- ஒவ்வொரு மனிதனும் உணர்ச்சிகளின் குவியலாகவே இருக்கிறான்.
- கோபமும் ஒரு கட்டுக்குள் அடங்கிவிடக் கூடியதாக இருக்க வேண்டும்.
கோபத்தைக் குணமாக்கும் வித்தக வாசகர்களே! வணக்கம்.
"எனக்கு வருகிற கோபத்திற்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்பது எனக்கே தெரியாது!"
என்று அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பல மனிதர்கள் அடிக்கடி கூறக் கேட்டிருப்போம்; ஏன் நாமே கூட இந்த வசனத்தை அடிக்கடியோ அல்லது அவ்வப்போதோ கூறுபவர்களாகவும் இருந்து கொண்டிருப்போம்.
ஒவ்வொரு மனிதனும் உணர்ச்சிகளின் குவியலாகவே இருக்கிறான். ஆனால், அவன் தனக்குள் அவ்வப்போது உருவாகும் உணர்ச்சிப் பெருக்குகளை எவ்வாறு திறம்படக் கையாண்டு மீடேறுகிறான் என்பதைப் பொறுத்தே அவன் போற்றுதலுக்குரிய மனிதனாக மதிக்கப் படுகிறான்.
அன்பு, கருணை, இரக்கம், மகிழ்ச்சி, கோபம், அழுகை, துணிச்சல், பரபரப்பு, சலிப்பு, சகிப்புத்தன்மை போன்றவை மனித மனங்களின் உணர்வுநிலைகள், அவை அவ்வப்போது மனிதர்களின் வாழ்நிலைச் சூழலுக்கேற்ப அவர்களுக்குள் தோன்றி அவர்களைப் பலவகை குணம் சார்ந்த மனிதர்களாக மாற்றுகின்றன. மனிதர்களில் சிலரைநாம் அன்பானவர், பொறுமைசாலி, அகிம்சாவாதி, கருணையானவர், கோபக்காரர், அழுமூஞ்சி என்றெல்லாம் அடையாளப்படுத்தி அழைப்பதற்கு இந்த உணர்ச்சி மேலீடுகளே காரணம்.
மனித மனங்களுக்குள் எத்தனை விதமான உணர்ச்சிகள் தோன்றி மறைந்தாலும், ஒட்டுமொத்த மனித குலமும் வெறுக்கின்ற ஒரு உணர்ச்சி "கோபம்" மட்டுமே!. கோபம் என்பது மனிதர்களுக்கு மட்டுமே வரும் என்பதில்லை!; எறும்பு தொடங்கி யானை வரை உலகில் உள்ள சகல உயிரினங்களுக்கும் கோபம் வரத்தான் செய்கிறது. அதுமட்டுமா? நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களின் அடக்கமாகிய இயற்கைக்கும் கூடச் சீற்றம் எனும் கோபம் தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது.
ஐம்பூதங்களின் கூட்டாகிய இயற்கையின் கோபத்தையும், ஐந்தறிவு உயிர்களாகிய பிற ஜீவராசிகளின் கோபத்தையும் ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, இவற்றையெல்லாம் அடக்கியாளும் ஆற்றல் படைத்த ஆறறிவு உயிர்களாகிய மனிதர்களுக்கு வருகிற கோபம் குறித்தே இங்கு பார்ப்போம்.
'கறை நல்லது' என்று சோப்பு விளம்பரங்களில் வருவதைப்போலவே மனிதனுக்குக் கோபம் வருவதும் ஒருவகையில் நல்லது என்றே உளவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்தக் கோபமும் ஒரு கட்டுக்குள் அடங்கிவிடக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் அந்த வித்தகம் தெரியாமல்தான் மனித குலம் தடுமாறிக்கொண்டிருக்கிறது.
