618 விக்கெட்டுகள் எடுத்ததும் ஓய்வு- காரணம் கூறிய அஸ்வின்
- 618 விக்கெட்டுகளை வீழ்த்தினால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன்.
- கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் முறியடிக்க வேண்டும் என்றால் 104 விக்கெட்கள் அவருக்கு தேவை.
சென்னை:
சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளராக விளங்கும் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வந்தால் 38 வயதை நிறைவு செய்வார். இதனால் அஸ்வின் தன்னுடைய கடைசி கிரிக்கெட் அத்தியாயத்தை நெருங்கி இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
இதுவரை இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 516 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் 2-வது இடத்தில் இருக்கிறார். 619 விக்கெட்களுடன் முதலிடத்தில் கும்ப்ளே இருக்கின்றார். கும்ப்ளேவின் சாதனையை அஸ்வின் முறியடிக்க வேண்டும் என்றால் 104 விக்கெட்கள் அவருக்கு தேவை.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அஸ்வின் ஓய்வு பெறப்போவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதற்கான பதிலை அவர் 2017-ம் ஆண்டு தெரிவித்திருக்கிறார். 7 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அளித்த பேட்டி ஒன்றில் தாம் 618 விக்கெட்டுகளை வீழ்த்தினால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்று அவர் கூறியிருக்கிறார்.
இது குறித்து பேசியுள்ள அவர், நான் அனில் கும்ப்ளேவில் மிகப்பெரிய ரசிகர். அவர் 619 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இதனால் நான் 618 விக்கெட்டுகள் வந்த உடனேயே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன். அவருடைய சாதனையை நான் முறியடிக்க மாட்டேன். 618 விக்கெட்டுகள் வந்தாலே நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.
நான் எப்போது 618 விக்கெட் எடுக்கிறேனோ அதுதான் என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்று அஸ்வின் கூறியிருந்தார். அஸ்வின் இந்த பழைய பேட்டி தற்போது வைரலாக இருக்கின்றது. கும்ப்ளே ஓய்வு பெற்ற பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து 2011-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்கு அஸ்வின் கால் எடுத்து வைத்தார்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியிலே ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வாங்கிய அஸ்வின், அந்த தொடரில் மொத்தமாக 22 விக்கெட்டுகளும், பேட்டிங்கில் 121 ரன்களும் அடித்திருந்தார். அஸ்வின் கும்ப்ளேவின் சாதனையை நெருங்க வேண்டுமென்றால் குறைந்தது 20 டெஸ்ட் போட்டிகள் ஆவது விளையாட வேண்டும். இதில் இந்திய அணி வரும் ஐந்து மாதங்களில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.