null
அழகும் அருளும் ஓரிடத்தில்- உவகையூட்டும் உடுப்பி
- பழமையான சந்திரமவுலீசுவரரையும், அனந்தேசுவரரையும் வணங்கி, உடுப்பியின் புகழ்பெற்ற கிருஷ்ணரைக் காண்போம்.
- பரசுராமர் உருவாக்கிய கர்நாடகாவின் புகழ்பெற்ற 7 முக்தித் தலங்களுள் உடுப்பியும் ஒன்று.
உடுப்பி என்றாலே நம் நினைவுக்கு வருவது கிருஷ்ணர் கோவில் தான். அந்தக் கண்ணனைப் பார்ப்பதற்கு முன், அருள்மிகு சந்திரமவுலீசுவரர் திருக்கோவில், அருள்மிகு அனந்தேசுவரர் திருக்கோவில் என்ற இரு சிவன் கோவில்களுக்கும் சென்று வழிபடுவது இங்கு மரபாகவே உள்ளது.
உடுப்பி என்ற பெயர் கூட சிவனின் பெயரில் இருந்து வந்தது தானாம்! 'உடுபா' என்றால் சந்திரனைத் தலையில் தாங்கிய சிவனைக் குறிக்குமாம்.
முதலில் பார்த்து வணங்க வேண்டியது சந்திரமவுலீசுவரரை. தட்சனிடம் பெற்ற சாபத்தால் தேய்ந்த சந்திரன், ஈசனை வணங்கி சாபம் நீங்கப் பெற்ற தலம். கிருஷ்ணர் கோவிலுக்கு எதிரே உள்ள சிறிய கோவில். கேரள கட்டிடக் கலையில் கட்டப்பட்டுள்ளது
அனந்தேசுவரர் கோவிலும் அருகிலேயே உள்ளது. துளு நாட்டுப் பகுதியில் உள்ள கோவில்களில் இக்கோவில் தான் மிகப் பழமையானது என்று கூறப்படுகிறது.
முன்புறம் கல்லால் ஆன விளக்குத் தூண், பெரிய சிற்ப அழகு நிறைந்த பலிபீடம் உள்ளன. இதுவும் கேரள பாணிக் கோவில் தான். கருவறை நீண்டு, பின் புறம் தூங்கானை அல்லது யானையின் பின்புறம் போன்ற அமைப்பில் அழகிய கோவில். திருச்சுற்று, மதிலை ஒட்டிய நீண்ட மண்டபத்துடன் உள்ளது.
இக்கோவிலுக்குத் தனித்துவமான சிறப்பு உண்டு. சிறிய கருவறையில் லிங்கத் திருமேனி உள்ளது. இங்கு லிங்கத்தில் அரனும் அரியும் இணைந்து காட்சி அளிப்பதாகக் கூறப்படுகிறது.
கருவறையின் நிலை வாயில் வெள்ளியால் அழகு படுத்தப்பட்டுள்ளது. மேற்புறத்தில் வெள்ளித்தகடு போர்த்தி, சங்கு, சக்கரம் இருபுறமிருக்க, லிங்க வடிவில் ஆதிசேடன் குடைபிடிக்க மழுவேந்தி அமர்ந்த நிலையில் பரசுராமர் இருக்கிறார். மாறுபட்ட வடிவமாக இருந்தது.
இந்த இரண்டு சிவன் கோவில்களும் மத்வர் ஏற்படுத்திய உடுப்பி கிருஷ்ண மடத்தின் பராமரிப்பில் உள்ளன.
பழமையான சந்திரமவுலீசுவரரையும், அனந்தேசுவரரையும் வணங்கி, உடுப்பியின் புகழ்பெற்ற கிருஷ்ணரைக் காண்போம்.
பலகணி வழி வடிவம் காட்டும் உடுப்பியின் பன்மாயக் கண்ணன்.
'தென் இந்தியாவின் மதுரா' எனப் போற்றப்படுகிறது உடுப்பி. மதுராவின் குட்டிக் கண்ணனைப் போல் இங்கும் மிக அழகிய பாலகிருஷ்ணராக எழுந்தருளி இருக்கிறார். அவரை ஒன்பது துளைகள் கொண்ட பலகணி வழியாக மட்டுமே பார்க்க முடியும்.
