null
டேரில் மிட்செல் அதிரடி - இந்தியாவுக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து
- துவக்க வீரரான ஃபின் ஆலன் வாஷிங்டன் சுந்தர் பந்தில் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
- இந்தியா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட் வீழ்த்தினர்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதோடு, நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்கியது. ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. நியூசிலாந்து அணியில் துவக்க வீரராக களமிறங்கிய ஃபின் ஆலன் 35 ரன் எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார்.
பின் களமிறங்கிய மார்க் சாப்மேன் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை வாஷிங்கடன் சுந்தரிடம் பறிகொடுத்தார். இரண்டாவது வீரராக களமிறங்கிய தேவன் கான்வே நிதானமாகி ஆடி அரைசதம் அடித்தார். 52 ரன்கள் அடித்த நிலையில் அர்தீப் சிங் பந்தில் தேவன் கான்வே ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய டேரில் மிட்செல், தன் பங்கிற்கு 30 பந்துகளில் 59 ரன்களை குவித்தார்.
20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை குவித்தது. இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்களையும், குல்தீப் யாதவ், அர்தீப் சிங், சிவம் மாவி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.