null
பெரியார் போற்றிய பெருந்தலைவர் காமராஜர்... முனைவர் கவிஞர் இரவிபாரதி
- தந்தை பெரியாரும், பெருந்தலைவர் காமராஜரும், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட மாபெரும் தலைவர்கள்.
- காமராஜர் ஆட்சியை வரவேற்று ஒரு பெரிய தலையங்கத்தை எழுதினார் பெரியார்.
தந்தை பெரியாரும், பெருந்தலைவர் காமராஜரும், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட மாபெரும் தலைவர்கள். நேரிலே இருவரும் அதிகமாகச் சந்தித்துக் கொண்டதில்லை. கட்சிக் கொள்கைகளில் கருத்து வேறுபாடு இருந்தாலும், அடிப்படைக் கொள்கைகளில் ஒரே கருத்துடையவர்கள். அடித்தட்டு மக்களை, சமுதாயத்தில் உயரத்திற்கு கொண்டு வருவதற்காக உழைத்தவர்கள். தமிழினத்தின் உயர்வுக்காக பாடுபட்டவர்கள்.
1936 வரை தந்தை பெரியார், காங்கிரஸ் கட்சியிலே தான் இருந்தார். தலைவர், செயலாளர் என்று பல பொறுப்புகளிலும் சிறப்பாகப் பணியாற்றினார். காந்தியடிகளின் கொள்கையினை ஏற்று, மதுவிற்கு எதிராகப் பிரசாரம் செய்ததோடு தனது தோட்டத்திலே இருந்த 500 தென்னை மரங்களில் இருந்து "கள்" இறக்குவதைத் தடுத்து, அவற்றை அடியோடு வெட்டிச் சாய்த்தவர்தான் பெரியார். அது மட்டுமல்ல, கதர்த் துணிகளை தனது தலைமையிலே சுமந்து கொண்டு வீதி வீதியாக விற்ற பெருமையும் பெரியாருக்கு உண்டு.
நமது கொள்கைக்கும் காங்கிரசுக்கும் இனிமேல் ஒத்துவராது என்று சொல்லி 1937-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி வெளியே வந்துவிட்டார் பெரியார். காங்கிரசிலே இருந்தபோது சாத்தூரில் நடைபெற்ற தாலுகா காங்கிரஸ் கமிட்டி மாநாட்டிலே பெரியார் கலந்து கொண்டபோது காமராஜர் அதிலே ஒரு தொண்டராக கலந்து கொண்டார். அப்போது இருவருக்கும் இடையே எவ்வித அறிமுகமும் இல்லை. அதே போன்று கேரளாவிலே, வைக்கம் என்ற ஊரிலே உள்ள ஒரு தெருவிலே தாழ்த்தப்பட்டோர் நுழையக் கூடாதென்ற நிலை இருந்தபோது, பெரியார் தலைமையிலேதான் ஒரு மிகப்பெரிய போராட்டமே அங்கு நடந்தது. அப்போது அங்கிருந்த தனது தாய் மாமா கடையிலேதான் காமராஜர் பணியாற்றிக் கொண்டிருந்தார். பெரியார் நடத்திய போராட்டத்திலும் ஒரு பார்வையாளராக காமராஜர் கலந்து கொண்டார். அப்போதும் இருவருக்கும் இடையே எந்த உறவும் நட்பும் இல்லை என்ற நிலைதான் இருந்தது.
ராஜாஜி முதல்-அமைச்சராக இருந்தபோது, அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை கடுமையாக எதிர்த்தவர்களில் காமராஜரும் ஒருவர். அப்போது காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தார். காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்து கொண்டு, ராஜாஜியை எதிர்க்கிற தைரியம் ஒருவருக்கு இருக்கிறதென்றால் அவர் நிச்சயம் சமநோக்கு உடையவராகத்தான் இருப்பார் என்பது காமராஜரைப் பற்றிய பெரியாரின் கணிப்பு அது.
