சர்வதேச பீடே செஸ் போட்டி: தமிழக வீரர் இளம்பர்தி சாம்பியன்
- சாம்பியன் பட்டம் பெற்ற இளம்பர்திக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
- 2 முதல் 5-வது இடத்திற்கு முறையே ரூ. 75 ஆயிரம், ரூ. 60 ஆயிரம், ரூ. 50 ஆயிரம், ரூ. 40 ஆயிரம் கிடைத்தது.
சென்னை:
வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் சர்வதேச பீடே ரேடட் செஸ் போட்டி நடைபெற்றது. 8 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மராட்டியம், ஒடிசா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த 350 வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் தமிழக வீரர் ஏ.ஆர்.இளம்பர்தி சாம்பியன் பட்டம் பெற்றார். செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சர்வதேச மாஸ்டரான (ஐ.எம்) அவர் 7.5 புள்ளிகள் பெற்றார். மற்ற தமிழக வீரர்களான பாலசுப்பிரமணியன், பிரவீன்குமார், லட்சுமண், விக்னேஷ் ஆகியோர் தலா 7 புள்ளிகள் பெற்று 2 முதல் 5-வது இடங்களை பிடித்தனர். சாம்பியன் பட்டம் பெற்ற இளம்பர்திக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது. 2 முதல் 5-வது இடத்திற்கு முறையே ரூ. 75 ஆயிரம், ரூ. 60 ஆயிரம், ரூ. 50 ஆயிரம், ரூ. 40 ஆயிரம் கிடைத்தது.
பரிசளிப்பு விழாவில் கிராண்ட் மாஸ்டரும், இந்திய பெண்கள் செஸ் அணி பயிற்சியாளருமான எம்.ஷியாம் சுந்தர், குருநானக் ககல்லூரி, பொதுச்செயலாளரும், தாளாளருமான மஞ்சித் சிங் நாயர் ஆகியோர் பங்கேற்றனர்.