சிறப்புக் கட்டுரைகள்

ஆறுமனமே ஆறு- மாசில்லா விநாயகர் விழா

Published On 2022-08-28 18:35 IST   |   Update On 2022-08-28 18:35:00 IST
  • பண்டிகைகள் நம் பாரம்பரியத்தை உணரவைப்பவை; நம் மனநலத்தை மேம்படுத்துபவை.
  • நான் சின்னப் பையனா இருந்தப்போ, ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி அன்னிக்கும் என் தாத்தா என்னைக் கடைத்தெருவுக்குக் கூட்டிட்டுப் போவாரு.

'பண்டிகைகள் நம் பாரம்பரியத்தை உணரவைப்பவை; நம் மனநலத்தை மேம்படுத்துபவை. சுருக்கமாக, நம் ஊர்களை நாம் வாழ்வதற்கான சிறந்த இடங்களாக மாற்றுபவை.'' - அமெரிக்க இசையமைப்பாளர் டேவிட் பைண்டர்.

நண்பர்களே... விநாயகர் சதுர்த்தி வரப்போகுது. இப்பவே பத்திரிகைகள்லயும், தொலைக்காட்சி சேனல்கள்லயும் விதவிதமான பிள்ளையார் சிலைகள், கண்ணைக் கவரும் வண்ணத்துல, பிரமாண்டமா தயாராகி கிட்டிருக்கறதைப் பார்க்குறோம். தீபாவளி, பொங்கல் போல தற்போது விநாயகர் சதுர்த்தியையும் ரொம்ப விசேஷமா கொண்டாடறாங்க. சொல்லப் போனா பிற மாநிலங்களிலேயும் ரொம்பப் பெருசா கொண்டாடப்படுற பண்டிகை இது.

'எதைச் செய்யறதா இருந்தாலும் பிள்ளையார் சுழி போட்டுட்டு செய்யணும்'ங்கறதை ஒரு சம்பிரதாயமா பல வீடுகளிலே பெரியவங்க சொல்வாங்க. இந்து பாரம்பரியப்படி பிள்ளையார்தான் முழுமுதற் கடவுள். வினைகளை அகற்றுபவர். எந்தக் காரியத்துக்கும் உறுதுணையா இருக்கறவர். பல தெய்வங்களை கோயில்ல போய்த்தான் நாம பார்க்க முடியும். பிள்ளையார் சாமியோ நம்ம தெருவுலயே இருப்பார். தெருவுக்குத் தெரு, முக்குக்கு முக்கு சின்னதாவாவது பிள்ளையார் சாமி சிலையா இருப்பார். நம்ம தமிழ்நாட்டுல ரொம்ப அதிகமா இருக்குறது விநாயகர் கோயில்கள்தான். அதோட எல்லாக்கோயில்கள்லயும் அவர் இருப்பார்... அவரைக் கும்பிட்டுட்டுதான் மத்த சாமிங்களைக் கும்பிடணும்கிறது குழந்தையா இருக்கறப்பவே படிய வைக்கப்படற பழக்கம்.

இந்தியாவுல மட்டுமில்லை. பல நாடுகள்லயும் விநாயகர் சிலை இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இருக்கு. இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்துன்னு பல நாடுகள்ல விநாயகரை பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலே இருந்து வழிபட்டதற்கான தடயங்கள், கல்வெட்டுகளாகவும் சிலைகளாகவும் கிடைச்சிருக்கு.

இந்தோனேசியாவின் பல்கலைக்கழக சின்னத்துல விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டிருக்கு. 'ரூபையா'ங்கிறது இந்தோனேசியாவின் கரன்சி. 20,000 ரூபையா கரன்சியில நம்ம விநாயகர் உருவத்தை அச்சிட்டு அழகு பார்த்திருக்கு அந்த நாடு. இப்படி விநாயகரைப் பத்தி எத்தனையோ சுவாரசியமான தகவல்கள் இருக்கு. நம்ப மீனாட்சியம்மன் கோயில் பிரகார மண்டபத்துல பெண் வடிவிலே இருக்கற விநாயகி சிலையைக் கண்டு அசந்து போயிருக்கிறேன்.

