கிரிக்கெட் (Cricket)

பும்ராவின் ஆக்சன் பற்றி கேள்வி எழுப்புவது நான்சென்ஸ் வேலை - கிரேக் சேப்பல்

Published On 2024-11-26 15:17 GMT   |   Update On 2024-11-26 15:17 GMT
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
  • ஐசிசி பும்ராவின் ஏமாற்று பவுலிங் ஆக்சனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104 ரன்னில் சுருண்டது.

46 ரன்கள் முன்னிலையில் 2- வது இன்னிங்சை ஆடிய இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜெய்ஷ்வால் (161 ரன்), விராட் கோலி (100 ரன்) ஆகியோர் சதம் அடித்தனர். கே.எல்.ராகுல் 77 ரன் எடுத்தார்.

534 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா 238 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இப்போட்டியில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய கேப்டன் பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதனையடுத்து, பும்ராவின் பவுலிங் ஆக்சன் பந்தை எறிவது போல் இருப்பதாலேயே அவரை எதிர்கொள்வது கடினமாக உள்ளது என்றும் ஆனால் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் ஐசிசி அவருடைய ஏமாற்று பவுலிங் ஆக்சனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்தார்கள்.

இந்நிலையில், ரசிகர்களின் இத்தகைய விமர்சனத்துக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் கிரேக் சேப்பல் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக தி சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகையில் சேப்பல் எழுதியுள்ள தனது கட்டுரையில், "பும்ரா தலைமையில் இந்தியாவின் பவுலர்கள் மிகவும் சிறப்பாக பந்துவீசினார்கள். அதனால் ஆஸ்திரேலியா 52 ஓவரில் 104க்கு ஆல் அவுட்டானது. சில நேரங்களில் பும்ரா கிட்டத்தட்ட விளையாட முடியாதவராக இருந்தார்.

பும்ராவின் ஆக்சன் பற்றி கேள்வி எழுப்பும் நான்சென்ஸ் வேலையை தயவு செய்து நிறுத்துங்கள். அவருடைய ஆக்சன் தனித்துவமானது. அதே சமயம் அது சந்தேகத்துக்கு இடமின்றி சரியாக உள்ளது அப்படிப்பட்ட ஒருவரை விமர்சிப்பது ஒரு சாம்பியனையும் நம்முடைய விளையாட்டையும் இழிவு படுத்துகிறது" என்று எழுதியுள்ளார்.

Tags:    

Similar News