6 சிக்சர்களுக்கு முன்பு இதுதான் நடந்தது.. 2007-ல் நடந்த மோதலை நினைவு கூர்ந்த யுவராஜ்
- 2007-ம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்சர்கள் விளாசினார்.
- அந்த போட்டியில் பிளின்டாப் -யுவாரஜ் சிங் இடையே மோதல் ஏற்பட்டது.
2007-ம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் யுவராஜ் சிங் 6 சிக்சர்கள் தொடர்ந்து அடித்தார். அந்தப் போட்டியின் போது யுவராஜ் சிங்கை இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரூ பிளின்டாப் ஏதோ கூற மைதானத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. கோபமடைந்த யுவராஜ் சிங்கை டோனி சமாதானப்படுத்தினார். இதற்குப் பிறகு ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 சிக்ஸர்கள் தொடர்ந்து அடித்து யுவராஜ் சிங் பதிலடி கொடுத்தார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் கூறியதாவது:-
நான் ஆறாவது சிக்சரை அடித்ததும் டோனி என்னிடம் 'நீங்கள் எப்பொழுது எனக்கு பின்னால் பேட்டிங் செய்ய வருகிறீர்களோ, அப்பொழுதெல்லாம் உங்களுடைய ஸ்ட்ரைக் ரேட் இரண்டு மடங்காக இருக்கும்" என்று கூறினார்.
பிளின்டாப் வீசிய 18-வது ஓவரில் பவுண்டரி அடித்து விட்டு கடைசி பந்தில் நான் ஒரு ரன் எடுத்தேன். அப்பொழுது பிளின்டாப் அது ஒரு அதிர்ஷ்டமான ஷாட் என கூறினார். அது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. உன் கழுத்தை அறுப்பேன் என கூறினேன். கோபத்தில் இருந்த நான் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் அடிக்க நினைத்தேன். அதன்படி 6 சிக்சர்களை அடித்தேன்.
ஆனால் இந்த பிரச்சினையை எல்லாம் பிளின்டாப் மைதானத்திலேயே விட்டு விட்டார். போட்டி முடிந்ததும் அவர் எனக்கு இதையெல்லாம் கூறி கை குலுக்கினார். இதனால் எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். நான் அவரை மிகவும் மதிக்கிறேன்" என்று கூறி இருக்கிறார்.