கிரிக்கெட் (Cricket)

பார்டர் கவாஸ்கர் டிராபி- முதல் டெஸ்ட்டில் ரோகித் சர்மா விளையாடுவது சந்தேகம்

Published On 2024-10-11 06:16 GMT   |   Update On 2024-10-11 06:16 GMT
  • பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.
  • கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களிலும் இந்தியா முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களிலும் இந்தியா முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது.

அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கி ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெற இந்தியா தயாராகி வருகிறது. மறுபுறம் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் கேப்டன் ரோகித் சர்மா விலகுவதற்கு வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக தம்முடைய சொந்த காரணங்களுக்காக முதலிரண்டு போட்டிகளின் ஒன்றில் விடுப்பு கொடுக்குமாறு பிசிசிஐயிடம் ரோகித் சர்மா இப்போதே அனுமதி கேட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இது பற்றி பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

தனிப்பட்ட விவகாரம் காரணமாக பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஒன்றை தவிர்க்க வாய்ப்புள்ளதாக பிசிசிஐயிடம் ரோகித் சர்மா தெரிவித்ததாக தெரிகிறது. ஒருவேளை தொடர் துவங்குவதற்கு முன்பாக அந்த சொந்த காரணம் தீர்க்கப்பட்டால் ரோகித் சர்மா 5 போட்டிகளிலும் விளையாடுவார். அது அடுத்து வரும் நாட்களில் தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News