- அடுத்த வாழ்விடப் படையெடுப்பு மீண்டும் கிராமங்களை நோக்கியதாகக் கூட இருக்கலாம்.
- உலகின் எல்லாத் தூக்கமும் அங்கே வந்து தவமாய் தவம் இயற்றும்.
வாழ்க்கையின் மீது தெளிவான பார்வை கொண்டு வாழத் துடிக்கும் வாசகர்களே! வணக்கம்.
இந்த உலகில் உள்ள ஜீவராசிகளை மனிதர்கள், மனிதர்கள் அல்லாதவை என இருவகையாகப் பகுக்கலாம். மனிதர்களிலும், ஆண்கள், பெண்கள்... பிறகு அவர்களிலும், குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், நடுவயதினர், முதியவர் எனப் பகுக்கலாம். பிறகு மனிதர்களை ஜாதி, இனம், நாடு, மொழி, மதம், தொழில், உறவுமுறை அடிப்படைகளிலும் பகுத்துக்கொண்டே போகலாம். இப்படிப் பகுத்துப் பார்க்க, பகுத்துப் பார்க்க, பார்வைகள் விரிந்துகொண்டே போகும்; பொருள்களும் மாறிக்கொண்டே போகும்.
ஒரு பொருளின் மீதோ அல்லது ஒரு விஷயத்தின் மீதோ எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான பார்வை அமைந்து விடுவதில்லை. மனிதருக்கு மனிதர், காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம் பார்வைகளும் கருத்துக்களும் மாறுகின்றன. ஒரே தண்ணீர், பெய்யும்போது சாரலாகவும், மழையாகவும், புயலாகவும், மலையில் இருந்து கொட்டும்போது அருவியாகவும், காடுகள் வயல்வெளிகள் வழியே நடக்கும்போது நதியாகவும், பெரும்பெரும் பள்ளங்களில் தேங்கும்போது, ஏரியாகவும், கண்மாயாகவும், குளமாகவும், ஊருணியாகவும், குட்டையாகவும், நெடுக நடந்து பெரு வெள்ளத்தில் கலந்து நிறையும்போது கடலாகவும் பார்க்கப்படுகிறது; போற்றப்படுகிறது.
'வசதியான வீடு' என்பதுகூடக், காலத்துக்குக் காலம், இடத்துக்கு இடம், மனிதருக்கு மனிதர் பொருள் மாறுபடத்தான் செய்கிறது. ஒருகாலத்தில் மழைக்கு ஒழுகாத ஓடுவேய்ந்த காரை வீடு அங்கே விளைபொருள்களைப் பாதுகாத்து வைக்க ஒன்றிரண்டு அறைகள், ஒரு சின்ன அடுப்படி இவை இருந்தாலே வசதியான வீடுதான். படுப்பதற்குக் கயிற்றுக் கட்டில்களை வானம் பார்க்க வீட்டுக்கு வெளியில் மரத்தடியில் போட்டுவிட்டாலே போதும்; உலகின் எல்லாத் தூக்கமும் அங்கே வந்து தவமாய் தவம் இயற்றும்.
காலம் மாறியது. கான்கிரீட் கலாசாரம் வந்தது. பெரும்பெரும் கட்டிடங்கள் உயர உயரமாய் எழுந்தன; ஆளுக்கொரு அறை; நடக்க, படிக்க, டிவி பார்க்க, சமைக்க, சாப்பிட, கழிக்க.. தனித்தனி அறைகள். இப்படி அரண்மனை போன்ற வீடுகள் வந்தன.
தற்போது நகரங்களின் பெருக்கத்தினால் வாழிடங்கள் சுருங்கிக் கொண்டே வருகின்றன. அடுக்கக வாழ்க்கையில் புறாக்கூண்டுகள் போன்ற வீடுகள்; ஐந்நூறு சதுர அடிக்குள் இரண்டு மூன்று அறைகள் வைத்த வீடுகள்; சுவர்களே அறைகளாகிப்போன அதிசயங்கள்!. கேட்டால் இந்த நூற்றாண்டு வாழ்வியலுக்கு ஏற்ற வசதியான வீடு இதுதான் என்று புதுக்கண்ணாடி போட்டுப் புதுப்பார்வை காட்டுகிறார்கள். அடுத்த வாழ்விடப் படையெடுப்பு மீண்டும் கிராமங்களை நோக்கியதாகக் கூட இருக்கலாம்.
