சிறப்புக் கட்டுரைகள்
null

இதயப் பாதிப்பை தடுக்கும் உடற்பயிற்சி

Published On 2024-07-06 11:15 GMT   |   Update On 2024-07-06 11:15 GMT
  • 108 வர்ம புள்ளிகள் ஆனது நமது உடலிலே எப்படி எங்கு தொடர்பு உடையது என்று பார்போம்.
  • நமது உடலிலே உயிர் ஆற்றல் ஆனது சிறு அசைவுகளோடு இருக்கும் போது காலம் எனப்படுகிறது.

அன்பார்ந்த வாசகர்களே, கடந்த பகுதியில் வர்மத்தை பற்றிய அறிமுகத்தை சிறிது பார்த்தோம். ஒரு காலத்தில் போர் கலைகளில் ஒன்றாக இருந்தது. பிறகு பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஆனால் இதன் அடுத்த வடிவமாக இந்த கலையானது ஆசிய கண்டம் முழுவதும் பரவி, பிறகு கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு இந்த கலையே கராத்தே, குங்பூ, அக்குபிரஷர், அக்கு பஞ்சர் என்று பரவியது.

இந்த வா்மக்கலை நம் உடலில் உள்ள நரம்புகளை இயக்கி, நோயை போக்கும் ஒரு அற்புத கலை ஆகும். ஒருவர் எதிர்பாராத விபத்து ஏற்பட்டு சுயநினைவை இழந்துவிட்டால், மயக்க நிலையில் உள்ளவரை, மீண்டும் சுயநினைவுக்கு வரவைக்கும் ஒரு அற்புத கலையாகும்.

இந்த வர்மக்கலையை கற்பதற்கு அடிப்படை தேவைகளாக மனக் கட்டுப்பாடு, தவம், அறவாழ்க்கை (ஒழுக்கம், கடமை, ஈகை) மற்றும் சாத்வீக குணம் உடையவர்களாக இருந்தால் இதில் வெற்றி பெற முடியும்.

இந்த 108 வர்ம புள்ளிகள் ஆனது நமது உடலிலே எப்படி எங்கு தொடர்பு உடையது என்று பார்போம்..

தலை உச்சி முதல் கழுத்து வரை - 25 வர்ம புள்ளிகள் உள்ளது.

கழுத்து முதல் தொப்புள் வரை - 45 வர்ம புள்ளிகள் உள்ளது.

தொப்புள் பகுதி - 9 வர்ம புள்ளிகள் உள்ளது.

கை பகுதி - 14 வர்ம புள்ளிகள் உள்ளது.

கால் பகுதி - 15 வர்ம புள்ளிகள் உள்ளது.

மொத்தம் - 108

இந்த வர்ம புள்ளிகள் 46 இடங்களில் ஒற்றை வர்மமாகவும், 62 இடங்களில் இரட்டை வர்மமாகவும் உள்ளது.

நமது உடலிலே மேல் பகுதி, உள் பகுதி, உள் உறுப்புகளிலும், தசைகள், நரம்புகள், எலும்புகள், இணைப்புகள், மூட்டுகள் ஆகியவை ஒன்றோடு ஒன்று இணைந்து உள்ளது.

மனித உடலில் உள்ள ரத்த குழாய் பரவும் நரம்புகளின் முடிச்சு தான் உயிர் ஆற்றல் மையம் அல்லது வர்ம புள்ளிகள் என்று வர்மக்கலை குறிப்பிடுகிறது. இதற்கு காலம், சுவாசம், பிராணன், கலை, சரம், யோகம், புரவி, சிவம், வாசி என்று பல காரண பெயர்கள் உண்டு.

நமது உடலிலே உயிர் ஆற்றல் ஆனது சிறு அசைவுகளோடு இருக்கும் போது காலம் எனப்படுகிறது. மூச்சு பாதையில் இருக்கும் வர்ம ஆற்றலை தான் சுவாசம் என்கிறோம். நுரையீரல் மற்றும் இருதயம் சார்ந்த வர்மங்களை தான் பிராணன் என்கிறோம்.

