null
மக்கள் இதயத்தில் வீற்றிருக்கும் தென்னாட்டு இமயம் பா.சிவந்தி ஆதித்தனார்
- பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என்னும் 'தென்னாட்டு இமயம்' எல்லோர் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
- சின்னய்யாவின் புகழ்மிகு வரலாறு, அணையா ஜோதியாய் என்றென்றும் ஒளிவீசிக்கொண்டுதான் இருக்கும்.
காலம் கனிந்தளித்த கற்பகத் தரு. அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி. எட்டுத்திக்கும் வெற்றித் தேர் செலுத்திய அற்புத ஆதித்தன். தமிழுக்கும், தமிழ்ச்சமூகத்திற்கும் மட்டுமன்றி, வரையறை துறந்து மனிதநேயத் தொண்டாற்றி, தாய்த்திரு நாட்டின் தோள்களிலும் தவழ்ந்தாடிய புகழ்மாலை.
பத்திரிகைப் பணி, திருப்பணி, அருட்பணி, கல்விப் பணி, சமூகப் பணி, விளையாட்டு மேம்பாட்டுப் பணி என அனைத்தையும் அறப்பணியாக எண்ணி அரும்பணி ஆற்றிய அறிவார்ந்த செம்மல். செல்லும் இடமெல்லாம் சீர்பெருக்கிப் பேர்நிறுத்தி, நின்று நிமிர்ந்த 'தென்னாட்டு இமயம்' - எங்கள் சின்னய்யா பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.
அப்பெருமகனார் இவ்வுலகைக் கடந்து பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. எனினும், ஈரம் உலராத நினைவுகள் நம் நெஞ்சில் நிழலாடுகின்றன. தோற்றப் பொலிவு, தெளிந்த பார்வை, கருணை உள்ளம், கடமை உணர்வு, செயல் வேகம், ஓயா உழைப்பு என மானிட மாண்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்த திருவுருவம் நம் கண்களில் நிற்கின்றது.
பத்து ஆண்டுகள் என்ன! நூறு ஆண்டுகள்...நூறு நூறு ஆண்டுகள் போனாலும் மாறாத மறையாத பெருவாழ்வுக்குரியவர் சின்னய்யா சிவந்தி ஆதித்தனார்.
தமிழ்நாட்டின் தனிப்பெரும் அடையாளமான ' தினத்தந்தி' நாளேட்டினை, அதிகாலை நேரத்துத் தமிழமுதாய் இல்லந்தோறும் கொண்டு சேர்த்த அண்ணல்! படித்தோர்க்கும் பாமரர்க்கும் பிடித்தமான பத்திரிகை என எல்லோரும் போற்றிக் கொண்டாடும் வகையில், தினத்தந்தியின் வியத்தகு உயரம் எப்படி சாத்திய மாயிற்று?
சின்னய்யா பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மதிநுட்பமும், எண்ணித் துணிகின்ற ஆற்றலும்தான் 'தினத்தந்தி 'யின் தன்னே ரில்லா தனிப்பெரும் வளர்ச்சியை சாத்திய மாக்கின.
முதலாளி மகன் முதலாளி ஆவதுதான் மரபு. ஆனால், அதற்கு மாறாக, தங்கள் சொந்த நிறுவனத்திலேயே ஒரு தொழிலாளியாகத் தமது பணியைத் தொடங்கினார் சின்னய்யா. கல்லூரிப் படிப்பை முடித்ததும், தந்தையின் அடிச்சுவட்டைப் பின்பற்றிப் பத்திரிகைத் துறையில் மனமொன்றி முழு ஆர்வத்துடன் காலடி எடுத்து வைத்தார்.
தொழிலாளர்களுடன் தொழிலாளியாய் சங்கமித்தார். அச்சுத் துறையின் பணிகளைக் கூர்ந்து கவனித்தார். அச்சுக் கோர்க்கும் பயிற்சி பெற்றார். இயந்திரத்தை இயக்கும் நுட்பம் அறிந்தார்.
நிருபராய், செய்தி சேகரிப்பாளராய், பிழை திருத்துபவராய், அச்சடித்த பத்திரிகைப் பிரதிகளைத் தோளில் தூக்கிச் சுமந்து வாகனத்தில் ஏற்றும் பணியாளராய்...அவர் பெற்ற அனுபவச் செழுமை அவரின் ஆற்றலை வளப்படுத்தியது; பத்திரிகை உலகில் மாமன்னராக்கியது.
