நலம் தரும் அன்னாசி பூவும், பிரியாணி இலையும்
- இனிப்பு சுவையும் விறுவிறுப்பு தன்மையும் கொண்ட அன்னாசி பூ வெப்ப வீரியத்தை உடையது என்கிறது சித்த மருத்துவம்.
- பிரியாணி இலை என்ற மூலிகைத் தாவரத்தின் பிறப்பிடம் தெற்கு ஆசியா.
உணவில் முதன் முதலில் அழகிற்காக பயன்படுத்தப்பட்ட அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கு 'அன்னாசி பூ' தான். ஆனால், இது தன்னுள் பலப்பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது. இது பார்ப்பதற்கு நட்சத்திர போன்ற வடிவம் கொண்டு இருப்பதாலும், இதன் மருத்துவத் தன்மையானது மற்றொரு அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கான சோம்பின் குணத்தை ஒத்து இருப்பதால் இதனை 'நட்சத்திர சோம்பு' என்றும் அழைப்பதுண்டு.
அன்னாசி பூ எனும் மூலிகைத் தாவரமானது சீனா மற்றும் வியட்நாம் நாடுகளை பூர்வீகமாகக் கொண்டது. கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாக வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சீன மருத்துவத்தில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் உணவுப் பொருட்களிலும், மருந்துப் பொருட்களிலும் உபயோகப்படுத்தப்படுகின்றது.
ஜப்பானியர்களால் கோவில் மற்றும் கல்லறைகளில் அன்னாசி பூ மூலிகைத் தாவரம் மணத்திற்காக வளர்க்கப்பட்டதாகவும் தெரிகிறது. பதினேழாம் நூற்றாண்டில், இந்த மூலிகையானது ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் உணவுத் துறையில் ஜாம் தயாரிப்பிலும், உணவுப் பொருட்கள் நறுமணத்திலும் பயன்படுத்தப்பட்டது. கூடுதலாக சோம்பின் சுவை கொண்ட மதுபானங்கள் தயாரிப்பில் அன்னாசி பூ பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. பாரசீக மற்றும் இந்திய முகலாய பிரியாணி உணவுகளில் அதிகம் அன்னாசி பூ பயன்படுத்தப்படுவதாக உலக அளவில் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்னாசி பூவானது பல்வேறு நாடுகளில் தோல் சார்ந்த அழற்சி (வீக்கம்), மூட்டு வலி, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி ஆகிய நோய்நிலைகளில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
அன்னாசி பூவில் சர்க்கரைச் சத்தும், புரதச்சத்தும், கொழுப்புச் சத்தும், நார்சத்தும் இருப்பதாக நவீன அறிவியல் தெரிவிக்கின்றது. அத்துடன் கூடுதலாக நோய் எதிர்ப்புச்சக்தி தரும் விட்டமின்களாக அறியப்படும் வைட்டமின்- 'ஏ' மற்றும் வைட்டமின்- 'சி' ஆகியவற்றையும் கொண்டுள்ளது. மேலும் உடலுக்கு நன்மை பயக்கும் சோடியம், கால்சியம், இரும்புச் சத்து, செம்புச் சத்து, துத்தநாகச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம் ஆகிய தாது உப்புகளின் ஆதாரமாகவும் உள்ளது. ஆக, நாம் உண்ணும் பிரியாணியில் அன்னாசி பூவை நம் முன்னோர்கள் ருசிக்காக மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் திட்டமிட்டு சேர்த்துள்ளது இதில் வெளிப்படை.
அன்னாசி பூவின் நறுமணத்திற்கு காரணம் அதில் உள்ள அத்தியாவசிய எண்ணெய் தான். புதிய பழங்களில் 2.5 - 3.5 சதவீதம் நறுமண எண்ணெயும் மற்றும் உலர்ந்த அன்னாசி பூவில் 8-9 சதவீதம் நறுமண எண்ணெயும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தியாவசிய சத்துகளைத் தவிர லிக்னன்கள், இயற்கை நிறமிகள் (பிளாவனாய்டுகள்), பால்மிடிக் அமிலம் போன்றவையும் அன்னாசி பூவில் உள்ளன.
இனிப்பு சுவையும் விறுவிறுப்பு தன்மையும் கொண்ட அன்னாசி பூ வெப்ப வீரியத்தை உடையது என்கிறது சித்த மருத்துவம். அன்னாசி பூ என்பது அந்த தாவரத்தின் நட்சத்திர வடிவ மருத்துவ குணமுடைய பகுதி. இதனால் உணவு செரியாமை, மந்தம், புளியேப்பம் ஆகிய குறிகுணங்கள் நீங்கும் என்றும் சித்த மருத்துவம் கூறுகின்றது.