நாடிகளில் இடகலை, பிங்கலை, சுழு முனை இதனோடு தொடர்பு கொள்ளும் போது கலையாகும். மூளை சார்ந்த நரம்பு மண்டலத்தோடு தொடர்பு கொள்ளும் போது சரம் எனப்படுகிறது. குதிரை போன்று வேகமாக சுழன்று ஓடும் ஆற்றலை புரவி என்கிறோம்.

மூளை சார்ந்த வர்மமே சிவம். மூல காற்று உயிருக்கு வலு சேர்க்கும் வஸ்து. இது ஒவ்வொறு முறையும் சுவாசத்திலும் தன்னை புதுப்பித்து கொள்ளும் போது இது வாசி எனப்படுகிறது.

இந்த உடல் ஆனது, பஞ்ச பூதங்களின் கூட்டு கலவையாகும். பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் சரியான விகிதத்தில் இருக்கும் போது தான் ஒரு உயிர் உருவாகிறது. அந்த விகிதாசாரம் சரியாக இருக்கும் போது, உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதில் மாற்றம் ஏற்படும் போதோ, ஏற்றத் தாழ்வுகள் வரும் போதோ உடலில் வாதம், பித்தம், கபம் சார்ந்த நோய்களாக உருவெடுக்கிறது.

பொதுவாக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் யோக சாஸ்திரம் ஆனது நம் உடலில் பஞ்ச பூதங்கள் கீழ்கண்ட விகிதா சாரத்தில் உள்ளதாக சொல்கிறது. நிலம் 12 சதவீதம், நீர் 72சதவீதம், நெருப்பு 4சதவீதம், காற்று 6சதவீதம், ஆகாயம் 6சதவீதம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதை சரிபடுத்தவும், சமன் படுத்தவும் நமது கை விரல்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. நிலத்திற்கு நமது மோதிர விரலும், நீருக்கு சுண்டு விரலும், நெருப்புக்கு கட்டை விரலும், காற்றுக்கு ஆள்காட்டி விரலும், ஆகாயத்திற்கு நடு விரலும் தொடர்பு உடையது.

இந்த விரல்கள் மூலமாக நாம் உடற்பயிற்சி செய்யும் போது வான்காந்த ஆற்றல் (Cosmic Energy) ஆனது ஜீவ காந்த ஆற்றலாக (Biomagnetism) மாற்றம் பெற்று, உடல், மனம், உயிர் இயக்கத்திற்கு உதவி செய்கிறது.

கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

எனவே நமது உடல் நலமாக இருப்பதற்கு உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகாசனங்கள், முத்திரைகள், பிராணாயாமம் போன்ற பயிற்சிகள் மிகவும் அவசியம் ஆகிறது. ஒருவர் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

குறிப்பாக நமது உடலில் சொல்லாமல் வரும் ஒரு பிரச்சனை எது என்றால் இதய கோளாறு தான். இதை தடுப்பதற்கு வரும் முன்காப்பது போன்று தினமும் உடற்பயிற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும். மரபியல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் ரத்தக் குழாய் அடைப்பு, சிறு வயதில் இருந்தே மெதுவாக ஆரம்பிக்கும். வெளிப்படுவது இரண்டு அல்லது மூன்று விதங்களில் இருக்கலாம்.

குறிப்பாக 30-40 சதவீதம் அடைப்பு இருக்கும் போதே எதிர்பாராமல் வெடித்து, ரத்த குழாய் மூடலாம். இது தான் ஹாட்-அட்டாக். ஒரு சிலருக்கு இந்த அடைப்பு எரிமலை குழம்பு போல் உள்ளேயே அமைதியாக இருந்து நாள்பட நாள்பட சிறிது சிறிதாக ரத்த குழாயை மூடலாம்.

அடைப்பை ஏற்படுத்தும் ரத்த கட்டியில், கொழுப்பு, ரத்தத்தில் உள்ள வேதி பொருட்கள், சில சமயத்தில் கால்சியமும் சேர்ந்து, நாள்பட மெதுவாக இந்த அடைப்பை பெரிதாக்கி சட்டென்று அது சிதைந்து உடைந்தால் மாரடைப்பு வரும்.

சிலருக்கு இந்த அடைப்பு பெரிதாகி ரத்த குழாயை 70 சதவீதத்துக்கு மேல் அடைக்கும். இது போன்ற நிலையில் ஒய்வாக இருந்தால் பிரச்சனை வராது. நடந்தால் நெஞ்சுவலி வரும். நின்றால் சரியாகிவிடும். ஆனால் மூச்சு திணறலாம்.