பரசுராமர் உருவாக்கிய கர்நாடகாவின் புகழ்பெற்ற 7 முக்தித் தலங்களுள் உடுப்பியும் ஒன்று.
உடுப்பி கிருஷ்ணர் கோவில் நடைமுறை சடங்குகள் கிருஷ்ணரைக் குழந்தையாகப் பாவித்து, அவரை எழுப்புவது, குளிப்பாட்டுவது, அவருடன் விளையாடுவது, தயிர் கொடுப்பது, பாடுவது, பல்லக்கில் அழைத்துச் செல்வது, தூங்க வைப்பது என்றே 14 பூசைகளாக, காலை 5.30 மணி முதல் இரவு 8.50 மணிவரை அமைந்துள்ளன. இறுதி பூசையில் மணிச்சத்தம் இல்லாமல் தாலாட்டுப்பாடி, தொட்டிலை ஆட்டி தூங்க வைக்கப்படுகிறார்.
இந்தக் கிருஷ்ணர் எப்படி வந்தார் தெரியுமா? பல்லாயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம். துவாரகையின் அரசராகக் கிருஷ்ணர் இருக்கிறார். கண்ணனின் சிறுவயது லீலைகளைக் கண்டுகளிக்கும் பேறு பெறாத தாய் தேவகிக்கு, அவற்றைக் காண ஆசை வந்தது. தாயின் ஆசையை நிறைவேற்ற குட்டிக் கண்ணனாய் வந்து, வெண்ணெய் திருடி, குறும்புகள் செய்து அன்னையிடம் கொஞ்சுகிறார். அதைப் பார்த்த ருக்மணி அந்த அழகில் மயங்கி, தேவதச்சன் விஸ்வகர்மாவை சாளக்கிராமத்தில் பாலகிருஷ்ணர் வடிவத்தைச் சிலையாக வடிக்கச் செய்து வழிபடுகிறாள். மக்கள் அனைவரும் சந்தனம் பூசி வழிபட்டனர்.
காலம் சென்றது. கிருஷ்ணரும் உலக வாழ்வை விட்டு வைகுந்தம் செல்கிறார். துவாரகையைக் கடல் கொண்டது. சிலையும் களிமண் மூடிக் கல்லாக கடலில் புதைந்தது.
13ம் நூற்றாண்டு. அப்பொழுதே புகழ்பெற்ற புனிதத் தலமாக, உடுப்பி இருந்திருக்கிறது. அங்குள்ள அனேந்தேசுவரரை வேண்டிப் பிறந்த ஆனந்ததீர்த்தர் என்ற மகான் வாழ்ந்து வந்தார். இவரே குரு மத்வாச்சாரியாராக துவைத தத்துவ நெறி தந்தவர். ஆதிசங்கரர் அருளிய அத்வைத நெறிக்கு - உள்பொருள் ஒன்றே என்று கூறும் - மாற்றாக, இறையும் உயிர் உலகமும் மாறுபட்டவை என்று கூறுவது துவைதம்.
மத்வர் உடுப்பியின் மால்பே கடற்கரையில் தியானத்தில் இருந்தபோது, கடலில் புயலில் தத்தளித்த ஒரு கப்பலை, தன் மேல்துண்டை வீசிப் பத்திரமாகக் கரை சேரச் செய்தாராம். கப்பலின் தலைவன் நன்றியாக, கப்பலில் இருக்கும் எதையும் எடுத்துக் கொள்ளுமாறு வேண்ட, மத்வர் எடைப்பாரமாக வைக்கப்பட்டிருந்த ஒரு கல்லை மட்டும் எடுத்துக் கொண்டாராம்.
கல்லின் மேற்புறம் இருந்த மண் உடைய, கோபிசந்தனம் பூசப்பட்ட பாலகிருஷ்ணர் தெரிந்தார். தற்போது மத்வ சரோவர் என்று அழைக்கப்படும் திருக்குளத்தில் நீராட்டி, வழிபட்டனர்.
மத்வர் உடுப்பியில் கிருஷ்ணருக்காகத் திருக்கோயில் அமைத்தார். வழிபாடு தொடர்ச்சியாக நடைபெற எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து, ஸ்ரீ கிருஷ்ண மடம் என்று எட்டு மடங்களையும் உருவாக்கி, ஒவ்வொரு மடமும் 2 ஆண்டுகளுக்கு நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையையும் உருவாக்கினார். அதன்படியே இன்றுவரை நடந்து வருகிறது.