முத்திரை பதித்த பத்திரிகைப் பணி
மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஆதாரமான, அச்சு இயந்திரக் கண்டுபிடிப்பு ஒரு மகத்தான சாதனை. மனித சமூகத்தின் சிந்தனையில், அறிவெழுச்சியில் திருப்புமுனையை ஏற்படுத்திய நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களின் தோற்றம் மற்றொரு மாபெரும் சாதனை. தமிழ் மண்ணில் அப்படியொரு அறிவுப் புரட்சியை ஏற்படுத்தியவர் 'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனார் அவர்கள். அந்தத் திருப்புமுனையை, தமிழ்ச்சமுதாயம் மேம்படும் வகையில் ஊர்தோறும் வீதிதோறும் வாசல்தோறும் கொண்டு சேர்த்தவர் சின்னய்யா சிவந்தி ஆதித்தனார் அவர்கள்.
பத்திரிகை உலகின் ராஜாளியான 'தினத்தந்தி' நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பு, 1959-ம் ஆண்டு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட போது, மூன்று நகரங்களில் மட்டுமே அலுவலகங்களைக் கொண்டிருந்த தினத்தந்தி, சின்னய்யா சிவந்தி ஆதித்தனார் அவர்களின் அயராத முயற்சியினால் அகன்று விரிந்த சமுத்திரமாய் 15 நகரங்களில் இருந்து வெளிவரத் தொடங்கியது.
அதிக பிரதிகள் விற்பனையுள்ள முன்னணித் தமிழ் நாளிதழ் என்னும் பெருமையை கடந்த அரை நூற்றாண்டிற்கும் மேலாய் தினத்தந்தி தக்கவைத்துக் கொண்டுள்ளதே! அது, சின்னய்யா அவர்கள் மெய்வருத்தம் பாராது உழைத்த உழைப்பின் பலன் அல்லவா!
கல்விச் சேவையில் சின்னய்யாவின் அரும்பணிகள்
'பயிற்றுப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்' - என்று அறைகூவல் விடுத்தான் பாரதி. அந்த பாட்டுக்குயிலின் அறைகூவலைச் சிரமேற் கொண்டு கல்விக்குப் பெருந்தொண்டாற்றியவர் சின்னய்யா பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.
தமிழகத்தின் தென்மாவட்டங்கள் இன்று கல்வியில் தலைசிறந்து விளங்குவதற்கு சின்னய்யா அவர்களின் சீரிய பணியும் ஒரு முக்கிய காரணம். ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளின் வாழ்க்கை மேம்பாட்டையே கருத்தில் கொண்ட சின்னய்யா அவர்கள் தோற்றுவித்த கல்வி நிறுவனங்கள், அவரின் கனவை நனவாக்கின.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊர் காயல்பட்டினம். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை, அவ்வூர்ப் பெண்கள் வெளியூர் சென்று கல்வி கற்க முடியாத நிலை. அந்த நிலையை மாற்றி, அங்குள்ள பெண்கள் வாழ்வில் கல்வி தீபத்தை ஏற்றியவர் சின்னய்யா சிவந்தியார் அவர்கள்.அந்த மண்ணின் முதல் தலைமுறை பெண் பட்டதாரிகளையும், பெண் பொறியாளர்களையும் உருவாக்கிய பெருமை அவரையே சாரும்.
சின்னய்யா அவர்களின் கண்கள் வர்ணபேதம் பார்ப்பதில்லை. சமய பேதம் சிறிதும் இல்லை. வானம்போல் விரிந்த மனதில் உயர்ந்த சிந்தனைகளே ஊற்றெடுத்தன. எல்லோர் வாழ்வும் ஏற்றமுற வேண்டும் என்பதே அவரின் ஒரே நோக்கம். அதனால்தான், பின்தங்கிய அந்த வட்டார மக்களின் முன்னேற்றத்திற்காக கல்விக்கூடங்களைக் கட்டி எழுப்பினார். கூட்டுப் புழுக்கள் வண்ணத்துப் பூச்சிகளாய் பரிணாமம் பெறுவதுபோல், படிப்பின்றி வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தோர், இன்று கல்வி கற்று உயர்வு பெற்று எங்கெங்கும் நல்ல நிலையில் இருக்கின்றனர்.
