என்னோட விசுவாசம் RR-க்கு தான்.. கொல்கத்தா அணியை விமர்சித்த நிதிஷ் ராணா மனைவி
- கொல்கத்தா அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் நிதிஷ் ராணா 4-ம் இடத்தில உள்ளார்.
- நிதிஷ் ராணாவை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணி ஒருமுறை கூட முயற்சிக்கவில்லை.
ஐ.பி.எல். மெகா ஏலத்திற்குப் பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியி ரிங்கு சிங், சுனில் நரைன், ரஸல், ரமன்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகிய 6 வீரர்களை 57 கோடி கொடுத்து தக்க வைத்திருந்தது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா வீரரான வெங்கடேஷ் ஐயரை மிக அதிக விலையான 23.5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதே சமயம் கடந்த 7 ஆண்டுகளாக கொல்கத்தா அணியில் சிறப்பாக விளையாடி நிதிஷ் ராணாவை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணி ஒருமுறை கூட முயற்சிக்கவில்லை. இறுதியாக நிதிஷ் ராணாவை ரூ.4.2 கோடி கொடுத்து ராஜஸ்தான் அணி வாங்கியது.
கொல்கத்தா அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் நிதிஷ் ராணா 4-ம் இடத்தில உள்ளார். 2023 ஆம் ஆண்டு காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடாத போட்டிகளில் நிதிஷ் ராணா தான் கேப்டன் பொறுப்பை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நிதிஷ் ராணாவை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணி ஆர்வம் காட்டாமல் இருந்ததை அவரின் மனைவி சாச்சி மார்வா தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "விசுவாசம் என்பது மிகவும் விலை உயர்ந்தது, எல்லாராலும் அதை வாங்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.
அதே சமயம் நிதிஷ் ராணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எனது விசுவாசம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தான்" என்று ஸ்டோரி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.