ஒவ்வொரு மடத்தலைவரும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோவிலின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்கும் விழா 'பர்யாயா திருவிழா' என்று உடுப்பியில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. உடுப்பியின் பழமையான சிவன் கோவில்கள் சென்று சந்திரமவுலீசுவரரையும், அனந்தேசுவரரையும் வணங்கிய பின்னே பர்யாயா சுவாமிகள் கிருஷ்ணன் கோவில் செல்கிறார்.
நாமும் அவ்வாறே இரு கோவில்களும் சென்று வணங்கி, எதிரே இருக்கும் கிருஷ்ணர் கோவிலுக்குச் செல்கிறோம். கோவில்கள்களைச் சுற்றியே எட்டு மடங்களும் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்தே ஸ்ரீ கிருஷ்ண மட வளாகம் உள்ளது.
கோவிலுக்குள் வரிசை செல்லும் வழியில் செல்லும் போது, திருக்கோவில் அமைப்பைச் சரியாகக் காண முடிவதில்லை. ஏதோ வழியில் சன்னதி அருகே சென்றுவிடுகிறோம். இங்கே கிருஷ்ணரை ஒன்பது துளைகள் கொண்ட, வெள்ளி வேய்ந்த பலகணி வழியாக மட்டுமே காணமுடியும். 'நவக்கிரக கிண்டி' என்று கூறப்படும் இப்பலகணியில் மாலின் 10 அவதாரங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
20 அங்குல உயரத்தில் மிக அழகாக, கையில் கோலுடன், தனிமையில் அமைதி, ஞானம் விளங்க நின்று கொண்டிருக்கிறார்.
கருவறை நிலைகள், முன்பக்கச்சுவர்கள், முன்னால் இருந்த சிறுமண்டபம் எல்லாம் வெள்ளியால் பளபளக்கும் அலங்காரங்கள்.
சுவாமி மேற்கு நோக்கி இருக்கிறார். மத்வர் கிழக்கு நோக்கி தான் அமைத்திருந்தாராம். கோவிலுக்குள் வரமுடியாத தாழ்ந்த குலத்தைச் சார்ந்த கனகதாசர் என்ற உத்தம பக்தருக்காகத் திரும்பி, சுவரின் கீறல் வழியே காட்சி அளித்தாராம். கனகதாசா பலகணி என்று இருக்கிறது. கருவறைக்கு மேல் தங்கக் கோபுரமும் உள்ளதாம். கிழக்குக் கோபுரம், தீபஸ்தம்பம், அதையடுத்து 'கிருஷ்ண' 'கிருஷ்ண' என மணியோசையுடன் அமைதி தரும் அழகிய சந்திரசாலா மண்டபம், கனகதாசா பலகணி, அனுமார், மத்வர், சுப்ரமணியர் சன்னதி, போன்ற பலவற்றை இரவு நேரம் சென்றதால் பார்க்கவில்லை. கர்நாடகக் கோவில்களில் முருகர் சுப்ரமணியராக நாகக்கடவுளாக இருக்கிறார்.
உடுப்பி அன்னப் பிரம்மசேத்திரமுமாகும். அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது.பழங்காலத்தில் இருந்து புகழ்பெற்ற உடுப்பியின் சமையலும் உலகப்புகழ்பெற்றது. அவற்றின் வேர்களை உடுப்பி கிருஷ்ணனின் அஷ்ட மடங்களில் காணலாம். வெங்காயம், பூண்டு இல்லாமல், மிகவும் சாத்வீகமான முழுத் தானியங்கள், காய்கறிகள், பழங்களுடன் சாத்வீகமான உணவு முறை. இன்று உடுப்பி மசால்தோசை, மற்ற உணவுகள் எங்கும் கிடைக்கின்றன.பல்வேறு உடுப்பி சிறப்பு உணவு வகைகளை ருசிக்கலாம். மால்பே கடற்கரை, கபா கடற்கரை, அழகிய செயிண்ட் மேரி தீவு பார்த்து ரசிக்கலாம்.
தொடர்புக்கு-anarchelvi@gmail.com