- அதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராகப் பொறுப்பேற்றார்.
- மகாசக்தி பெற்றிருந்தாலும் கர்வம் இல்லாமல் மக்களுக்கு உதவும் குருவாக இருந்தார்.
ராகவேந்திர சுவாமிகளின் 353-வது ஆராதனை தினம் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.
இவர் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகா தெய்வம், வைணவ நெறியில் துவைத மதத்தையும் போதித்தவர்.
சிதம்பரம் நகரில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புவனகிரி என்ற சுவேத நதி கரையில், குரு ராகவேந்தர் கி.பி 1595-ம் வருடம் பால்குண ஆண்டு சுக்லபட்ச சப்தமி திதியில், தனுர் லக்கினத்தில் ரிஷப ராசியில், வியாழக்கிழமையன்று, மிருக சீரிடம் நட்சத்திரத்தில் அவதரித்தார்.
இவரது பெற்றோர்களான திம்மண்ண பட்டர், கோபிகாம்பாள் தம்பதியர் திருப்பதி ஏழுமலையானை நினைத்து வேண்டிப் பிறந்த மூன்றாவது குழந்தை என்பதால் இவருக்கு வேங்கடநாதன் என்று பெயரிட்டனர்.
இவர் மிகச்சிறு வயதிலிருந்தே நல்ல அறிவாற்றலுடன் திகழ்ந்தார். புவனகிரியில் பிறந்து பின்பு மதுரையில் வளர்ந்து, கும்பகோணத்தில் குடியேறினார். இவருக்கு சரஸ்வதி என்பவரை மணந்து ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. வேங்கட நாதர், தஞ்சாவூரில் 1621-ம் ஆண்டு பால்குண மாசம், சுக்கில பட்சம், துவிதியை அன்று துறவறம் ஏற்று அதீந்திர மடத்தின் பீடாதிபதியாக ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராகப் பொறுப்பேற்றார்.
இவர் விஷ்ணுவின், பிரகலாதரின் அவதாரமாக கருதப்படுகிறார். குடும்பம் வறுமையில் இருந்தாலும் நாட்டு மக்களுக்கு மழையை வரவைத்தார், பஞ்சத்தை போக்கியவர், மனைவிக்கு கர்மாவை முடித்து மோட்சத்தினை அளித்தவர், தான் கற்றதை மற்றவருக்குச் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராக, தகுதிக்குரிய மக்களுக்குச் செய்யப்படும் உதவியாளனாக, நோயாளியைக் குணமாக்கும் மருத்துவராக, பாதயாத்திரை மூலம் ஆன்மீக சிந்தனையை தூண்டியவராக, சரியான வாழ்க்கை கற்றுக்கொடுப்பவனாக, அமைதியின் உருவமாக, கடவுளின் மேல் நல்ல பக்தி கொண்டவராக, குருட்டு நம்பிக்கை இல்லாதவராக, மகாசக்தி பெற்றிருந்தாலும் கர்வம் இல்லாமல் மக்களுக்கு உதவும் குருவாக இருந்தார்.
ராகவேந்திரர் தன் வாழ்நாள் முழுக்க எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தினார். இன்றும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். மக்கள் மனதை விட்டு அகலாத அந்த அற்புதங்களில் சில...ஒரு தடவை கிரிடகீரி என்ற ஊரில் தேசாயி ரகுநாதராயன் என்ற பணக்கார பக்தர் அழைத்ததால் அவரது வீட்டுக்கு ராகவேந்திரர் விருந்துக்கு சென்றிருந்தார். தடபுடல் விருந்து தயாரானது. அப்போது மாம்பழச் சாறு இருந்த பெரிய பாத்திரத்தில் தேசாயி ரகுநாதராயரின் மகன் விழுந்து இறந்து போனான்.
இதை அறிந்த ராகவேந்திரர், அந்த சிறுவன் உடலை எடுத்து வரச் சொன்னார். பிறகு சிறுவன் உடல் மீது ராகவேந்திரர் புனித நீரை தெளித்தார். மறு வினாடி அந்த சிறுவன் உயிர்பெற்று எழுந்து உட்கார்ந்தான்.
மற்றொரு சமயம் ராகவேந்திரரை சோதித்து பார்க்க நினைத்த சில இளைஞர்கள் தங்களுள் ஒருவனை செத்தவன் போல நடிக்க செய்தனர். அவனை தூக்கிச் சென்று ராகவேந்திரர் முன் கிடத்தி இவனுக்கு உயிர் கொடுங்கள் என்றனர்.
ராகவேந்திரர் சிரித்தபடியே செத்தவன், செத்தவனாகவே இருக்கட்டுமே என்றார். உண்மையிலேயே அவன் செத்துப் போனான்.
