கிரிக்கெட் (Cricket)

அஸ்வினிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன்- நாதன் லயன்

Published On 2024-11-19 03:53 GMT   |   Update On 2024-11-19 03:53 GMT
  • இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அவரது பல வீடியோ காட்சிகளை பார்த்து இருக்கிறேன்.
  • உங்களை எதிர்த்து விளையாடும் வீரர்கள் உங்களின் சிறந்த பயிற்சியாளர் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

பெர்த்:

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

இந்த போட்டிக்கு ஆஸ்திரேலிய முன்னணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தீவிரமாக தயாராகி வருகிறார். 36 வயதான லயன் 129 டெஸ்டுகளில் விளையாடி 530 விக்கெட் வீழ்த்தி உள்ளார். வேகப்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளங்களிலும் கூட விக்கெட் எடுப்பதில் லயன் கில்லாடி. அவர் இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வினை புகழ்ந்து அளித்த ஒரு பேட்டி வருமாறு:-

அஸ்வின் அற்புதமான பந்து வீச்சாளர். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் அவருக்கு எதிராக நான் பல முறை விளையாடி இருக்கிறேன். அவரிடம் இருந்து ஏராளமான விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். அஸ்வின் ஒரு நம்பமுடியாத, புத்திசாலித்தனமான பவுலர். எந்த ஆடுகளமாக இருந்தாலும் அதன் தன்மையை உணர்ந்து, அதற்கு ஏற்ப தனது பந்து வீச்சை விரைவாக மாற்றிக்கொள்ளக் கூடியவர். உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களால் மட்டுமே இதை செய்ய முடியும். அணிக்கும், தனக்கும் பலன் பெறும் வகையில் திறமையை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார். அவரது சாதனைகளை பாராட்ட வேண்டும்.

அஸ்வின் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தார். உங்களை எதிர்த்து விளையாடும் வீரர்கள் உங்களின் சிறந்த பயிற்சியாளர் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அவரது பல வீடியோ காட்சிகளை பார்த்து இருக்கிறேன். என்னால் எதுவும் முடியும் என அவர் பந்து வீசும் விதம் அபாரமானது. இந்த தொடரில் அவரது பந்து வீச்சை காண ஆவலுடன் உள்ளேன்.

இவ்வாறு லயன் கூறினார்.

38 வயதான அஸ்வின் இதுவரை 105 டெஸ்டுகளில் ஆடி 536 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 22 டெஸ்டில் ஆடி 114 விக்கெட் வீழ்த்தியதும் அடங்கும்.

Tags:    

Similar News