
null
MI capetown அணியின் நெட் பவுலர்.. MI அணியின் ஆல்ரவுண்டர்.. விக்னேஷ் புத்தூர் குறித்த சுவாரஸ்ய தகவல்
- சென்னைக்கு எதிராக 3 விக்கெட்டுகளை விக்னேஷ் வீழ்த்தினார்.
- SA20 லீக்கில் மும்பை கேப்டவுண் அணியின் நெட் பவுலராக மும்பை அணி நிர்வாகம் சேர்த்தது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் என்னத்தான் மும்பை அணி தோற்று இருந்தாலும் அந்த அணியின் இளம் பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். போட்டி முடிந்தவுடன் இரு அணி வீரர்களும் கைக்குலுக்கி செல்லும் போது எம்.எஸ் தோனி விக்னேஷ் புத்தூரை அழைத்து பாராட்டும் வீடியோ இணையதளத்தில் வைரலானது.
இந்த போட்டியில், மும்பை அணியின் இடதுகை பந்து வீச்சாளராக பிற்பாதியில் மட்டும் (மாற்று வீரர்) களம் இறங்கிய விக்னேஷ் புத்தூர் துருதுருவென மைதானத்தில் வலம் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 23 வயதே ஆன இவர், 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக்கொடுத்து ருதுராஜ், ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.
U-14 மற்றும் U-19 போட்டிகளில் மட்டுமே கேரளா அணிக்காக விளையாடியுள்ள அவரின் திறமையை கண்ட மும்பை அணி நிர்வாகம், SA20 லீக்கில் மும்பை கேப்டவுண் அணியின் நெட் பவுலராக சேர்த்தது. கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ.30 லட்சத்திற்கு எடுக்கப்பட்டார்.
கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம் பெரிந்தல்மண்ணாவை சேர்ந்தவர் விக்னேஷ் புத்தூர். 23 வயதே ஆன அவர், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனது விடாமுயற்சியால் கிரிக்கெட்டில் ஐ.பி.எல். வரை முன்னேறி வந்துள்ளார். வலது கை பேட்ஸ்மேனாகவும், இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் மும்பை அணிக்கு கிடைத்துள்ளார்.
தற்போது பெரிந்தல்மண்ணாவில் உள்ள பி.டி.எம். அரசு கல்லூரியில் இலக்கியத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரது தந்தை சுனில் குமார் ஒரு ஆட்டோ டிரைவர். தாயார் கே.பி.பிந்து வீட்டு வேலை செய்பவர். குடும்பத்தை வறுமை வாட்டியபோதும், விக்னேஷ் புத்தூரின் கிரிக்கெட் கனவுக்கு பெற்றோர் தடைபோடவில்லை.
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் ஏலம் நடந்த அன்று, விக்னேஷ் வீட்டில் இருந்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டபோது ஆச்சரியத்தில் துள்ளிக்குதித்தார். ஐ.பி.எல். கனவு பலித்துவிட்டதை எண்ணி ஆனந்தப்பட்டுக்கொண்டார். அவரது குடும்பத்தினருக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி.
"ரோஹித்தும், ஹார்திக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில் எனக்கு பிடித்த வீரர்கள். இந்த சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து விளையாடுவதை மகிழ்ச்சியாக எண்ணுகிறேன்" என்று அவர் உணர்ச்சி பொங்க கூறியிருந்தார்.
முதலில், விக்னேஷ் புத்தூர் கேரள கிரிக்கெட் லீக்கில் ஆலப்பி ரிப்பிள்ஸ் அணிக்காக விளையாடினார். 3 போட்டிகளில் விளையாடிய அவர் 2 விக்கெட்டுகளே வீழ்த்தினாலும், ஆல்-ரவுண்டர் என்ற அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கவனத்தை ஈர்த்தார்.
சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து கிரிக்கெட்டில் முன்னணிக்கு வந்த விக்னேஷ் புத்தூரின் விடாமுயற்சி அவருக்கு ஐ.பி.எல். மூலம் விஸ்வரூப வெற்றியை கொடுத்துள்ளது.