
விராட் கோலியின் ஷூ அணிந்து மெல்போர்ன் டெஸ்டில் சதம் அடித்தேன் - நிதிஷ்குமார் ரெட்டி
- மெல்போர்ன் டெஸ்டின் முதல் இன்னிங்சில் நிதிஷ்குமார் ரெட்டி சதம் அடித்து அசத்தினார்.
- பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரை 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரை 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்தது. இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் நிதிஷ்குமார் ரெட்டி சதம் அடித்து அசத்தினார்.
ஆஸ்திரேலிய மண்ணில் 8-வது வரிசையில் களமிறங்கி சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிதிஷ்குமார் ரெட்டி படைத்தார்.
இந்நிலையில், அண்மையில் நிதிஷ்குமார் கொடுத்த பாட்காஸ்டில் மெல்போர்ன் டெஸ்ட் சதம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
பாட்காஸ்டில் பேசிய நிதிஷ்குமார், "ஒருமுறை விராட் கோலி சர்ஃபராஸ் கானிடம் 'உன் ஷூ சைஸ் என்ன?' என கேட்டார். அதற்கு அவர் 9 என்றார். பின் திரும்பி என்னை பார்த்து என்னுடைய அளவை கேட்டார். அவருக்கும் எனக்கும் ஒரே அளவு இல்லை என்றாலும், எனக்கு அவரின் ஷூ வேண்டும் என்ற ஆசையில் எப்படியோ யோசித்து 10 எனக் கூறினேன். அவர் ஷூவை கொடுத்தார். அதை அணிந்து மெல்போர்ன் டெஸ்டில் விளையாடி போட்டியில் சதமடித்தேன்" என்று தெரிவித்தார்.