கிரிக்கெட் (Cricket)

இந்தியாவுக்கு எதிராக சதம் விளாசிய ஸ்மித், ஹெட்.. 2-ம் நாள் முடிவில் 405 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா

Published On 2024-12-15 09:14 GMT   |   Update On 2024-12-15 09:14 GMT
  • பொறுப்புடன் விளையாடிய ஸ்மித் 101 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
  • அதிரடியாக விளையாடிய ஹெட் 152 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது.

பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்தது.

தொடரானது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். மழை காரணமாக நேற்றைய ஆட்டம் தடைபட்டது. இதனால் முதல்நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டம் இன்று துவங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக உஸ்மான் கவாஜா 21 ரன்களும், மெக்ஸ்வீனி 9 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுசனே 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் நிதானமாக விளையாடிய ஸ்மித் - டிராவிஸ் ஹெட் ஜோடி 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்து விளையாடினர். பொறுப்புடன் விளையாடிய ஸ்மித் 101 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஹெட் 152 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய மார்ஸ் 5 ரன்களிளும் பேட் கம்மின்ஸ் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய அலெக்ஸ் கேரி 45 ரன்களுடனும் மிட்சல் ஸ்டார்க் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

2-ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளும் சிராஜ், நிதிஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News