பொதுவாகவே நம்மிடத்தில் ஓர் எண்ணம் உண்டு. நகரத்தில் இருப்பவர்கள் எல்லாம் அறிவாளிகள், படித்தவர்கள், பணக்காரர்கள் என்றும் கிராமத்தில் வாழ்பவர்கள் எல்லாம் கைநாட்டு, பிழைக்கத் தெரியாதவர்கள், ஏழைகள் என்றும் பார்க்கிற பார்வையே அது. தலைமுறை தலைமுறையாக இந்த எண்ணம் இருந்து வந்தாலும், எதையுமே புதுமையாகப் பார்க்கிற இன்றைய இளைய தலைமுறையின் பார்வை எப்படி இருக்கிறது?
ஒரு வித்தியாசமான அனுபவக்கதை. நகரத்தில் வசதியான பங்களா கட்டிப் பெரும் பணக்காரராக வாழ்கிறார் ஒருவர். அவரிடம் வெளிநாட்டுக் கார் உண்டு, வீட்டுக்குள்ளேயே தோட்டம் உண்டு; தோட்டத்தின் நடுவில் ஒரு நீச்சல் குளமும் உண்டு. அவருக்கு ஒரே மகன்; நகரத்திலேயே பிரபலமான பள்ளியொன்றில் அதிகப் பணம் கட்டி ஐந்தாம் வகுப்புப் படித்து வருகிறான். மகன் வறுமையின் நிழல்கூடத் தெரியாமல் வளர்ந்து வருகிறான்; அவனுக்கு வறுமை என்றால் என்ன? வறுமையில் மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? என்பதை நேரடியாக உணர்த்திக்காட்ட எண்ணினார் அவனது அப்பா.
அவரது பூர்வீகக் கிராமத்திற்கு மகனை அழைத்துச் சென்று, அங்குள்ள உறவினர் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கினார். அந்த இரண்டு நாட்களும், மகன் ஆர்வத்தோடு கிராமத்தைச் சுற்றிப் பார்த்தான்; கிராம மக்களோடும் சிறுவர்களோடும் விருப்பமாகப் பழகினான். தந்தை மகனிடம் எதைப்பற்றியும் பேசவுமில்லை; கேட்கவுமில்லை. இரண்டுநாள் கழிந்ததும் அப்பாவும் மகனும் அவர்களது ஏசி காரில் நகரம் நோக்கிக் கிளம்பினர்.
"மகனே! நாட்டில் எவ்வளவு வறுமையோடு மக்கள் இருக்கிறார்கள்! என்பதைப் பார்த்தாயா? கேட்டார் அப்பா.
"ஆமாம் அப்பா! நகரத்தில் நம்முடைய வீட்டில் ஒரே ஒரு நாய் வளர்க்கிறோம். இங்கோ கிராமத்தில் வீட்டிற்கு நாலு நாய்கள் இருக்கின்றன. நகரத்தில் நம் வீட்டு அறைகளில் மின்சாரத்தைச் செலவழித்துக், கதவுகளை அடைத்து, ஏசி போட்டு, மின் விசிறிகள் போட்டுத் தூங்குகிறோம். இங்கோ எந்தச் செலவுமில்லாமல், இயற்கையான குளுகுளு காற்று வீடு முழுக்க வருகிறது. நம் வீட்டில் உள்ள நீச்சல்குளம் மிகச் சிறியது; ஆனால் இங்கோ மலையடிவாரம் வரை நீண்ட மிகப்பெரிய ஸ்விம்மிங் பூல் இருக்கிறது. நகரத்தில் நம் வீட்டைச் சுற்றிப் பாதுகாப்புக்குப் பெரிய மதில்சுவர்களை எழுப்பியிருக்கிறோம்.ஆனால் இங்கோ எல்லாரும் நண்பர்கள் என்பதால் வீடுகளுக்குச் சுற்றுச் சுவர்களே இல்லை. நகரத்தில் நாம் நமக்கான உணவுப்பொருள்களைக் காசு கொடுத்து வாங்குகிறோம்; ஆனால் இங்கோ அவர்களுக்கான உணவை அவர்களே விளைவித்துக் கொள்கிறார்கள்.