கொடுப்பதற்கென்றே விரிந்த கைகள் ஒருபோதும் சுருங்கியதில்லை. நீரூற்றாய் நெஞ்சில் சுரந்த அன்பின் வெளிப்பாடுகளாய் அவர் வாரி வாரி வழங்கியதில் இருந்து உருப்பெற்றுச் சிறப்புற்ற ஆக்கப்பணிகள் அறிவின் களஞ்சியங்கள்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட காலகட்டத்தில், வகுப்பறைகள் மற்றும் நிர்வாக அலுவலகத்திற்குத் தேவையான கட்டிடங்கள் போதுமான அளவில் இல்லாதிருந்தன. கட்டிடங்கள் கட்டுவதற்கான மதிப்பீட்டுத் தொகை, அரசு ஒதுக்கிய தொகையை விஞ்சி நின்றது.
பல்கலைக்கழக நிர்வாகிகளின் மனத்திரையில் ஒளிர்ந்தது சின்னய்யாவின் முகம்தான். சென்னைக்கு வந்து சின்னய்யாவைச் சந்தித்தார்கள். விஷயத்தைச் சொல்லி நன்கொடை கேட்டார்கள். 'மொத்தம் எவ்வளவு செலவு ஆகும்?' என்று அவர்களைக் கேட்டார். 'ஒரு கோடி ரூபாய்' என்றனர்.
'மொத்த தொகையையும் நானே தந்துவிடுகிறேன். கட்டிட வேலைகளைத் துரிதமாகச் செய்யுங்கள்' என்று சொன்னார். வந்தவர்கள் வியப்பில் மூழ்கிப் போயினர். வாக்கின்படியே ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.
'ஒருமுறை கல்வி கற்றுவிட்டால் அதற்கு அழிவே இல்லை. கல்வியைப் போன்று, அறியாமையை ஒழிக்கும் மருந்து எந்த உலகத்திலும் கிடையாது' என்கிறது நாலடியார். 'எம்மை யுல கத்தும் யாங்கா ணோம் மம்மர் அறுக்கும் மருந்து' என்பதே அப்பாடலின் இறுதி வரி. அதனால்தான், ஏராளமானோர்க்குக் கல்விச் செல்வத்தை வழங்குவதற்காகத் தமது செல்வத்தைக் கணக்கின்றி வழங்கி மகிழ்ந்தார் சின்னய்யா சிவந்தி ஆதித்தனார் அவர்கள்.
விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்ட வித்தகர்
விளையாட்டுக் கலையில் அலாதி பிரியம் கொண்டவர். அத்துறையின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அவர் முன்னெடுத்த முயற்சிகளும், செயல்படுத்திய திட்டங்களும், வழங்கிய பொருளுதவிகளும் கணக்கில் அடங்காதவை.
விளையாட்டுக் கலையை நாட்டுப் புறத்தில் இருந்து தேசிய அளவில் கொண்டு சென்றவர். ஆசிய அளவில் உயர்த்தி, சர்வதேச அளவில் சாதிக்கச் செய்தவர் சின்னய்யா அவர்கள்.
சிதறிக் கிடந்த அமைப்புகளை ஒருங்கிணைத்தார். இளைஞர்களை ஊக்குவித்து உயர்ந்தெழச் செய்ய நிறைய போட்டிகளை நடத்தினார். விளையாட்டு வீரர்களையும் வீராங்கனைகளையும் உருவாக்கினார். நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய மாநில அரசுகள் தயங்கிய தருணங்களில் தாமே முன்வந்து நிதி வழங்கினார்.
சுமார் 40 ஆயிரம் பேர் அமரக்கூடிய நேரு விளையாட்டரங்கம் பிரமாண்டமாய் உருவாகக் கைகொடுத்தவர். அந்த அரங்கம் சர்வதேச கால்பந்து மற்றும் தடகள போட்டிகளை நடத்தும் வண்ணம் உன்னத தரத்துடன் திகழ்கிறது.
நேரு விளையாட்டரங்கம் அருகில் சுமார் 8 ஆயிரம் பேர் அமரக்கூடிய நவீன உள்விளையாட்டரங்கு அமைய காரணமாய் இருந்தவரும் சின்னய்யாதான். மேலும் எழும்பூர் ஆக்கி ஸ்டேடியம், நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கம், வேளச்சேரி நீச்சல் குளம் ஆகியவை அழகிய வடிவமைப்புடன் சர்வதேச தரத்தில் விளங்குவதற்கும் வழிகாட்டியாக இருந்தவர் சின்னய்யா டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள்தான்.
