கிருஷ்ணர் மேல் அளவற்ற காதல் உண்டு. இருவருமே தங்களின் எல்லாப் பிறவிகளிலும் கிருஷ்ணரே தங்களுக்குக் கணவனாக வேண்டும் என விரும்பினார்கள்.

ஒருநாள் நாரத மகரிஷி சத்யபாமாவைச் சந்தித்தார். நாரதர் முக்காலமும் உணர்ந்த முனிவர் பெருமான் ஆயிற்றே? அவரிடம் எக்காலத்திலும் கிருஷ்ணரே தனக்குக் கணவராக வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என ஆர்வத்தோடு வினவினாள் சத்யபாமா.

'கிருஷ்ணரின் எடைக்குச் சமமான எடையுள்ள பொருளை தானமாக வழங்கினால் போதும், அந்த தானத்தின் பலனாக எந்தப் பிறவியிலும் கிருஷ்ணரையே கணவராக அடைந்துவிடலாம்' என உபாயம் சொன்னார் நாரதர்.

ஒரு பெரிய தராசைக் கொண்டுவருமாறு பணியாட்களை ஏவினாள் சத்யபாமா. தராசு கொண்டுவரப்பட்டது. கிருஷ்ணரை அழைத்தாள். தராசின் ஒரு தட்டில் அவரை அமருமாறு வேண்டினாள். கிருஷ்ணரின் எடைக்கு எடை பொன்னும் பொருளும் தானமாக அளிக்க முடிவு செய்தாள்.

கிருஷ்ணர் முகத்தில் ஒரு புன்முறுவல். அவர் தன் லீலையை நிகழ்த்த முடிவு செய்தார். பொன்னும் பொருளும் முக்கியமல்ல, பக்தி மட்டுமே முக்கியம் என்பதைத் தன் லீலை மூலம் நிறுவ அவர் முடிவெடுத்தார்.

சத்யபாமா தான் அணிந்திருந்த ஆபரணங்கள் அனைத்தையும் தராசின் மறுதட்டில் வைத்துவிட்டாள். அப்படியும் கிருஷ்ணர் அமர்ந்திருந்த தட்டுத்தான் தாழ்ந்திருந்தது.

யோசித்த சத்யபாமா தன் அரண்மனைக்கு உள்ளே சென்று, தான் அதுவரை சேகரித்து வைத்திருந்த தங்கம் வெள்ளி முதலிய அனைத்துப் பொருட்களையும் கொண்டுவந்து தராசின் மறுதட்டில் வைத்தாள்.

கிருஷ்ணரே எல்லாப் பிறவியிலும் கணவராகக் கிட்டுவாரானால் அந்தப் பெரும் பாக்கியத்தின்முன் இந்தச் செல்வமெல்லாம் எம்மாத்திரம் என்பது சத்தியபாமாவின் எண்ணம்.

எண்ணமெல்லாம் சரிதான். ஆனால் அவள் செல்வங்களைத் தாங்கியிருந்த தட்டு தாழவே இல்லை. கிருஷ்ணர் தட்டுத்தான் கீழிறங்கி எடை கூடுதலாக இருந்தது. கிருஷ்ணர் சத்யபாமாவின் பக்தியை அல்லவா எடைபோடுகிறார்!

இதென்ன சோதனை! எத்தனை செல்வத்தைக் கொண்டுவைத்தும் செல்வம் வைத்த தட்டு தாழவே இல்லையே! சத்யபாமாவுக்கு முத்து முத்தாக உடல் வியர்த்தது. இனி அவள் கொண்டுவந்து வைக்கக்கூடிய செல்வம் அவளிடம் ஒன்றுமே இல்லை.

அப்போது அங்கு வந்தாள் ருக்மணி தேவி. நிலைமையின் சங்கடத்தை உணர்ந்த அவள் தான் வழிபடும் துளசிச் செடியிடம் உதவி நாடினாள். பக்தியோடு ஒரே ஒரு துளசி இலையைக் கிருஷ்ண நாமத்தைச் சொல்லியவாறு பறித்தாள்.

பின் தராசின் மறுதட்டில் இருந்த அத்தனை செல்வத்தையும் எடுத்துவிட்டு அவற்றிற்கு பதிலாக அந்த ஒரே ஒரு துளசி இலையை அங்கு வைத்தாள். 'கிருஷ்ணா! என் உள்ளார்ந்த பக்தியை எடைபோட்டுப் பார்த்து அதற்கு மதிப்பளிப்பாய். இந்த துளசி இலைக்கு சமமாக உன் எடையை மாற்றிக் கொள்வாய்!' என உளமாரப் பிரார்த்தித்தாள்.

என்ன ஆச்சரியம்! இப்போது இரண்டு தட்டுகளும் சமமாக நின்றன! அந்த ஒரே ஒரு துளசி இலைக்கு சமமாக ஸ்ரீகிருஷ்ணர் தன் எடையை மாற்றிக் கொண்டு தன்னை லேசாக்கிக் கொண்டார். ருக்மிணி, சத்யபாமா, நாரதர் ஆகிய மூவரின் கரங்களும் பக்தியுடன் கிருஷ்ணரை வணங்கின என்கிறது பாகவதக் கதை.

புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விருப்பமான துளசி இலை மூலம் பெருமாளை அர்ச்சனை செய்து அவர் கருணையால் நாம் அருட்செல்வம் பொருட்செல்வம் அனைத்தும் பெற்று மகிழ்வோம்.

தொடர்புக்கு,

thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News