அன்னாசி பூவைப் பொடித்து அரை கிராம் முதல் ஒரு கிராம் வரை ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை எடுத்துக்கொள்ள அசீரண கோளாறுகளுக்கு நற்பலன் தரும். அவ்வப்போது எடுத்துக்கொள்ள நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்டும். கிருமிகளைக் கொல்லும். சுவாச மண்டலத்தில் தங்கிய கோழையை அகற்றும் தன்மையும் இதற்குண்டு.
உணவில் அன்னாசி பூவை சேர்ப்பது குடல் சார்ந்த உபாதைகளுக்கு மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு நன்மைகளை அள்ளித்தருவதாக உள்ளது. சுவாச மண்டலம் சார்ந்த அடைப்புக்கு அன்னாசி பூவினை பொடியாக்கி உள்ளிழுக்கும் பழக்கம் பாரம்பரியமாக பல நாடுகளில் இருந்துள்ளது.
குடல்வாயு மற்றும் வலிக்கு தீர்வாக அன்னாசிபூ தேநீர் பயன்படுத்தப்படுகிறது. உணவுக்குப் பிறகு அன்னாசி பூவினை மென்று சாப்பிட்டால் செரிமானத்தை மேம்படுத்தும். வயிறு உப்பிசம், அடிக்கடி ஏப்பம் ஆகிய வயிறு தொடர்பான நோய்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
மேலும், இது மூச்சுக்குழாய் அழற்சி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. மூலிகை மருத்துவ தேநீர், மற்றும் இருமல் மருந்து கலவைகளுக்கு அன்னாசி பூ ஒரு பொதுவான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது பாரம்பரியமாக வாத நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுவதாகவும் குறிப்புகள் உள்ளன. இதனைக் கொண்டு செய்யப்படும் தேநீர், இதயம், மூளை, கல்லீரல் மற்றும் நுரையீரல் போன்ற உடல் உறுப்புகள் மற்றும் சுரப்பிகளை பலப்படுத்தி பல்வேறு நன்மைகளை அளிக்கக் கூடியதாக உள்ளது.
அன்னாசி பூவானது புற்றுநோய் தடுப்பு மற்றும் வைரஸ் தடுப்பு செய்கைகளை உடையது குறிப்பிடத்தக்கது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது டிரான்ஸ்- அனீதோல் என்கிற வேதிப்பொருள் தான். இதன் நறுமண எண்ணெய் ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் ஒன்று கூடுவதை தடுப்பதாக உள்ளதால், மாரடைப்பு வரவிடாமல் தடுக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு.
கடந்த நூற்றாண்டில் பல மனித உயிர்களை கொன்று குவித்த தொற்றுக்கிருமிக்கு இந்த அன்னாசிப்பூ தான் தீர்வு காண உதவியது என்கிற வரலாறு பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. 1918-ம் ஆண்டில் பரவிய ஸ்பானிஸ் ப்ளூ எனும் இன்புளுயன்சா காய்ச்சல், வைரஸ் கிருமிகளால் பரவுவது பலரும் அறிந்த ஒன்று தான். ஆனால், அத்தகைய புளூ காய்ச்சலுக்கு மருந்து தயாரித்தலில் முன்னோடி வேதிமூலக்கூறாக நின்றது அன்னாசி பூவில் இருந்து பிரிக்கப்பட்ட வேதிப்பொருள் தான்.
அன்னாசி பூவில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட 'ஷிகிமிக் அமிலம்' எனும் வேதி மூலக்கூறு தான் 'டாமிபுளூ' என்ற புளூ வைரஸை கொல்லும் இக்கால மாத்திரைக்கு அடிப்படை. நாம் உணவில் சேர்க்கும் அன்னாசி பூவிற்கு கிருமிக் கொல்லி தன்மை உண்டென்பது, இதில் உள்ளங்கை நெல்லிக்கனி போல் அறியக்கிடக்கின்றது.
அன்னாசி பூவின் மணத்திற்கும் மருத்துவ குணத்திற்கும் காரணம் அதில் உள்ள மற்றொரு வேதிப்பொருள் அனீதோல் என்கிறது நவீன அறிவியல். இந்த அனீதோல் சதகுப்பை எனும் மற்றொரு மூலிகையில் முதன்மை சரக்காக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த அனீதோல் வேதிக்கூறு தான் அன்னாசிபூவின் பல்வேறு கிருமிகளைக் கொல்லும் தன்மைக்கு முக்கிய காரணகர்த்தா.
மேலும், அன்னாசி பூவானது ஹெர்பஸ் வைரஸ்-1 மற்றும் 2 ஆகியவற்றின் கட்டமைப்பை சிதைப்பதன் மூலம் வைரஸ் கிருமியின் வீரியத்தைக் குறைப்பதாக ஆய்வுக்கூட சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. கூடுதல் சிறப்பு என்னவெனில், மேற்கூறிய வைரஸ்களுக்கு பயன்படுத்தப்படும் 'ஏசைக்ளோவிர்' மருந்தைக் காட்டிலும் நல்ல பலன் தருவதாக ஆய்வு முடிவுகள் கூறுவது தான்.
