இரட்டை சகோதரிகள் அபாரம்: ஆசிய விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்ற கோவை டிரைவரின் மகள்கள்
- கோவையைச் சேர்ந்த வித்யா, நித்யா ஆகிய இரட்டை சகோதரிகள் சீனாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
- ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் வருகிற 23-ந்தேதி தொடங்க உள்ளது.
கோவை:
ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் வருகிற 23-ந்தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்க உள்ள வீரர்-வீராங்கனைகள் பட்டியலை தேசிய விளையாட்டு ஆணையம் வெளியிட்டு உள்ளது.
இதில் கோவையைச் சேர்ந்த வித்யா, நித்யா ஆகிய இரட்டை சகோதரிகள் சீனாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இவர்களில் வித்யா 400 மீட்டர் ஓட்டப் போட்டிக்கு தேர்வாகி உள்ளார். 100 மீட்டர் தடை தாண்டும் போட்டிக்கு நித்யா தேர்வாகி இருக்கிறார்.
ஆசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வாகி உள்ள நித்யா, வித்யா ஆகிய 2 பேரும் சிறு வயது முதலே தடகள விளையாட்டு மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். இதன் காரணமாக அவர்கள் பள்ளிப்படிப்பு மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளிலும் தீவிர ஆர்வம் காட்டினார்கள். இது அவர்களின் தந்தை ராமராஜூக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அவர் மகள்களின் எதிர்கால கனவுக்கு உறுதுணையாக இருந்தார்.
ராமராஜ், கோவை தனியார் நிறுவனம் ஒன்றில் ரூ.10 ஆயிரம் மாத சம்பளத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். வாடகை வீட்டில் வசித்த போதிலும் ராமராஜ் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் குழந்தைகளை ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்த்து படிக்க வைத்தார். அங்கு வித்யாவும், நித்யாவும் குடும்ப கஷ்டத்தை உணர்ந்து கடினமாக படித்தனர். தடகள விளையாட்டு போட்டிகளிலும் ஜொலித்தனர்.
இது அவர்களுக்கு மத்திய அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்று தந்துள்ளது. வித்யா தற்போது கேரள மாநில ரெயில்வே துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். நித்யா சென்னை வருமான வரித்துறையில் அதிகாரியாக உள்ளார்.
சீனாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது சகோதரிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வித்யா கூறுகையில், நாங்கள் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் முதல்முறையாக பங்கேற்பது பெருமையாக உள்ளது. இதற்காக நாங்கள் விளையாட்டு மட்டுமின்றி பொருளாதார நிலையிலும் பல்வேறு தடைகளை தாண்டி இந்த நிலைக்கு வந்து உள்ளோம். இது எங்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார். அரியானா மாநிலம் சண்டிகர் பகுதியில் சமீபத்தில் நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வித்யா பதக்கம் வென்றது இங்கு குறிப்பிடத்தக்கது.
நித்யா கூறுகையில், நாங்கள் 8-ம் வகுப்பு படிக்கும்போதே தடகள போட்டிகளில் சாதிக்க தொடங்கி விட்டோம். 10-ம் வகுப்பு படித்தபோது தேசியஅளவில் முதலாவதாக பதக்கத்தை தட்டிப்பறித்தேன். நாங்கள் போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் நாங்கள் இருவரும் பங்கேற்பது மனதளவில் சற்று நெருக்கடியாக உள்ளது. இதில் நாங்கள் வெற்றி பெற்றால் அடுத்தாண்டு நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற முடியும்.
நாங்கள் இதுவரை தடகள போட்டிகளுக்காக சொந்த காசை செலவழித்து வருகிறோம். ஆசிய விளையாட்டு போட்டியில் பெரியளவில் சாதித்தால் எங்களுக்கு ஸ்பான்சர்ஷிப் கிடை க்க வாய்ப்பு உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் சகோதரிகள் பங்கேற்பது மிகவும் அரிதான நிகழ்வு தான். அப்படியான நிலையில் நாங்கள் 2 பேரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றால் இந்தியா மட்டுமின்றி தமிழகத்துக்கும் பெருமை கிடைக்கும்.
எங்களின் தந்தை ராமராஜ் கோவையில் தற்போதும் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். தாயும், தந்தையும் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சொந்தமாக வீடு கட்டி தர வேண்டும். வசதியாக வாழவைக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. நாஙகள் சீனாவில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் நிச்சயமாக வெற்றி பெற்று அடுத்தாண்டு நடக்க உள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெறுவோம், நிச்சயமாக சாதனை படைப்போம் என்று தெரிவித்து உள்ளார்.