இதை அறிந்ததும் அவனைத் தூக்கி வந்தவர்கள் அரண்டு போனார்கள். அழுது புலம்பினார்கள். அவர்களுக்கு அறிவுரை கூறிய ராகவேந்திரர் பிறகு செத்தவன்போல் நடித்தவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து ஆசி வழங்கினார்.
ஒரு தடவை சாவனூர் என்ற ஊருக்கு சென்ற ராகவேந்திரர் அங்கிருந்த ஒரு இடத்தில் அமர்ந்தார். உடனே ஒருவன் ஓடி வந்து, "இது நவாப் மகன் புதைக்கப்பட்டுள்ள சமாதி. அதன் மீது உட்காராதீர்கள்" என்றான்.
அவனிடம் ராகவேந்திரர், "உங்கள் நவாப் மகன் பாம்பு கடித்துதானே இறந்தான். அவன் உடலை தோண்டி எடுங்கள். நான் உயிர் கொடுக்கிறேன்" என்றார்.
இதை அறிந்த நவாப் அங்கு ஓடோடி வந்தார். "புதைக்கப்பட்ட என் மகன் உடலை தோண்டி எடுக்க எனது இஸ்லாமிய மார்க்கம் ஒத்துக் கொள்ளாது" என்றார்.
அவரிடம் ராகவேந்திரர், "உனக்கு மகன் வேண்டுமா? அல்லது மார்க்கம் வேண்டுமா என்றார். அதற்கு நவாப் எனக்கு மகன்தான் வேண்டும் என்றார்.
உடனே நவாப் மகன் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த உடல் மீது கமண்டலத்தில் இருந்த புனித நீரை தெளித்த ராகவேந்திரர் அம்ருத மந்திரம் ஓதினார். மறுவினாடி நவாப் மகன் தூங்கி விழித்தவன் போல எழுந்தான். இதனால் மகிழ்ச்சி அடைந்த நவாப், கிருஷ்ணா என்ற கிராமத்தை ராகவேந்திரருக்கு தானமாக கொடுத்தார்.
ராகவேந்திரர் கும்பகோணம் பீடாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு ஒரு அற்புதம் நடந்தது. ராகவேந்திரரின் ஆற்றலை சோதிக்க விரும்பி 3 வாலிபர் கள் வந்தனர்.
அவர்கள் 3 பேரும் தங்களுக்கு பிடித்த பலகாரம், மடத்தில் நடத்தப்படும் அன்னதானத்தில் இருக்குமா... அப்படி இருந்தால் ராகவேந்திரர் உண்மையிலேயே சக்தி படைத்தவர்தான் என்று சொல்லிக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தனர்.
என்ன ஆச்சரியம், அவர்கள் 3 பேரும் நினைத்த பலகாரம், இலையில் வைக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த ராகவேந்திரர் 3 வாலிபர்களையும் பார்த்து, என்ன நீங்கள் நினைத்த பலகாரம் கிடைத்துவிட்டதா என்றார். மறு வினாடி 3 வாலிபர்களும் ராகவேந்திரர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு ஆசி பெற்றனர்.
ஒரு சமயம் அன்வாரி மாதவராவ் என்ற எம்.பி அமெரிக்கா சென்றிருந்தார். திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் நியூயார்க் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
டாக்டர்கள் அவர் பிழைக்க மாட்டார் என கைவிட்டு விட்டனர். இதனால் அவர் அந்த நாட்டு வழக்கப்படி தனி ஐஸ் அறையில் வைக்கப்பட்டார்.
ராகவேந்திரரின் தீவிர பக்தரான அன்வாரி மாதவராவ் எம்.பி, அவரது நாமத்தை உச்சரித்தப்படி இருந்தார். அன்றிரவு ஐஸ் அறைக்குள் ஒரு முதியவர் நுழைந்தார். மாதவராயை தொட்டு ஆசீர்வதித்தார்.
மறு நாள் காலை மாதவராய் தெம்புடன் எழுந்து நடந்தார். டாக்டர்கள் ஆச்சரியப்பட்டனர். ஐஸ் அறையில் இருந்த நோட்டில் ராகவேந்திரரின் கையெழுத்து இருந்ததை கண்டு மருத்துவ உலகமே ஆச்சரியத்தின் உச்சத்துக்கு சென்றது.
மசூத்கான் என்ற அரசன் மகான் ஸ்ரீராகவேந்திரரின் மீது அபார பக்தி கொண்டவன். என்றாலும் அவனுக்குள் குறும்புத்தனம் ஒன்று எட்டிபார்த்தது. ஸ்ரீராகவேந்திரரின் சக்தியைச் சோதித்துப்பார்க்க அவன் திட்டமிட்டான்.
