கிரிக்கெட் (Cricket)

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா 191 ரன்னில் ஆல் அவுட்

Published On 2024-11-28 11:19 GMT   |   Update On 2024-11-28 11:19 GMT
  • தென் ஆப்பிரிக்கா தரப்பில் பவுமா 70 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
  • இலங்கை தரப்பில் அசிதா பெர்னண்டோ மற்றும் லஹிரு குமரா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

டர்பன்:

தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா, இலங்கையின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. மார்க்ரம் 9, டோனி டி ஜோர்ஜி 4, டிரிஸ்டான் ஸ்டப்ஸ் 16, டேவிட் பெடிங்ஹாம் 4 அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 20.4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா முதல் நாளில் 4 விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

கேப்டன் பவுமா 28 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் கைல் வெரைன் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த கேப்டன் பவுமா ஒருபுறம் நிலைத்து நின்றாலும் மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்தன.

சிறப்பாக விளையாடி பவுமா (70) அரைசதம் அடித்து அவுட் ஆனார். முடிவில் 49.4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் அசிதா பெர்னண்டோ மற்றும் லஹிரு குமரா தலா 3 விக்கெட்டுகளும், பிரபாத் ஜெயசூர்யா, விஷ்வா பெர்னண்டோ தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

Tags:    

Similar News