உண்மையில் நகரத்தில் வாழும் நாம் எவ்வளவு பெரிய ஏழைகள் என்பதை இப்போது நான் உணர்ந்து கொண்டேன். நன்றிகளப்பா!" என்றான் மகன். அப்பா வாயடைத்துப் போனார். இதில் இப்படியுமொரு பார்வை இருப்பதை நமக்கு உணர்த்தி விட்டது இளையதலைமுறை.
எதுவுமே பார்க்கிற கண்ணோட்டத்தோடு பார்க்கப்பட்டால் அதன் உண்மைத்தன்மை வெளிப்பட்டே தீரும். ஒரு தாத்தா தன்னுடைய பேரனுக்கு விளையாட மரத்தினால் செய்யப்பட்ட யானை பொம்மை ஒன்றை வாங்கிவந்து தந்தார். பொம்மையைப் பார்த்ததும், அந்த ஒரு வயதுப் பேரன், "ஐயோ! யானை!" என்று மழலையில் அலறிப் பயந்து விலகினான். தாத்தா சொன்னார்," இது யானை இல்லை பயப்படாதே". அருகில் நின்றிருந்த குழந்தையின் அம்மா தனது அப்பாவிடம் கேட்டாள், " அது யானை இல்லாமல் வேறு என்னப்பா?" என்று. ''அது யானையில்லை! வெறும் மரம்! அவ்வளவுதான்" என்றார் பெரியவர். அது எப்படி யானை மரமாகும்?.
பார்வைகள் வேறுபட்டால், தேக்கு மரம் சிலருக்குக் கதவாகத் தெரியலாம்; சிலருக்குக் கட்டிலாகத் தெரியலாம்; சிலருக்கு மேசை நாற்காலிகளாகத் தெரியலாம். சில கலைக் கண்களுக்குக் காவியமாகும் சிற்பங்களாகத் தெரியலாம். அப்படித்தான் எதையும் உண்மையென நம்பிவிடும் குழந்தைக்கு அது யானையாகவே தெரிந்து விட்டது. பக்தனுக்கு தெய்வமாகவும் மற்றோர்க்குச் சிற்பமாகவும் கற்சிலைகள் தெரிவதைப் போலத்தான் இதுவும்.
எந்த விஷயத்தையும் தீவிரமாக யோசித்து, அதனைப் பூதாகரமாகப் பார்க்கிறவர்கள் சிலபேர் இருக்கிறார்கள். சிலர் எதையும் பார்த்தும் பார்க்காமல், வருவதை ஏற்று வாழ்ந்து விடுவோம் என்று வாழ்க்கையை லேசான பார்வையோடு விட்டு விடுபவர்களும் இருக்கிறார்கள். உண்மையில் இந்த இருவிதமான பார்வைகளுமே ஆபத்தான விளைவுகளையே கொண்டுவந்து சேர்க்கும். தீவிரமான பார்வையில் பேன் பெருச்சாளியாகத் தோன்றித் துன்பத்தில் ஆழ்த்தும்; லேசான பார்வையில், பெருச்சாளிகள்கூடப் பார்வைக்கு அகப்படாமல் வேதனைகளைப் பெருக்கும்.
ஆக, தீவிரமாகவோ, ஆர்வமில்லாமலோ பார்க்கிற பார்வைகளை ஒதுக்கி வைத்துவிட்டு உண்மையான அக்கறையோடு பொருள்களையும் செய்திகளையும் அணுகத் தொடங்கினால் ஆழ்ந்திருக்கும் உள்ளர்த்தம் உள்ளது உள்ளபடி வெளிப்பட்டு விடும்.
ஒரு தாய் ஒட்டகத்தைப் பார்த்து ஒரு குட்டி ஒட்டகம் கேள்வி கேட்டது,''ஏன் அம்மா நமக்கு மற்ற விலங்குகளைப் போலில்லாமல் குச்சி குச்சியாய் உயரம் உயரமாய்க் கால்கள் படைக்கப் பட்டிருக்கின்றன?"
