கிரிக்கெட் (Cricket)

இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் பெண்கள் அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் இன்று நடக்கிறது

Published On 2024-12-15 05:02 GMT   |   Update On 2024-12-15 05:02 GMT
  • சொந்த மண்ணில் நடைபெறும் இந்த போட்டி தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  • ஹெய்லி மேத்யூஸ் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட கடுமையாக முயற்சிக்கும்.

வெஸ்ட்இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

இதில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இன்று நடக்கிறது.

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் 3 ஒருநாள் போட்டியிலும் தோல்வியை சந்தித்த ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அந்த தோல்வியை மறந்து உள்ளூரில் நடைபெறும் இந்த போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்க ஆயத்தமாகி வருகிறது.

சொந்த மண்ணில் நடைபெறும் இந்த போட்டி தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இதுவரை 21 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கும் இந்திய அணி 13-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் கண்டு இருக்கிறது. அந்த அணிக்கு எதிரான கடைசி 8 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்று இருக்கிறது. இதனால் இந்திய அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஹெய்லி மேத்யூஸ் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி இந்தியாவின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட கடுமையாக முயற்சிக்கும். எனவே இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

Similar News