ஆட்சி பீடத்தில் இருந்த அரச குடும்பங்களின் ஆடம்பர வாழ்க்கை பற்றிய விபரங்களையும், போர்கள் மற்றும் வெற்றிகளைப் பற்றிய தகவல்களையும் தருவதுதான் வரலாறு என்று கருதிய காலம் மாறிவிட்டது. சமுதாய வரலாறே உண்மையான வரலாறு என்னும் கருத்தே இன்றைய அறிஞர்களால், சமூக ஆர்வலர்களால் போற்றப்படுகின்றது. அவ்வகையில், சமுதாயத் தொண்டுகளில் வரலாறு படைத்தவர் என்னும் பெருமைக்கு உரியவர் என்பது மட்டுமன்றி, எண்ணிறந்த தொண்டுகளால் என்றும் வாழ்கின்ற வரலாறாகவே திகழ்கிறார் என்பது எல்லோர்க்கும் வாய்த்திட முடியாத பெரும்பேறு. அத்தகைய நற்பேறுகளுக்கெல்லாம் மூல காரணம், அவர் உள்ளன்போடு ஆற்றிய அரும்பெரும் திருப்பணிகளே என்றால், அது நூற்றுக்கு நூறு சத்தியம்.
திருப்பணி என்னும் தெய்வீகப் பணி
'அருட்பணி என்பது அறப்பணி; அதற்கே வாழ்வை அர்ப்பணி' என்னும் கொள்கையை வெறும் புத்தகத் தத்துவமாக அல்லாமல், தமது வாழ்வின் அடிநாதமாகக் கொண்டிருந்தவர் சின்னய்யா சிவந்தி ஆதித்தனார் அவர்கள். கோவில் திருப்பணிகள் மீதான வைராக்கியமும் பற்றுறுதியும், அவரின் உணர்வோடும் உதிரத்தோடும் உயிரோடும் இரண்டறக் கலந்திருந்தன. ஆன்மிகப் பணிகள் அவரின் ஆன்மச் சுடராய் ஒளிர்ந்தன.
பழமை வாய்ந்த கோவில்களைச் சீரமைத்துப் புதுப்பித்தல், கோபுரங்கள் அமைத்தல், கோவில் முன்பு மண்டபங்கள் கட்டுதல், கும்பாபிஷேகம் நடத்துதல், அன்னதானம் வழங்குதல் - இவையெல்லாம் அவரது திருப்பணிகளின் பரிமாணங்கள்.
காயாமொழியை மருதப்பன் ஆதித்தன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவர் 1675-ம் ஆண்டு தேர் செய்து திருச்செந்தூர் கோவிலுக்குக் கொடுத்தார் என்பது வரலாறு. அதன்பின்னர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் மூதாதையர் மீண்டும் புதிய தேர் செய்து வழங்கியுள்ளனர். எனவே, திருச்செந்தூர் தேரோட்டத்தை தொடங்கி வைக்கும் மரியாதை சின்னய்யாவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. அவர்கள் தொட்டு வடம்பிடித்துக் கொடுத்த பின்னர்தான் தேர் இழுக்கப்படும். இது சின்னய்யாவிற்குக் கிடைத்த இறைவனின் பேரருள்.
கோவில் திருப்பணிகளுக்கென அவர் கொடுத்த கொடைகளின் உயரம் சிகரத்தை விஞ்சும். கொடுத்தார்...கொடுத்தார்... கொடுத்துக்கொண்டே இருந்தார்.
எத்தனை திருக்கோவில்கள்! எத்தனை எத்தனை அருட்பணிகள்!
சிற்றாறு என்னும் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவில். அதனைக் கட்டிய மன்னன் பராக்கிரம பாண்டியன். அக்கோவிலுக்கு அவன் குடமுழுக்கு நடத்திய போது, ஒரு பாடலைப் பாடி அதனைக் கல்வெட்டாக அங்கே பதித்துள்ளான். 'இந்த ஆலயம் காலத்தால் சிதைவுறுமானால், அந்தச் சிதைவுகளை அகற்றிச் செப்பம் செய்பவர்களின் திருவடியில் விழுந்து வணங்குவேன்' என்று பராக்கிரம பாண்டியன் குறிப்பிட்டிருப்பதே அந்தக் கல்வெட்டில் உள்ள செய்தி.