ராஜாஜி பதவியை விட்டு விலகினால் அந்த இடத்திற்கு முதல்-அமைச்சராக யார் வருவது? என்ற விவாதம் நடந்து கொண்டிருந்த நேரம் அது. அப்போது பெரிய தலைவராக விளங்கிய வரதராஜுலு நாயுடு போன்ற தலைவர்கள் எல்லோரும், காமராஜர், தான் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்று வற்புறுத்திய வண்ணம் இருந்தனர். ஆனால் பதவி ஆசை எதுவும் இல்லாத காமராஜர். தான் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்பதிலே எவ்வித ஆர்வமும் காட்டவில்லை. குலக்கல்வித் திட்டத்தை வாபஸ் வாங்கிக் கொண்டு ராஜாஜியே முதல்-அமைச்சராக நீடிக்கட்டும் என்ற நிலைப்பாட்டிலேதான் காமராஜர் இருந்தார். ராஜாஜியை நேரில் சந்தித்து வற்புறுத்தவும் செய்தார். அன்றைக்கு இருந்த உண்மை நிலை அதுதான். ஆனால் காமராஜரின் நெருங்கிய நண்பர்கள் எல்லாம் காமராஜர் முதல்-அமைச்சராக வரவேண்டும் என வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு காமராஜர் முதல்-அமைச்சராக வந்தால்தான், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் விடிவு காலம் உண்டு என்பதை உணர்ந்திருந்த தந்தை பெரியார் நீங்கள்தான் முதல்-அமைச்சராக வரவேண்டும் என காமராஜரிடம், மிகவும் வேண்டிக் கொண்டதோடு, வற்புறுத்தவும் செய்தார். இறுதியில் இதைச் செய், அதைச் செய் என்று கட்சிக்காரர்கள் எனக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கக்கூடாது என்ற நிபந்தனை விதித்து அதற்குப் பிறகுதான் முதல்-அமைச்சர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார் காமராஜர் என்பதுதான் வரலாறு. ஆக காமராஜர் முதல்-அமைச்சராக வருவதற்கு பெரியார் ஓர் உந்து சக்தியாக இருந்தார் என்பது மறுக்க முடியாத, மறைக்க முடியாத வரலாறாகும்.
1937-ல் இருந்து காங்கிரசைக் கடுமையாக எதிர்த்த பெரியார், 1952-லே நடந்த பொதுத்தேர்தலிலே, காங்கிரசை எதிர்த்து தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் தங்களுக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, கம்யூனிஸ்டுகளை வெற்றி பெறச் செய்தார் பெரியார். காமராஜர் முதல்-அமைச்சரான பிறகு தனது நிலைப்பாட்டினை முற்றிலும் மாற்றிக் கொண்டு, காங்கிரசை கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தார் என்பதுதான் வரலாறு.
காமராஜர் பதவி ஏற்ற மகிழ்ச்சியில் அதாவது 15.4.1954 அன்று விடுதலை நாளேட்டில், காமராஜர் ஆட்சியை வரவேற்று ஒரு பெரிய தலையங்கத்தை எழுதினார் பெரியார். அதை அப்படியே தருவது என்பது காமராஜரை எப்படிப் பெரியார் புரிந்து வைத்திருந்தார் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது என்பதாலும் இந்த வரலாற்றினை வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகவும், ஒருவரிகூட மாற்றாமல் அப்படியே தருகிறேன்.
"சாதியை ஒழிப்பதற்கு இது நல்ல தருணம். காமராஜர் அவர்கள் முதல்-அமைச்சராகி இருக்கிறார். இவருக்கு சாதியை ஒழிப்பதில் தனி அக்கறை உண்டு என்பது நமக்குத் தெரியும். இதுபற்றி பல தடவை பேசியிருக்கிறார்" என்று தனது தலையங்கத்தை தொடங்குகிறார் பெரியார்.
"சுயராஜ்யம் வந்த பிறகு சாதி வெறி பல மடங்கு வளர்ந்து விட்டதென பல தடவை கூறியிருக்கிறார். இந்த சாதி வெறியை ஒழிப்பதற்கு எது வேண்டுமானாலும் செய்யத் தயார் எனவும் பலதடவை தெரிவித்திருக்கிறார். சாதி மாநாடுகளில் இவர் கலந்து கொள்வதில்லை என்பது நம் நினைவு....
