
null
ஐபிஎல் 2025: மிட்செல் மார்ஷ், பூரன் அரைசதம்- டெல்லிக்கு 210 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது லக்னோ
- மிட்செல் மார்ஷ் 36 பந்தில் 72 ரன்கள் விளாசினார்.
- நிகோலஸ் பூரன் 30 பந்தில் 75 ரன்கள் விளாசினார்.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் சீசன் 2025-ன் 4-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் முதலில் பேட்டிங் செய்தது. மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
மார்கிராம் நிதானமாக விளையாட மிட்செல் மார்ஷ் பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பறக்கவிட்டார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. லக்னோவின் ஸ்கோர் 4.4 ஓவரில் 46 ரன்னாக இருக்கும்போது மார்கிராம் ஆட்டமிழந்தார்.
அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் நிகோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 64 ரன்கள் குவித்தது.
மிட்செல் மார்ஷ் 21 பந்தில் அரைசதம் அடித்தார். லக்னோ அணி 8.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. இதனால் லக்னோ அணியின் ஸ்கோர் 250 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மிட்செல் மார்ஷ் 36 பந்தில் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 72 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 11.4 ஒவரில் 133 ரன்கள் குவித்திருந்தது. அடுத்து ரிஷப் பண்ட் களம் இறங்கினார். நிக்கோலஸ் பூரன் 24 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார். நிக்கோலஸ் பூரன் அதிரடியால் லக்னோ 12.4 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.
ரிஷப் பண்ட் 6 பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அப்போது லக்னோவின் ஸ்கோர் 13.4 ஓவரில் 161 ரன்னாக இருந்தது. பண்ட் ஆட்மிழந்த சிறிது நேரத்தில் பூரன் 30 பந்தில் 75 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 14.5 ஓவரில் 169 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் லக்னோவின் ஸ்கோர் அதிரடியாக உயரவில்லை. இதனால் 200 ரன்னைத் தாண்டுமா? என்ற கேள்வி எழுந்தது. குல்தீப் யாதவ் வீசிய 17-வது ஓவரில் லக்னோவின் இரண்டு பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். இந்த ஓவரில் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
மோகித் சர்மா வீசிய 18-வது ஓவரில் லக்னோ 10 ரன்கள் சேர்த்தது. ஸ்டார்க் வீசிய 19-வது ஓவரில் 2 விக்கெட் இழந்து 6 ரன்கள் எடுத்தது. லக்னோ 19 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது.
20வது ஓவரை மோகித் சர்மா வீசினார். இந்த ஓவரின் கடைசி 2 பந்துகளையும் மில்லர் சிக்சருக்கு தூக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் 209 ரன்கள் குவித்தது. மில்லர் 27 ரன்கள் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தார்.
டெல்லி அணி சார்பில் ஸ்டார்க் 42 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.