களை இழந்து நின்ற மொட்டைக் கோபுரத்தைப் புதுப்பித்துக் கட்ட எத்தனையோ பேர் முயன்றார்கள்; யாராலும் முடியவில்லை. அப்படி யாருக்கும் முடியாத அந்த அருஞ்செயலை முடித்துக் காட்டினார் சின்னய்யா சிவந்தி ஆதித்தனார்.
அன்றைய முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆலோசனையின்படி, அந்தப் பொறுப்பு சின்னய்யாவிடம் கொடுக்கப்பட்டது. தெய்வத் திருவருளால் 1990-ல் 180 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய ராஜ கோபுரம் கட்டி முடிக்கப்பட்டு எழிலார் தோற்றம் பெற்றது. பராக்கிரம பாண்டியன் கோபுரம் கட்டி குடமுழுக்கு நடத்தியது ஒரு ஆனி மாதத்தில். சின்னய்யா சிவந்தி ஆதித்தனார் அவர்களும் இக்கோவிலுக்குக் குடமுழுக்கு நடத்தியது 1990, ஆனி மாதத்தில்!
பராக்கிரம பாண்டியன் 50 ஆண்டுகளாகக் கட்டியதை 6 ஆண்டுகளில் கட்டி முடித்த பெருமை சின்னய்யாவையே சாரும். 'இருபதாம் நூற்றாண்டின் ராஜ ராஜ சோழன்' என்று நெஞ்சுருகப் பாராட்டிப் பட்டம் வழங்கினார் திருமுருக கிருபானந்த வாரியார். '2-வது பராக்கிரம பாண்டியன்' என்று பக்தர்கள் முடிசூட்டிக் கொண்டாடினர்.
ராஜ கோபுரத்தின் முதல் நிலை கட்டுமானத்திற்கு மட்டுமின்றி, 9-ம் நிலைக்கான செலவுகளையும் சின்னய்யாவே ஏற்றுக் கொண்டார். பயபக்தியுடன் செயலாற்றினார்; சிறப்பாக நிறைவேற்றினார். 9 நிலை கொண்ட, தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவில் ராஜ கோபுரம் சின்னய்யாவின் பெயரை உலக சுவாசத்தின் காற்றலைகளில் உச்சரித்துக்கொண்டே இருக்கும்.
கடலின் அலைகளுக்குக் கணக்கில்லை. கருணை உள்ளத்தின் உபகாரங்களுக்கு எல்லை இல்லை. சின்னய்யா அவர்கள் அருளிய காணிக்கைக்கும், அவரால் புதுப்பொலிவு பெற்ற கோவில்களின் எண்ணிக்கைக்கும் அளவே இல்லை.
இவை மட்டுமன்றி - கிறிஸ்தவ ஆலயங்கள், இஸ்லாமியரின் மசூதிகள், ..இப்படி மத பேதமின்றி நல்லிணக்க உணர்வோடு சின்னய்யா அவர்கள் நன்கொடை வழங்கி ஆதரித்த திருப்பணிகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
திருச்செந்தூர் திருமுருகன் திருவடிகள்
திருச்செந்தூர் முருகப் பெருமானின் திருவடிகளில் சின்னய்யா சிவந்தி ஆதித்தனார் அவர்களின் சிந்தை ஆழப் பதிந்திருந்தது. எந்தப் பணியை மேற்கொண்டாலும் திருச்செந்தூர் வேலவனை வணங்கி வழிபட்டபின்னர்தான் தொடங்குவார். செந்தூர் முருகன்மேல் அவர் கொண்டிருந்த பெரும்பக்தியினால் அக்கோவிலுக்கு சின்னய்யா அவர்கள் கொடுத்துக் கொடுத்து நிறைவேற்றிய திருப்பணிகள் ஏராளம்! ஏராளம்! முருகப் பெருமானுக்கு நடத்தப்படும் சிறப்பு பூஜைக்காக நிரந்தரக் கட்டளைதாரராகத் திகழ்ந்த கோமான்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த திருச்செந்தூர் முருகன் கோவிலைப் பற்றி சங்க இலக்கியங்களில் பல்வேறு குறிப்புகள் இருக்கின்றன. ஆனால், அக்கோவில் குறித்து இனிவரும் இலக்கியங்களில் சின்னய்யா சிவந்தி ஆதித்தனார் அவர்களின் திருப்பெயரும் சிறப்பிடம் வகிக்கும் என்பதில் ஐயமில்லை.