இப்பேர்ப்பட்டவர், இனிச் செய்கை மூலம் தம் லட்சியத்தைப் பெற வேண்டும். இதற்கான கால்கோள் விழாவை நடத்திவிட்டார் என்றே நாம் கருதுகிறோம். ஒரு குறிப்பிட்ட சாதிக்காகவே தோன்றிய இரண்டு அரசியல் கட்சிகளை (உழைப்பாளர் கட்சி மற்றும் காமன் வீல் கட்சி) தனது சாமர்த்தியத்தால் கலைக்கும்படி செய்து காங்கிரசோடு இணக்கமாக இணைத்துக் கொண்டார். தனி சாதிக்காக ஒரு அரசியல் கட்சி என்ற அவமானத்தை போக்கிவிட்ட வகையில் இக்காரியம் சமுதாயத்துறையில் வரவேற்கப்படக் கூடிய ஒன்று என்பதே நம் கருத்து.
சாதி ஒழிப்பு உணர்ச்சியை மக்களிடையே பரப்புவதற்கு இது நல்ல தருணம். சுயமரியாதைக் காரர்களுக்கும் இது நல்ல தருணம். சட்டதிட்டங்கள் மூலம் முதல்-அமைச்சர் இக்காரியத்தை சாதிக்கலாம். வழக்கமான பிரசாரத்தின் மூலம் சுயமரியாதைக்காரர்கள் இவருக்கு உதவியாக இருக்கலாம். புத்தர்கள், சித்தர்கள் பிரம்ம சமாஜ் தலைவர்கள், சமுதாய சீர்திருத்தவாதிகள் ஆகிய பலரால் சாதிக்க முடியாத ஒரு காரியத்தை ஒரு முதல்-அமைச்சர் வெற்றிகரமாக செய்து முடித்துவிட்டார் என்ற நிலை ஏற்பட்டால் அது இந்திய வரலாற்றிலேயே இடம் பெறக்கூடிய சாதனை அல்லவா இது"
என்று காமராஜருக்கு தந்தை பெரியார் புகழாரம் சூட்டி எழுதிய சிறப்பான தலையங்கம் இது. அன்றைய அரசியல் சூழலில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது என்றே சொல்லலாம்.
ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து திராவிடக் கழகத்தைச் சேர்ந்த 600 பேர் பாத யாத்திரை மேற்கொண்டு சென்னையை நோக்கி வந்தனர். இவர்கள் வெற்றி கிடைக்கும் என்று வந்தவர்கள் அல்ல. சிறைச்சாலை போவது நிச்சயம் என்று வந்தவர்கள். முதல்-அமைச்சர் காமராஜரைப் பார்த்து தங்கள் கோரிக்கை மனுவை கொடுத்த போது, அனைவருக்கும் இருக்கை கொடுத்து அமர வைத்து, "ஒன்றும் கவலைப்படாதீங்க நானும் உங்க ஆளுதான். நாளைக்கே உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வரும்" என்று அவர்களை அனுப்பி வைத்தார் காமராஜர். ஆச்சரியத்தில் திராவிடக் கழகத்தினர் உறைந்து போய்விட்டார்கள்.
மறுநாளே ராஜாஜி கொண்டு வந்த "குலக்கல்வி திட்டம் ரத்து" என்று அரசாணை பிறப்பித்துவிட்டார் காமராஜர். பத்திரிகையில் இந்தச் செய்தியைப் பார்த்த தந்தை பெரியார் காமராஜர் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்று முதன் முதலாகச் செய்த சாதனை இது. நம் மக்களுக்குச் செய்த பேருதவியாகும். இது மட்டும் நடக்கவில்லை என்றால் நம்மில் பல பேர் சுடப்பட்டு இருப்பார்கள். சிலர் தூக்கு மேடை ஏற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் நடைபெறாமல் காமராஜர் தடுத்துவிட்டார் என்று பெரியார் பாராட்டி மகிழ்ந்தார்.
காமராஜருக்கும், எனக்கும் மிகப்பெரிய நெருக்கம் இருக்கிறதென்றும் தினம் பேசிக் கொள்கிறோம். அடிக்கடி சந்தித்துக் கொள்கிறோம் என எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல. அவர் முதல்-அமைச்சராக வருவதற்கு முன்பு இரண்டு மூன்று வருடங்களாகத்தான் அவரைப் பற்றி ஓரளவு தெரியும். அரக்கோணத்தில் ஒரு தடவை பார்த்தேன். மேயர் வீட்டில் ஒரு தடவை பார்த்தேன். எனது பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்ல வந்த போது ஒருமுறை பார்த்தேன். அவ்வளவுதான்.