அன்னாசி பூவிற்கு துவர்ப்பி செய்கையும், வீக்கத்தைக் குறைக்கும் செய்கையும், பாக்டீரியாக் கிருமிகளை கொல்லும் செய்கையும் இருப்பதால் அதனைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாய் கொப்பளிக்கும் திரவங்கள் சந்தையில் கிடைக்கும் மற்றவற்றை விட, நல்ல பலன் தருவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மூலிகை சார்ந்த பல் பொடிகளிலும், பற்பசைகளிலும் அன்னாசி பூ முக்கிய இடம் பிடிப்பது இதனால் தான்.
அடுத்ததாக பிரியாணி என்கிற மனம் மயக்கும் மணம் உடைய உணவில், பயன்படுத்தப்படும் மற்றொரு கடைச்சரக்கு 'பிரியாணி இலைகள்' தான். 'பே இலைகள்' என்று அறியப்படும் இவை, பிரியாணி உணவில் மட்டும் முக்கியத்துவம் பெறுவதால் 'பிரியாணி இலைகள்' என்ற பெயரையே பெற்றதாக அறியப்படுகின்றது.
பிரியாணி இலை என்ற மூலிகைத் தாவரத்தின் பிறப்பிடம் தெற்கு ஆசியா. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவியதாக தெரிகிறது. பிரியாணி இலைகள் நம் நாட்டில் மட்டுமல்லாது, பாரம்பரியமாக பல நாடுகளிலும் உணவில் அதிகம் பயன்படுத்தப்படும் சிறப்புடையது.
பிரியாணி இலைகள் கசப்பு சுவையுடையன. இதில் பிளவனாய்டுகள், டானின்கள், யூஜெனால், சிட்ரிக் அமிலம், ஸ்டீராய்டுகள், அல்கலாய்டுகள் போன்ற மருத்துவ குணம் தரும் வேதிப்பொருட்கள் பல உள்ளன. மேலும் இவற்றில் இரும்புச் சத்தும், கால்சியம் சத்தும், சிறிய அளவு பொட்டாசியம் சத்தும், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவையும் உள்ளது. யூஜெனால் மற்றும் எலிமிஸின் ஆகிய வேதிப்பொருட்கள் அதன் தனித்துவ மணத்திற்கு காரணம் என்கிறது அறிவியல்.
பாரம்பரியமாக பிரியாணி இலையானது வாதநோய், சுளுக்கு, செரியாமை போன்ற பல நோய்களுக்கு நன்மை அளிக்கும் மூலிகை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. நீரிழிவு மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு சிகிச்சையளிக்க இந்த இலைகளை பயன்படுத்தப்படலாம் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பிரியாணி இலைகள் இருமல், சளி, காய்ச்சல், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு ஆகிய நோய்நிலைகளில் உதவுவதாகவும் உள்ளது. இது ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைப்பதாகவும், மன அழுத்தத்தைப் போக்குவதாகவும் இருக்கின்றது. மேலும் இலைகள் அதிக இயற்கை நிறமிகளைக் கொண்டுள்ளதால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உதவக்கூடும் என்கின்றன ஆய்வுகள். வைரஸ் போன்ற கிருமிகளைக் கொல்லும் தன்மையும், நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும் தன்மையும் கூட இதற்கு உள்ளது.
அமெரிக்காவில் பே இலைகளை கொண்டு சர்க்கரை நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இதனை பொடித்து 1 கிராம் முதல் 3 கிராம் வரை எடுத்துக்கொள்ள சர்க்கரை அளவு கணிசமாக குறைவதை முதல் கட்ட ஆய்வுகள் உறுதி செய்கின்றன. அத்துடன், இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவு அதிகரிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. இதன் மூலம் இலைகள், இதயத்திற்கு நன்மை பயப்பதாக உள்ளது. இதன் இலைகள் மூட்டு வீக்கத்தைக் குறைப்பதாக எலிகளில் நடத்திய சோதனை முடிவுகளும் தெரிவிக்கின்றன.
நட்சத்திர வடிவத்தில் இளம் கருஞ்சிவப்பு நிறத்திலான அன்னாசி பூ நாம் அதிகம் பயன்படுத்த மறந்த அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கு. பிரியாணி இலைகளும் நம்முடன் பயணித்து வரும், நமக்கு பழக்கப்பட்ட மிகச்சிறந்த நலமூட்டி கடைச்சரக்கு. பல்வேறு மருத்துவ குணமிக்க இவற்றை சமையலில் பிரியாணி என்கிற ஒற்றை உணவுவகையில் மட்டும் பயன்படுத்தாமல் அன்றாடம் கையாள துவங்கினால் ஆரோக்கியம் கைகூடும். இவைகள் நம் நலவாழ்விற்கு கிடைத்த நற்பேறுகள்.
தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com