நான் சின்னப் பையனா இருந்தப்போ, ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி அன்னிக்கும் என் தாத்தா என்னைக் கடைத்தெருவுக்குக் கூட்டிட்டுப் போவாரு. கையில ஒரு மனைக்கட்டையை எடுத்துப்பேன். செருப்புப் போடக் கூடாது. தாத்தா பார்த்து பார்த்து ஒரு பிள்ளையார் சிலையை வாங்குவார். களிமண்ணால செஞ்ச சிலை. கடைக்காரர் பிள்ளையார் பொம்மையோட சின்னதா ஒரு உருண்டை களிமண்ணும், பிள்ளையாருக்கு கண்ணா வெக்கறதுக்கு ரெண்டு குன்றிமணியும் கொடுப்பார். ரொம்ப பயபக்தியோட பிள்ளையார் சிலையை மனைக்கட்டையில வாங்கி வெச்சுக்கிட்டு வீட்டுக்கு வருவோம். அந்தச் சின்னக் களிமண் உருண்டை எதுக்குன்னா, காகித்தால செஞ்ச ஒரு குடையை அதுல சொருகி, பிள்ளையார் சிலைக்கு வெக்கறதுக்குத்தான். தாத்தா விநாயகருக்கு பூஜை பண்ணுவார். அன்னிக்கி கொழுக்கட்டை, சுண்டல், அப்பம், வடை, பாயசம்னு விதவிதமான பலகாரங்களால வீடே அமர்க்களப்படும். சாயந்தரமானதும், தாத்தா பிள்ளையாருக்கு சூடம் காட்டுவார். பிள்ளையார் சிலையை என்னை எடுத்துக்கச் சொல்வார். நானும் தாத்தாவும் ஊா்க்கோடியில இருக்குற குளத்துக்குப் போவோம். தாத்தா, சிலையில கண்ணுக்காக வெச்சுருந்த குன்றிமணியை எடுத்துடச் சொல்வார். நான் எடுத்ததும், குடையையும் பிரிச்சுப் போட்டுட்டு, களிமண் பிள்ளையாரை மட்டும் குளத்துல போடச் சொல்வார். குளத்துல களிமண் சேர்றது, மண்வளத்தை அதிகரிக்குமாம்; நீர் சுரப்புக்கு உதவுமாம். இதெல்லாம்கூட எனக்குப் பின்னாள்கள்லதான் தெரியும். இப்படித்தான் நாம எல்லாருமே பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாடிக்கிட்டு இருக்கோம்.

பெரியவங்களைவிட குழந்தைகளுக்குத்தான் பிள்ளையார் சதுர்த்தி ரொம்ப இஷ்டமான பண்டிகை. சின்னதும் பெருசுமா இருக்குற பிள்ளையார் சிலைகள்ல நமக்குப் பிடிச்சதை வாங்கி, கலர் கலரா இருக்குற குடைகள்ல ஒண்ணை பிள்ளையாருக்கு வெச்சு ரசிச்சு ரசிச்சு சாமி கும்பிடுவோம். அடுத்த வீடுகள்ல இருக்குற பிள்ளையார் சிலைகளோட நம்ம சிலைகளை ஒப்பிட்டுப் பார்ப்போம். களிமண் சிலை வாங்கப் போற இடத்திலே ஆப்பிள் சைசிலே இருந்து புட்பால் சைஸ் வரை களிமண்ணை எடுத்துகிட்டு வருவோம். எங்களையே சிற்பிகளாக பாவிச்சு கைக்கு வா்ர வடிவங்களைச் செய்வோம். சாமி சிலை தொடங்கி சமையல் பாத்திரம் வரை பல வடிவங்கள் வீடுதோறும் உருவாகும். இப்ப நெனைச்சிப் பாா்த்தாலும் சிாிப்பும் சந்தோஷமுமா இருக்கு.

ஆவணி மாசத்துல வளர்பிறை சதுர்த்தியை, விநாயகர் பிறந்தநாளா, விநாயகர் சதுர்த்தின்னு கொண்டாடுறோம். மராட்டிய மாமன்னர் சிவாஜியின் ஆட்சிக்காலத்துல விநாயகர் சதுர்த்தியைக் கோலாகலமாகக் கொண்டாட ஆரம்பிச்சாங்க. அதுக்கப்புறம், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துல மக்கள் கூட்டமாக சேருரதை ஆங்கிலேய அரசு தடை செய்தது. அதே சமயம் ஆங்கிலேய அரசு மத விவகாரங்களிலே தலையிடக்கூடாதுன்னு அரசியாா் தாமிரப்பட்டயம் பதிஞ்சு கொடுத்திருந்தாா். இதைப் பயன்படுத்திகிட்டு பாலகங்காதர திலகர், மராட்டியர்களின் தேசிய உணர்வின் அடையாளமாக பிள்ளையார் சதுர்த்தியை மாற்ற நினைச்சார். இந்த பண்டிகையை எல்லாரையும் ஒன்றிணைக்கிற ஒரு அடையாளமா மாத்தினார். அதன் தொடர்ச்சிதான் இன்னிக்கி எல்லா பெரிய நகரங்கள்லயும் பிரமாண்டமான விநாயகர் சிலைகளோட, பெரிய ஊர்வலமாப் போய் சிலைகளை நீர்நிலைகள்ல கரைக்கிற நிகழ்வா மாறியிருக்கு.