அவரும் என்னைப் போலவே மொட்டை மரம். எனக்காவது திருமணம் உண்டு. அவருக்கு அதுவும் இல்லை. பெற்றெடுத்த தாயார் உண்டு. ஆனால் அவர் பெயரில் சொத்து சுகம் எதுவும் இல்லை என்றெல்லாம் காமராஜரின் தியாக வாழ்க்கை பற்றிக் குறிப்பிட்டு கூட்டங்களில் பேசினார் தந்தை பெரியார்.
இப்படிப்பட்ட ஒருவர்தான் நமக்கு வேண்டும். 1937-ல் இருந்து 1954 வரை (அதாவது முதல்-அமைச்சராக காமராஜர் பொறுப்பேற்கும் வரை) எப்படிக் கடுமையாக காங்கிரசை எதிர்த்தேனோ. அதே போல காமராஜர் இந்த தமிழ்த் சமுதாயத்திற்குச் செய்யும் நன்மைகளுக்காக வருகிற தேர்தலில் காங்கிரசை ஆதரிக்கப் போகிறேன் என்று பேசினார் பெரியார்.
தற்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லாமல்தான் முதல்-அமைச்சராகி இருக்கிறார் காமராஜர். தேர்தலில் நின்று வெற்றி பெற்றால்தானே முதல்-அமைச்சர் பொறுப்பிலே நீடிக்க முடியும். மேலவை உறுப்பினராக வந்து முதல்-அமைச்சர் பொறுப்பிலே நீடிப்பதை காமராஜர் விரும்பவில்லை. நேரடியாக மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்டு, வெற்றி பெற்று பதவியில் அமர்வதே ஜனநாயக முறை என்று சொல்லி அப்போது காலியாக இருந்த குடியாத்தம் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்தார் காமராஜர். நேரடியாக தொகுதிக்கே சென்று மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரித்தார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் பெரியாரின் ஆதரவைக் கோரவில்லை. ஆனால் யாருடைய வேண்டுகோளையும் எதிர்பார்க்காமல் காமராஜரை ஆதரித்துப் பேசினார் பெரியார். திராவிடர் கழகம் தானாகவே முன்வந்து இந்த ஆதரவைத் தெரிவித்தது. ஆத்தூரிலே ஒரு கூட்டத்திலே பேசிக் கொண்டிருந்தபோதுதான் இந்த அறிவிப்பினை வெளியிட்டுப் பேசினார் தந்தை பெரியார்.
அப்போது மிகவும் பிரபலமாக விளங்கியவர் டாக்டர் பி.வரதராஜுலு நாயுடு. காங்கிரசிலே மிகவும் முக்கியமான தலைவராக விளங்கியவர். பெரியாருக்கும், காமராஜருக்கும் மிக நெருக்கமான நண்பராக இருந்தவர். அவருடைய பிறந்த நாள் விழா 21.11.1955 அன்று ராஜாஜி ஹாலிலே நடைபெற்றது. அந்த விழாவிலே தந்தை பெரியாரும், முதல்-அமைச்சராக இருந்த காமராஜரும் கலந்து கொண்டதும், இருவரும் சந்தித்துக் கொண்டதும் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
அந்த விழாவிலே பெரியார் பேசிய பேச்சு, மிகவும் குறிப்பிடத்தக்க பேச்சாகும். அதனையும் நமது வாசகர்களின் பார்வைக்கு அப்படியே தருகிறேன்.