மனிதன் சிந்திக்கத் தெரிந்தவன். அவனுக்கு வருகிற எல்லா உணர்ச்சிகளுமே அவன் சிந்திக்கத் தொடங்குவதற்கு முன்பே அவனிடத்தில் தோன்றி விடுகின்றன. ஆயினும் சிந்தனையெனும் அறிவின் வீரியம் கொண்டு, கோபம் தவிர்ந்த மற்ற உணர்ச்சிகளை அவன் உடனே கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடிகிறது; வந்த பிறகு கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறித் தவித்து, அவன் நிறைந்த பாதிப்புகளுக்கு ஆளாவது கோபத்தினால் மட்டுமே!. அதனால்தான் திருவள்ளுவரும்,'சினமென்னும் சேர்ந்தாரைக்கொல்லி' என எச்சரிக்கிறார்.
மனிதனுக்குக் கோபம் அவனது அகம், புறம் எனும் இருவகைச் சூழ்நிலைகளாலும் உருவாகிறது. அன்றாடம் வாழ்வியல் சிக்கல்கள் தருகிற மன அழுத்தங்கள் அவனுக்கு எதைப் பார்த்தாலும், எது நிகழ்ந்தாலும் ஒரு வித எரிச்சலைத் தருவதாக அமைந்து விடுகிறது; எரிச்சல் திடீர் கோபத்திற்குக் காரணமாகி விடுகிறது. இது மனிதனின் அகம் சார்ந்த பிரச்சினை. இதனை மாற்றுவதற்கு மனத்தில் அழுத்தமும் பரபரப்பும் நிகழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
என்ன நடந்தாலும், அது நம்மால் மட்டுமே நடந்தது என்று மகிழவோ! அல்லது வருந்தவோ கூடாது. ஏனெனில் எந்த நிகழ்வும் தனிமனித முயற்சியினால் மட்டும் நடந்து விடுவதில்லை. காலம், இடம், சூழல் எனப் பல காரணிகளும் அவற்றோடு பின்னிப் பிணைந்துள்ளன. நாம் செய்கிற நிகழ்வுகளை முயன்று பொறுமையோடு செய்ய வேண்டும். பிறகு அதன் முடிவுகளை அதன் போக்கிலேயே போக விட்டு ஏற்றுக் கொள்ளவும் திருத்திக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும். அதிக எதிர்பார்ப்பும், ஆசையும் ஏமாற்றத்திலும் கோபத்திலுமே முடிகின்றன.
மனிதர்களும் நிகழ்வுகளும் நாம் எதிர்பார்த்தபடி எப்போதும் ஒரே மாதிரியே செயல்பட மாட்டார்கள். நாம் தான் நிகழ்வுகளுக்கேற்ப நம்மைத் தளர்த்திக் கொள்ளப் பழகிக்கொள்ளவேண்டும். சில குடும்பங்களில் கணவனுக்கு மனைவியைப் பார்த்தாலும், மனைவிக்குக் கணவனைப் பார்த்தாலும், பெற்றோர்களுக்குப் பிள்ளைகளைப் பார்த்தலுமே கோபம் வந்து விடுகிறது. வீட்டுக்குள்ளேயே இப்படி என்றால் வெளியில் சொல்லவும் வேண்டுமோ?.
புற நிலையில், வீட்டைவிட்டு வெளியில் வந்தாலே சிலருக்கு யாரைப் பார்த்தாலும் கோபம் வருகிறது. அலுவலகத்தில் பணியாற்றும் சில குறிப்பிட்ட பணியாளர்களைப் பார்த்தால் உடனே கோபம் வந்து விடுகிறது. அவர்கள் எப்போதோ ஒருமுறை இழைத்த தவறுக்காக எப்போதும் கோபப்பட்டால் எப்படி?. சிலருக்கு போக்குவரத்து நெருக்கடிகளைப் பார்த்தால் உடனே கோபம் வந்துவிடும்; இரத்த அழுத்தம் ஏற, வாய்க்கு வந்தபடித் திட்டத் தொடங்கி விடுவார்கள்.
ஓர் அரசன். கொஞ்சம் ஆணவம் மிக்கவன். அவனைப்பார்த்து ஓர் உதவி கேட்பதற்காக ஒரு துறவி அரண்மனைக்கு வந்தார். அரண்மனை தர்பார் மண்டபத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த படியே துறவியைப் பார்த்து, "வாருங்கள் எருமையாரே!" என்று வரவேற்றான் அரசன். துறவியும் மலர்ந்த முகத்தோடு "வருகிறேன் கடவுளாரே!" என்று மறுமொழி பகர்ந்தான்.