நம்முடைய மரபணுவிற்கு இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம் என்பதால், அடைப்பை ஏற்படுத்தும் விஷயங்களை தவிர்க்க வேண்டும். நம்மால் மரபணுவை மாற்ற முடியாது. வாழ்க்கை முறையில் தான் நாம் மாற்றம் செய்ய வேண்டும். இதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் பிரச்சனையை தள்ளி போடலாம்.

எனவே உடற்பயிற்சி மூலமாக மரபணுவில் கூட நம்மால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று யோக பயிற்சிகள் சொல்கிறது. குறிப்பாக ஒருவர் தொடர்ந்து 9 வருடங்கள் யோக பயிற்சிகள் செய்து வந்தால் நம்முடைய மரபணுவிலே மாற்றம் ஏற்படும் என்கிறது யோக சாஸ்திரங்கள். இதை தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் உடற்பயிற்சி செய்வதால், நம்முடைய கர்ம வினை பதிவுகள் அகன்று, விலங்கின பதிவுகள் நீங்கி நோயின்றி வாழலாம் என்று கூறுகிறார்.

எனவே உடற்பயிற்சி என்பது நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக இனி நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும். காரணம் என்னவென்றால், 50 வருடத்திற்கு முன்னால், நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள், ஆனால் நாம் இன்று எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்? இன்று நாம் மூன்று விதங்களில் நம்முடைய முன்னோர்களுக்கு எதிர்மறையான வாழ்க்கையில் இருக்கிறோம்.

முதலில் இன்று நாம் பரபரப்பான வாழ்க்கை வாழ்கிறோம். நம் முன்னோர்கள் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

இரண்டாவதாக நாம் வேகமான வாழ்க்கை வாழ்கிறோம். நம் முன்னோர்கள் நிதானம் தவறாமல் யோசித்து முடிவுகள் எடுத்து வாழ்ந்தார்கள்.

மூன்றாவதாக நாம் மனதுக்கு அழுத்தத்தை தரக்கூடிய வாழ்க்கை வாழ்கிறோம். நம் முன்னோர்கள் மனதிற்கு இதம் தரக் கூடிய வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

இதை விட முக்கியம் என்னவென்றால் நம் முன்னோர்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்தார்கள். அவர்களுக்கு மற்றவற்றை பற்றி யோசிக்க நேரம் இல்லை. இன்று நாம் யாரும் வேண்டாம். தனியாக இருக்க வேண்டும் என்று தனி குடும்பமாக வாழ்கிறோம்.

ஒரு சிறு பிரச்சனை உடல் சார்ந்து, மனம் சார்ந்து வந்தால் தனிமை பல விதமான எதிர்மறை சிந்தனைகளை ஏற்படுத்தி உடல் மற்றும் மன நோயை அதிகப்படுத்துகிறது. குறிப்பாக தனிமை என்பது ஒரு கொடிய நோய்.

எனவே நம்முடைய உடலை பாதுகாக்க வேண்டும். ஏனெனில் நம்முடைய இறுதி மூச்சு வரை, எந்த எந்த உறவுகள் மற்றும் பொருள்களோடு உறவாடி கொண்டு இருக்கிறோமோ, அவை எல்லாம் ஒவ்வொரு நாள், ஒவ்வொன்றாக நம்மை விட்டு விலகும். ஆனால் கடைசி வரை நம்மோடு இருக்க கூடியது இந்த உடல் மட்டுமே. இதை தான் திருமூலர் அவர்கள்,

"உடம்பார் அழியின் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்மை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே."

அதாவது உடம்பு அழிந்தால் உயிரும் அழியும். இதனால் உறுதியான மெய்ஞானத்தை அடைய முடியாது. ஆகவே இந்த உடலை வளர்க்கும் உபாயத்தை அறிந்து கொண்டேன். எனவே உடம்பை வளர்த்து உயிரையும் நீண்ட ஆயுள் ஆக்கினேன் என்கிறார். அது எப்படி என்பது நமது உடல் ஆராய்ச்சி தொடரும்.

போன்: 9444234348

Tags:    

Similar News