ஒவ்வொரு வருஷமும் விநாயகர் சதுர்த்தி வரும்போதுதான் சிலைக் கலைஞர்களோட திறமையைப் பார்க்குறோம். ஏயப்ப்பா... எத்தனை வகையான விநாயகர்கள்னு நமக்கு ஆச்சர்யமா இருக்கும். நர்த்தனமாடுற விநாயகர், ஊஞ்சலாடும் விநாயகர், கையில வீணைவெச்சுருக்குற கணபதி, ஏன்... கால் மேல் கால் போட்ட படி புத்தகம் படிக்கிற விநாயகர், பைக் ஓட்டற விநாயகா், லேப்-டாப் வச்சிருக்கற விநாயகா், குழந்தையாகத் தவழ்கிற விநாயகா் ஸ்டெதாஸ்கோப் மாட்டிய விநாயகா் இப்படி கற்பனைக்கு எட்டாத பல வடிவத்துல சிலைகள் இருக்கு.

பலவிதமான வண்ணங்கள் தீட்டின விநாயகர் சிலையின் அழகைப் பார்க்கும்போது இதைப் போய் ஏன் கடல்ல கரைக்கணும்னு நமக்குத் தோணும். சென்னையில கொசப்பேட்டைதான் விநாயகர் சிலைகள் தயாரிக்கிற மையமான இடம். 'குயவர் பேட்டை'ன்னு இருந்தது நாளடைவுல 'கொசப்பேட்டை'யா மாறிடுச்சு. ஒருகாலத்துல இங்கே பிள்ளையார் சிலை செய்யும் கலைஞர்கள் நூத்துக்கணக்குல இருந்தாங்க. இப்போ 40 குடும்பங்களுக்கும் குறைவாத்தான் இருக்காங்க. மகாராஷ்டிரா, ஆந்திரான்னு வெளிமாநிலங்கள்ல இருந்து வர்ற ஆர்டர்கள் குறைஞ்சுபோனது, போதுமான அளவுக்குக் களிமண் கிடைக்காதது, நல்ல விலை கிடைக்காமல்போனது, ரசாயனம் கலக்கக்கூடாதுங்கற அரசின் கெடுபிடி, காகிதக் கூழாலே செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பிளாஸ்டா் ஆப் பாரீஸ்லே செஞ்ச விநாயகா்லாம் வந்ததுன்னு பல காரணங்களால இந்தத் தொழிலைவிட்டு சிலை செய்யற கலைஞர்கள் போய்க்கிட்டே இருக்காங்க. இப்போ வட மாநிலங்கள்ல இருந்து குடும்பம் குடும்பமா வந்து, திருவள்ளூர் பகுதியில விநாயகர் சிலை செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. இதுவும் நாம கவனிக்க வேண்டிய விஷயம்.

இன்னொரு பக்கம், இப்படி பிரமாண்டமா உருவாக்கப்படுற பிள்ளையார் சிலைகள்ல வண்ணம் தீட்டும்போது பல விதமான ரசாயனங்களைக் கலக்குறாங்க. இது நீர்நிலைகளை மாசுபடுத்துது. இது நீா் வாழ் உயிரினங்களையும் பாதிக்கக்கூடியது. சுற்றுச்சூழலை பாழாக்கக்கூடியது. அதனாலதான் மாசுக் கட்டுப்பாடு வாரியம், இப்படி தயாரிக்கப்படுற பிள்ளையார் சிலைகளுக்கு வருஷா வருஷம் தடைபோடுது. ஆனாலும், இப்படி வேதிப்பொருட்களால் தயாரிக்கப்படுற சிலைகளை சிலர் வாங்கிட்டு வந்து கும்புடுறதும், நீா் நிலைகளிலே கரைக்கறதும் நடக்கத்தான் செய்யுது. பிள்ளையார் சதுர்த்தியை மகிழ்ச்சியோட கொண்டாடத்தான் வேணும்... அதே நேரத்துல இந்த விளைவுகளையும் கவனத்துல எடுத்துப்போமே!

