விளையாட்டு (Sports)
போரினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், ரோஜர் ஃபெடரர்

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளுக்கு ஆதரவு கரம் நீட்டினார் ரோஜர் ஃபெடரர்

Published On 2022-03-18 21:43 GMT   |   Update On 2022-03-18 21:43 GMT
உக்ரைனில் இருந்து வரும் புகைப்படங்களைப் பார்த்து தாமும் தமது குடும்பத்தினரும் மனம் உடைந்துள்ளோம் என ஃபெடரர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச டென்னிஸ் விளையாட்டில் 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சுவீஸ் வீரர் ரோஜர் ஃபெடரர், முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக  போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வருகிறார். 

இந்நிலையில் உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு 
5 லட்சம் டாலர் நன்கொடை வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார். 

ரோஜர் ஃபெடரர் அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் இந்த நன்கொடை, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியை உறுதி செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் இருந்து வரும் புகைப்படங்களைப் பார்த்து தாமும், தனது குடும்பத்தினரும் திகிலடைகிறோம், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காக மனம் வருந்துகிறோம் என்று ட்விட்டரில், ஃபெடரர்  தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ஆதரவு தேவைப்படும் குழந்தைகளுக்கு நாங்கள் உதவி வழங்குவோம், சுமார் 6 மில்லியன் உக்ரேனிய குழந்தைகள் தற்போது பள்ளி கல்வியை இழந்துள்ளனர். இதனால் கல்விக்கான அணுகலை வழங்க இது மிகவும் முக்கியமான நேரம் என்பதை நாங்கள் அறிவோம் என்றும் ரோஜர் ஃபெடரர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் உலக நம்பர் ஒன் டென்னிஸ் வீரரும்,யுனிசெஃப் அமைப்பின் இங்கிலாந்து தூதரான ஆண்டி முர்ரே, 2022 ஆம் ஆண்டு டென்னிஸ் போட்டிகளில் வென்ற தமது பரிசுத் தொகை முழுவதையும் ரஷிய படையெடுப்பால் பாதிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளுக்கு வழங்குவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News