துறவியாரின் கண்ணியமான பதிலுரை கேட்டவுடன், மரியாதையுடன் சிம்மாசனத்திலிருந்து இறங்கித் துறவிமுன் வந்து நின்ற அரசன், "துறவியாரே! நான் தங்களை எருமை என்று அழைத்தும்கூட நீங்கள் கோபப்படாமல், என்னைக் கடவுள் என்று கூறியதன் காரணம் என்ன?" என்று கேட்டான்.
புன்னகைத்தவாறே துறவி பதில் சொன்னார், "அரசே! எவரெவர் மனத்தில் "என்னென்ன இருக்கிறதோ அதுதான் வார்த்தையாக வரும். உங்கள் மனத்தில் என்ன இருக்கிறதோ அதைச் சொல்லி நீங்கள் என்னை வரவேற்றீர்கள். என் மனத்தில் என்ன இருந்ததோ அதைச்சொல்லி நான் உங்களை அழைத்தேன்". இப்போதும் பாருங்கள்! கோபம் துளியும் கலவாத துறவியின் வார்த்தைகளை!.
உடனே அரசன் நெடுஞ்சான் கிடையாகத் துறவியின் காலடிகளில் விழுந்து தனது தவறுக்கு வருந்தினான்.
பொதுவாகக் கோபம் என்பது முற்றும் துறந்த முனிவர்களுக்கே அதிகம் வருமெனப் புராணங்கள் கூறுகின்றன. முனிதல் என்றால் வெறுத்தல் என்றும் சினம்கொள்ளுதல் என்றும் பொருள். முனிவர்கள் உலக ஆசாபாசங்களை வெறுத்து ஒதுக்கியவர்கள்; அதே நேரத்தில் பொருந்தாத செயல்களைக் கண்டால் உடனே கோபம் கொண்டு சபித்து விடவும் செய்வார்கள்.
அப்படிப்பார்க்கும் போது குணம் என்னும் குன்று ஏறி நிற்கின்ற குணவான்களுக்கே கோபம் படக்கென்று வந்து விடும் என்கிறார் திருவள்ளுவர். ஆனால் வந்த கோபம் கனப்பொழுதில் மறைந்தும் விடுமாம்.
மனிதர்களுக்கு வருகிற கோபங்களைப் பல வகைகளில் பகுக்கலாம். பொது நலம் சார்ந்து வருகிற கோபங்களை நாம் ஆக்க பூர்வமானவை என்று கூறலாம்; இவற்றால் கோபப்படுவோருக்கோ சமுதாயத்திற்கோ எந்தத் தீமையும் வராது. சமூகத்தில், திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் போன்ற பல கவிஞர்கள் மற்றும் ஆன்மிக, சமுதாயச் சீர்திருத்த வாதிகளின் கோபங்கள் நன்மைகளையே விளைவித்திருக்கின்றன. தன்னலம் சார்ந்த நிலைகளில் வருகின்ற தன்முனைப்புக் கோபங்களே கொள்பவர்களையும் கொல்பவைகளாக இருக்கின்றன.
மகாத்மா காந்தியடிகள் ஒருமுறை வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்குக் கப்பலில் பயணமானார். இப்போது வான்வழியே பயணம் வந்துவிட்டது; பத்து மணிநேரத்தில் சென்று விடலாம். அப்போதெல்லாம் பயணம் இரண்டு வாரங்களுக்கு மேலாகும். காந்தியடிகள் எங்கு பயணம் செய்தாலும் தன்னுடைய கைராட்டையையும் கையோடு எடுத்துச் செல்வது வழக்கம். பயண நாள்களில், கப்பலின் மேல்பகுதிக்கு வந்து ஓரிடத்தில் அமர்ந்து கைராட்டையில் நூல் நூற்றார்.