அக்கோவிலுக்கு சின்னய்யா அவர்கள் செய்திருக்கும் திருப்பணிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஏடு கொள்ளாது; காலம் போதாது!
அதனால்தான் அங்கு வீடு கொண்டிருக்கும் முருகப் பெருமான் - தன்னை ஆத்மார்த்தமாய் நேசித்த, தன்னையே பூஜித்த, தனது திருவடிகளில் மனம்பொருந்தி வாழ்ந்திருந்த தனது ஆத்மநேயனான சின்னய்யா சிவந்தி ஆதித்தனார் அவர்களை, தனது மைந்தனாக தனது கண்ணருகிலேயே மணிமண்டபம் வடிவில் வைத்துக் கொண்டானோ!
வரையின்றி வழங்கிய கொடை வள்ளல்
பாரியின் கொடைத்திறனைப் புகழ்ந்த கபிலர் 'கடவன் பாரி கை வண்ணமே' என்று பாடினார். வள்ளன்மையைக் கடமையாகக் கொண்டவன் பாரி. வள்ளன்மை அவனுக்குப் புகழ் சேர்ப்பதற்கோ புண்ணியம் சேர்ப்பதற்கோ செய்யப்படும் செயலன்று. அதை வாழ்வின் கடமையாகக் கொண்டவன் பாரி. அவனின் வள்ளன்மையையும் விஞ்சியது சின்னய்யாவின் வள்ளன்மை.
பாரியை நாடிச் சென்று புகழ்ந்து பாடினால், பரிசில் பெறுவது உறுதி என்று விறலியை ஆற்றுப்படுத்துவதாக கபிலர் பாடிய 'சேயிழை பெறுகுவை - வாள்நுதல் விறலி!...........நீரினும் இனிய சாயற் பாரி வேள்பால் பாடினை செலினே' என்னும் பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.
சங்க காலத்துப் பாரியை நாடிச் சென்று, அவனைப் புகழ்ந்து பாடும் புலவர்களுக்குதான் கொடை கிடைக்கும். ஆனால், இருபதாம் நூற்றாண்டின் தன்னேரில்லா 'கொடை வேந்தர்' சிவந்தி ஆதித்தனார் அவர்களிடம், கேட்காமலே கிடைக்கும். பிறர் தேவை அறிந்து வற்றாத ஊற்றாய் உளப்பூர்வமாக வாரி வழங்கிய வள்ளல் பெருமான்.
அவரால் வாழ்வடைந்த குடும்பங்கள், அவரால் உருவான கல்வி நிறுவனங்கள், அவரால் உயர்ந்தெழுந்த கோபுரங்கள், அவரால் பயன்பெற்ற படைப்பாளர்கள், அவரால் கவுரவிக்கப்பட்ட தமிழறிஞர்கள்...பட்டியலிட்டால் எட்டு மைலுக்கு அப்பாலும் நீளும்.
இறுதி மூச்சுக் காற்றின் கடைசித் துளி வரை நற்பணிகளில் இயங்கிய இதயம் சின்னய்யாவின் இதயம். வாழ்வின் எல்லைவரை சோர்வின்றி வழங்கிய கைகள் சின்னய்யாவின் கைகள்.
அன்புச் சுரங்கமாய், மழைதரும் மேகமாய் பல்லோர்க்கும் வாழ்வளித்த பயன்மிகு வாழ்க்கையே சின்னய்யாவின் வாழ்க்கை.முகம் அறியாதவர்களுக்கும் முன்பின் தெரியாதவர்களுக்கும்கூட சின்னய்யா செய்த உதவிகள் பலகோடி.
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் என்னும் 'தென்னாட்டு இமயம்' எல்லோர் இதயங்களிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. சின்னய்யாவின் புகழ்மிகு வரலாறு, அணையா ஜோதியாய் என்றென்றும் ஒளிவீசிக்கொண்டுதான் இருக்கும்.
வானும் மண்ணும், கதிரும் நிலவும்,
கடலும் காற்றும், தமிழும் இசையும்,
பக்தியும் பாடலும், கோவிலும் தீபமும் -
உள்ளவரை சின்னய்யா அவர்களின்
திருப்பெயர் நிலைத்திருக்கும்!