ஃபெங்கல் புயல் எதிரொலி - புதுச்சேரி கடற்கரை சாலைக்கு செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டன
- இன்று மாலை ஃபெங்கல் புயல் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
- புதுச்சேரியில் காலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
இன்று காலை 11.30 மணி நிலவரப்படி திரிகோண மலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
அடுத்த சில மணி நேரத்தில் (மாலை 5.30) மணிக்கு வடக்கு வடமேற்கில் நகர்ந்து சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை , கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இன்று ஃபெங்கல் புயல் உருவாக உள்ள நிலையில் புதுச்சேரியில் காலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ஆதலால் புதுச்சேரியில் கடற்கரை சாலைக்கு செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளன.