ஐ.பி.எல். 2025: மார்ச் 23 இல்லை.. முதல் போட்டி நடக்கும் தேதி இதுதான்?
- ஐ.பி.எல். 2025 மெகா ஏலம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது.
- ஆர்.சி.பி. அணி கேப்டனாக ரஜத் பட்டிதார் அறிவிக்கப்பட்டார்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.
ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சம் ஆறு வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் வசதி, ரைட் டு மேட்ச் விதிமுறை உள்பட பல மாற்றங்கள் கடந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தின் போது கொண்டுவரப்பட்டது. அந்த வகையில், ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இதுவரையிலான ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக ரிஷப் பண்ட் உருவெடுத்தார். இவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ. 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி, ஐ.பி.எல். 2025 தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறிமுக போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்.) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணிகள் மோதும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஆர்.சி.பி. அணி தனது புதிய கேப்டனாக ரஜத் பட்டிதரை அறிவித்தது.
ஐ.பி.எல். 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக போட்டிகள் நடைபெறும்- அகமதாபாத், மும்பை, சென்னை, பெங்களூரு, லக்னோ, முலான்பூர், டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா மற்றும் ஐதராபாத் என பத்து இடங்களுடன் கவுகாத்தி மற்றும் தரம்சாலாவிலும் இந்த முறை ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த ஜனவரி 12-ம் தேதி பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா வெளியிட்ட தகவல்களில் ஐ.பி.எல். 2025 போட்டிகள் மார்ச் 23-ம் தேதி தொடங்கும் என்று தெரிவித்து இருந்தார்.