"அதுவா? நெடிய பாலைவனங்களில் நாம் நடந்து செல்லும்போது, பாலைவன மணலில் நமது கால்கள் அடியாழத்திற்குப் புதையும் என்பதற்காக உயரமான கால்கள்!" என்று பதில் சொன்னது தாய் ஒட்டகம்.
"சரி அம்மா! குச்சிக்கால்களின் கீழே அகலம் அகலமான பாதங்களும் விரல்களும் எதற்காக?" கேட்டது குட்டி.
"ஆழமான பாலைவன மணல்வெளியில் நமது கால்களை எடுத்து வைக்கும்போது எளிதில் அவை புதைந்துவிடக்கூடாது என்பதற்காக" சொன்னது தாய்.
"சரி அம்மா! மற்ற விலங்குகளை விட நமக்கு மட்டும் ஏன் உயரமான திமில்கள் படைக்கப்பட்டிருக்கின்றன?" குட்டி கேட்டது.
''பாலைவனங்களில் பயணிக்கும்போது நெடுந்தொலைவுகளுக்குத் தண்ணீர் கிடைக்காது. எனவே நமக்கு வழித் தேவைக்கான தண்ணீரைத் திமில்களில்தான் சேமித்து எடுத்துச் செல்லவேண்டும். அப்படியொரு சிறப்பானதொரு வசதியைப் பாலைவனங்களில் வாழும் நமக்காக இயற்கையே வழங்கியிருக்கிறது." விளக்கமாகப் பதில் சொன்னது தாய் ஒட்டகம்.
தாயின் இவ்வளவு பதில்களையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட குட்டி ஒட்டகம் கடைசியாகக் கேட்டதே ஒரு கேள்வி,
" பாலைவனத்தில் வாழ்வதற்கான இவ்வளவு வாய்ப்பு வசதிகளோடு படைக்கப்பட்ட நாம், பின் ஏனம்மா இந்த மிருகக் காட்சி சாலையில் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?"
குட்டி ஒட்டகத்தின் இந்த மாறுபட்ட பார்வைக்கும், சிந்திக்க வைக்கும் கேள்விக்கும் பதிலைத் தாய் ஒட்டகம் எப்படிச் சொல்லும்?. பதிலளிக்க வேண்டியவர்கள், அவர்களைக் கூண்டில் அடைத்துள்ள நாம் தானே!?.
மரபு என்பது வழிமுறையாகப் போற்றிக் காப்பாற்றப்பட்டு வருவது. அதனை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தவும்படுகிறது. ஆயினும் பொருள்புரிந்த தன்மையிலேயே மரபு காக்கப்படுகிறது என்றால் மறு பார்வைக்கும் மறு கேள்விக்கும் அது ஆட்படுத்தப் படவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் காலப்போக்கில் அது பொருள்பொருந்தா நிலைக்குத் தள்ளப்பட்டு அர்த்தமற்றுப் போனால் அதன் மீது புதுப் பார்வை பாய்ச்சிப் புதுமையை ஏற்படுத்தியே ஆக வேண்டும்.
இங்கே தான் பார்வைகள் பலவிதப் பட்டாலும், காலத்திற்கும் வாழ்நிலைக்கும் தகுந்த பார்வையை, கண்ணோட்டத்தை நாம் ஏற்று நடந்தே ஆகவேண்டும். புதுமை என்பது மரபை அழித்து விட்டுப் புதிதாக ஒன்றை உருவாக்குவது கிடையாது. மரபையே புதிய கண்ணோட்டத்தில் மீட்டுருவாக்குவது; மரபின் வழித்தடத்தில் புதுமைப்பாதை சமைப்பது; அதன் மூலம் சமூகமும் மனிதமும் பயனுறும் வண்ணம் சிந்தனைகளைச் செலுத்துவது ஆகும்.
பார்வைகள் பலவிதம் தான். ஏற்றுக்கொள்வோம்.
அவற்றுள் எது ஆழ்ந்திருக்கும் உண்மை ஆன்மாவைக் காண்கிறதோ அதுவே சிறந்த பார்வை.
தொடர்புக்கு 9443190098