லண்டனுக்குப் பயணம் செய்து கொண்டிருந்த சக பயணிகளுக்கு இவர் காந்தி என்பதும், இந்திய விடுதலைக்காகப் பாடுபடும் தலைவர் என்பதும் தெரியும். இவரது புன்னகை முகமும் எளிய ஆடையும் உடன் பயணித்த பல வெள்ளையரை வசீகரித்தாலும், ஒரு வெள்ளை இளைஞனுக்கு மட்டும் இவரைப் பார்த்தாலே கோபம் பொத்துக்கொண்டு வந்தது; எரிச்சல்
எரிச்சலாக இருந்தது. இரவு முழுவதும் கப்பலில் தனது அறையில் அமர்ந்து, தனது மனத்தில் தோன்றிய கெட்ட வார்த்தைகளையெல்லாம் போட்டுக் கத்தை கத்தையாகத் தாள்களில் திட்டிஎழுதி, மறுநாள் காலை கப்பலின் மேல்பகுதிக்கு வந்து, ராட்டை நூற்றுக்கொண்டிருந்த காந்தியடிகளின் கரங்களில் திணித்துவிட்டுச் செல்வான். ஒவ்வொரு நாளும் மலர்ந்த புன்னகையோடு அவன்தரும் தாள்களை வாங்கி கொள்வார் காந்தி.
கப்பல் லண்டனை அடையப்போகிற நாளுக்கு முதல் நாள்; அப்போதும் ஒரு கத்தைத் தாள்களோடு வந்து நின்றான் வெள்ளை இளைஞன். அவன் தருவதற்கு முன்பாகவே சிரித்த முகத்தோடு கரங்களை நீட்டினார் காந்திஜி. அவன் தரவில்லை; மாறாகப் பேசினான்;" இத்தனை நாட்களாக உங்களைக் கண்டபடித் திட்டித் தாள்களைத் தந்தேனே! படித்தீர்களா? உங்களுக்கு என்மீது கோபமே வரவில்லையா?; நாளுக்குநாள் புன்னகையும் அன்பும் பெருகியபடி என்னைப் பார்த்தீர்களே?" கேட்டான்.
காந்தியடிகள் சொன்னார்," எனக்கு உதவி செய்பவர்கள் மீது நான் எப்போதும் கோபம் கொள்வதே இல்லை. எங்குமே வெளியே சென்று பொருள்கள் வாங்க முடியாத இந்தக் கப்பலில் நாள்தோறும் எனக்குக் கத்தை கத்தையாகத் தாள்கள் கிடக்கின்றன. அதிலும் ஒருபக்கமே நீங்கள் எழுதியிருப்பதால், மறுபக்கங்களில் எனது குறிப்புகளை எழுத நான் பயன்படுத்திக் கொள்கிறேன். மேலும் இந்தத் தாள்களை ஓர் அழகான குண்டூசியில் இணைத்துவேறு தருகிறீர்கள். ஒரு நாளைக்கு ஒரு குண்டூசி லாபம். உதவி செய்யும் உங்களைக் கோபித்துக் கொள்ளவே மாட்டேன்".
தவறுக்கு வருந்து தன்கோபம் அழித்தான் அந்த வெள்ளை இளைஞன்.
கோபம் என்பது ஒருநிமிடப் பைத்தியக் காரத்தனம். வந்த நொடிகளில் அதனை மட்டுப்படுத்தத் தவறிவிட்டால் அது தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள், பொருள்கள், செயல்கள் மட்டுமல்ல…தன்னையே அழித்துக்கொள்ளவும் தூண்டும் கொடுமையானது.
மனத் தூய்மை, மகிழ்ச்சியில் ஆழும் தன்மை, எல்லா உயிரினங்களுக்குள்ளும் தன்னையே காணும் தன்மை, செயல்களில் பொதுநலம் காணும் புதுமை, சகித்துக் கொள்ளும் சமத்துவப் பாங்கு, எட்ட நின்று காத்திருக்கும் பொறுமை.. இவை போதும் கோபத்தைக் குணமாக மாற்ற!.
எந்த மாற்றமும் ஒரு நாளில் நிகழ்ந்து விடாது. கோபத்தைப் பழக்கிப் பழக்கிப் பண்படுத்தினால் குணமே கோபுர மாகும்!
தொடர்புக்கு 9443190098