ஸ்ரீராகவேந்திரர் தங்கியிருந்த இடத்திற்கு அவரைக் காணச் சென்ற மசூத்கான், வெள்ளித்தட்டு ஒன்றில் மாமிசத் துண்டுகளை நிரப்பி அழகான துணியால் மூடி, அதனை ஸ்ரீராகவேந்திரருக்குச் சமர்ப்பித்தான். ராகவேந்திரர் என்ன செய்யப் போகிறார் பார்க்கலாம் என்று அவன் நினைத்தான்.
இறைவனுக்கு அதனைப் படைக்குமாறு ஸ்ரீராகவேந்திரரை அவன் வேண்டினான். மகானும் அதனை ஏற்றுக் கொண்டு புன்னகைத் தவாறே அதன் மீது தீர்த்தம் தெளித்தார். மசூத்கானின் குறும்புத்தனத்தை அவர் அறிந்து கொண்டார்.
பின்னர் மூடப்பட்டிருந்த துணியை விலக்குமாறு அவர் கட்டளையிட்டார். துணியை எடுத்தவுடன், உள்ளே மலர்களும் கனிகளுமாக கண்ணை கவர்ந்திழுத்தன.
அர்த்தத்தோடு பார்த்தார் ஸ்ரீராகவேந்திரர். வெட்கித் தலை குனிந்தான் மசூத்கான். பின்னர் அவன் ராகவேந்திரரிடம் மன்னிப்பு கேட்டான்.
ஒருசமயம் ஸ்ரீராகவேந்திரர் தங்கியிருந்த இடத்திற்கு வந்த மூன்று மலையாள ஜோதிடர்கள், அவருடைய ஜாதகத்தை வாங்கி அவருடைய ஆயுள் காலத்தைக் குறித்துத் தந்தனர். ஒரு ஜோதிடர் சுவாமிகளுடைய ஆயுள் எழுபது ஆண்டுகள் எனவும், இரண்டாமவர் முந்நூறு ஆண்டுகள் எனவும், மூன்றாவது ஜோதிடர் எழுநூறு ஆண்டுகள் எனவும் சொல்ல, கூடியிருந்த மக்கள் ஜோதிடர்களைக் கேலி செய்தார்கள்.
"ஒரு மனிதர் முந்நூறு ஆண்டுகளும் எழுநூறு ஆண்டுகளும் உயிர் வாழ முடியுமா?" என்று அவர்கள் கேட்க, சுவாமிகள் அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லி, மூவரும் சரியாகக் கணித்திருக்கிறார்கள் என்று கூறி, அதற்கு விளக்கமும் அளித்தார். அதாவது, தன்னுடைய உடல் இந்த மண்ணில் எழுபது ஆண்டுகள் இருக்கும் என்றும், ஜீவசமாதி அடைந்து முந்நூறு ஆண்டுகள் பிருந்தாவனத்தில் இருக்கப் போவதாகவும், தன்னை உள்ளன்போடு நேசிக்கும் மக்களோடு தான் எழுநூறு ஆண்டுகள் இருக்கப் போவதாகவும், முடிவாக பிரம்மலோகம் சென்று சங்குகர்ணனாக இருக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
1601-ம் ஆண்டு தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரியில் அவதரித்த சுவாமிகள், 1671-ம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் மந்திராலயத்தில் பிருந்தாவனப் பிரவேசம் (ஜீவ சமாதி) செய்தார். பின்னர் முந்நூறு ஆண்டுகள் அதாவது 1971-ம் ஆண்டு வரை பிருந்தாவனத்தில் இருந்தவாறே தன் பக்தர்களுக்கு அருள்புரிந்தார். பின்னர் 2671-ம் ஆண்டு வரை தன் பக்தர்களுக்காக நேரிலேயே வந்து அருள்புரிவார் என்பது ஐதீகம். இதை ஸ்ரீ ராகவேந்திரர் பலமுறை தன் பக்தர்களுக்கு உணர்த்தியிருக்கிறார்.
சிறுவயதில் இருந்து வேங்கடநாதருக்கு வலிமை வாய்ந்த அக்னி சூக்தம், வருண மந்திரம், சமஸ்கிருத வேத சுலோகங்கள் மற்றும் நிறைய ஸ்தோத்திரம் கற்றுக்கொண்டவர். அவற்றினை எப்பொழுதும் உச்சரித்துக் கொண்டு இருப்பார். இன்றும் மந்திராலய பிருந்தாவனத்தில் உள்ள ஜீவசமாதியில் அந்த சுலோக அதிர்வலைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.