பிரமாண்டமான சிலைகளைக் கரைக்க ஊர்வலமா எடுத்துட்டுப் போறப்போ நமக்கு ஏற்படுற இன்னொரு பிரச்சினை அதனோட உயரம். நம்ம ஊர்களில் மின்சார கம்பிகள் போடப்பட்டிருக்கிற அந்த உயரத்தையும் தாண்டி பிரமாண்டமான சிலைகளா இருந்தா, அந்தக் கம்பிகளிலே படாம பாதுகாப்போட தான் நீா் நிலைகளுக்கு விநாயகா் சிலைகளை நாம கொண்டு போகவேண்டியிருக்கும். அப்போ அசம்பாவித சம்பவங்களோ, விபத்தோ நடக்க வாய்ப்பிருக்கு. சமீபத்துல தஞ்சாவூர் பக்கத்துல இருக்குற களிமேடு கிராமத்துல தேரோட ஒரு பகுதி அந்த வழியாப்போன ஒரு உயர் மின் அழுத்த மின்கம்பியில் உரசுனதால மின்சாரம் பாய்ஞ்சு ஒரு விபத்து நடந்து 11 பேர் இறந்துபோனாங்க. சிலைகளை ஊர்வலமா எடுத்துட்டுப் போறப்போ இதையெல்லாம் மனசுலவெச்சுக்கணும்.

'மண்ணுல பொறந்த நாம இந்த மண்ணுக்கே சொந்தம்'கிற தாத்பர்யத்தை உணர்ந்து க்கணுங்கிறதுக்காகத்தான் களிமண்ணால செஞ்ச பிள்ளையாரை ஆறு, குளம், கடல்னு நீர்நிலைகள்ல கரைக்கிறோமுன்னு சொல்வாங்க. ஆனா, இப்போ களிமண் பிள்ளையார் போய் எதெதுலயோ பிள்ளையார் சிலைகளை செய்ய ஆரம்பிச்சுட்டோம்.

சில வருஷங்களுக்கு முன்னால ஒருத்தர் பிரமாண்டமா வெள்ளியில விநாயகர் சிலை செஞ்சு கடல்ல கரைப்போம்னு பலபேர்கிட்ட வசூல் செஞ்சதெல்லாம் நடந்தது. நூத்துக்கணக்கான கிலோவுல உருவான அதைப் போய் ஏன் கடல்ல கரைக்கணும்னு பலரும் கேள்வி கேட்க, கடைசியில சும்மா வெள்ளி முலாம் மட்டும் பூசிட்டு ஏமாத்தப் பாா்க்கிறாா்னு சிலா் சொன்னாங்கங்கற செய்தியெல்லாம் வந்தது. அதனால அந்த மாதிரி விபரீத முயற்சியெல்லாம் செய்ய வேண்டாமே!

ஒண்ணை நாம மனசுல அழுத்தமா வெச்சுப்போம். பிள்ளையார் ரொம்ப எளிமையான கடவுள். நம்ம அழகுணர்ச்சி, திறமை, நம்மளோட அந்தஸ்து இதையெல்லாம் பிள்ளையாரை வடிக்கிறதுலயும், விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுறதுலயும் காட்டுறோம். வாசல்ல கட்ட கொஞ்சம் மாவிலை, படைக்கறதுக்கு ரெண்டு கொழுக்கட்டை போதும். ஆடம்பரங்களை எந்த தெய்வமும் விரும்பாதுங்கறதுதான் யதார்த்தம்.

இன்னிக்கி உலகையே அச்சுறுத்திக்கிட்டிருக்குற விஷயங்கள்ல ரொம்ப முக்கியமானது சுற்றுச்சூழல் கேடு. இயற்கையை சீரழிச்சதன் பலனை மனிதர்களான நாம அனுபவிக்க ஆரம்பிச்சுட்டோம். ஒடிசா கனமழை அதுக்கு மாபெரும் சாட்சியா நிக்குது. எத்தனை உயிர்ச்சேதம், எத்தனை பேர் வீடு, வாசலை இழந்திருக்காங்கன்னு செய்திகள்ல பார்க்குறோம். பல கிராமங்கள் உத்தரகாண்ட்லயும் ஒடிசாவுலயும் மூழ்கிப்போய் கிடக்குது. ராஜஸ்தானையும் இந்த வருஷம் மழை விட்டுவெக்கலை.

நாம ஆனந்தமா, பக்தியோட கொண்டாடுற விநாயகர் சதுர்த்தியும் சுற்றுச்சூழலை மாசுபடுத்துறதா ஆகிடக் கூடாதுன்னு இந்த நாள்ல உறுதி ஏற்போம். குழந்தை குட்டிகளோட ஆரவாரமா இல்லாம, எளிமையா சந்தோஷமா இந்த விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவோம். அதுதான் விநாயகருக்கும் பிடிக்கும்!

தொடர்புக்கு - drpt.feedback@gmail.com

Tags:    

Similar News