"தலைவர் காமராஜர் என்னைப் பற்றிக் குறிப்பிட்டார். அதற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். காமராஜரிடம் அன்பு கொண்டு, என்னான வழிகளில் அவருக்கு ஆதரவு கொடுத்து வருகிறேன். காரணம் அவர் சில விஷயங்களில் தமிழன் என்ற உணர்வோடும், உணர்ச்சியோடும் ஆட்சி நடத்துகின்றார். அதனால், சிலருக்கு பொறாமை ஏற்பட்டு வகுப்புக் காரணமாக சில எதிரிகள் இருந்து கொண்டு அவருக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள். அப்படி அவர்கள் கொடுக்கிற தொல்லைகள் ஒரு போதும் வெற்றி பெற்று விடக்கூடாது. வெற்றி பெற்றுவிட்டால் தமிழர்களின் நிலைமை மிக மிக மோசமாகிவிடும்.
உத்தியோகத் துறையில் நமது தமிழர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுவிடும். அப்படிப்பட்ட பின்னடைவு ஏற்படாமல் இருக்க நமது இனத்தை காப்பாற்ற முதல்-அமைச்சர் பொறுப்பிலே இருக்கிற காமராஜரால் மட்டுமே அது முடியும். இந்த கருத்தினை ஏற்கனவே காமராஜர் தன்னகத்தே கொண்டிருப்பதால் அதற்காக அவர் பாடுபடுவதை, ஏதோ எனக்கு அவர் ஆதரவு தருவது போல சிலர் பேசுகிறார்கள்.
நான் அரசியல் தொண்டனல்லன். நான் ஒரு சமுதாய நலத்தொண்டன். அதிலும் நமது தமிழ் மக்களின் நலனுக்காக பாடுபடுகிற தொண்டன். அதை முன்னிட்டு அரசியல் என்பதை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் எதிர்க்கவும் விட்டுக் கொடுக்கவும் நான் துணிவேன். காமராஜருக்கும் எனக்கும் கட்சி அளவில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர் நலன் என்று வரும்போது இருவருமே ஒத்த கருத்துடையவர்களாக இருக்கிறோம். மற்றபடி எங்கள் இருவருக்கும் இடையே எந்த சுயநல நோக்கம் எதுவுமே இல்லை என்று அந்த விழாவிலே பெரியார் பேசியது குறிப்பிடத்தக்கது.
பெரியார் இது போல காமராஜரை பற்றி அவரது சாதனைகள் பற்றி பல இடங்களில் பேசியிருக்கிறார். அடுத்த தொடரில் அதனை விரிவாக பார்க்க இருக்கிறோம். அதே சமயத்தில் பெரியாரைப் பற்றி காமராஜர் பேசிய பேச்சினையும் நாம் பார்க்க வேண்டும் அல்லவா. அது தானே சரியான பார்வையாக இருக்க முடியும். திருச்சியில் உள்ள வரகனேரி என்ற இடத்தில் பள்ளத்தெரு என்ற இடத்தில் அந்த பெயரை மாற்றி விட்டு பெரியார் நகர் என்ற பெயர் சூட்டி அதனை திறந்து வைத்து காமராஜரை பேசுவதற்கு அழைத்திருந்தார்கள். அப்போது காமராஜர் பெரியாரை பற்றி ரத்தின சுருக்கமாக பேசியது குறிப்பிடத்தக்கது.
ஜாதி பேதமற்ற சமுதாயத்தை தனது வாழ்நாளிலே கண்டுவிட வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருக்கிற பெரியாரின் பெயரை இங்கே நீங்கள் சூட்டி இருப்பது மிகவும் பொருத்தமானது. அதற்காக தானே அவர் போராடிக் கொண்டிருக்கிறார். கேரளாவில் வைக்கம் நகரில் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தை முன் நின்று நடத்தியவரே பெரியார் தான். அதனால் தான் தமிழ் தென்றல் திரு.வி.க. பெரியாரை "வைக்கம் வீரர்" என்ற பட்டம் சூட்டி அழைத்தார்.
ஜாதி ஒழிப்புக்கு சட்டம் போட்டு ஒரு சமூகத்தை மாற்றி அமைத்துவிட முடியாது. அதற்கு ஜனங்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். முதலில் மூடப்பழக்க வழக்கங்களில் இருந்து நாம் விடுபட வேண்டும். அதற்காகத்தான் பெரியார் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட பெரியார் நீடூடி வாழ்ந்து சேவை செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று பேசி முடித்தார் பெருந்தலைவர் காமராஜர்.
அடுத்த வாரம் சந்திப்போம்.