விளையாட்டு

சேப்பாக்கத்தில் இன்று கடைசி 'லீக்' ஆட்டம்- பென்ஸ்டோக்சுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

Published On 2023-05-14 05:51 GMT   |   Update On 2023-05-14 05:51 GMT
  • சேப்பாக்கம் மைதானத்தில் கடைசி ‘லீக்’ ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.

சென்னை:

ஐ.பி.எல். போட்டியில் 7 லீக் ஆட்டமும், பிளேஆப் சுற்றின் 2 ஆட்டமும், ஆகமொத்தம் 9 போட்டிகள் சேப்பாக்கம் எம்.ஏ. சிதம் பரம் மைதானத்தில் நடத்தப்படுகிறது. இதுவரை 6 ஆட்டங்கள் முடிந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 4 ஆட்டத்தில் வெற்றி பெற்று உள்ளது. 2 போட்டியில் தோற்றது.

சேப்பாக்கம் மைதானத்தில் கடைசி 'லீக்' ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-நிதிஷ் ரானா தலைமையிலான கொல் கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சி.எஸ்.கே. அணி 7 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 15 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கொல்கத்தாவை மீண்டும் வீழ்த்தி 8-வது வெற்றியுடன் பிளேஆப் சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழும் சென்னை அணி சேப்பாக்கத்தில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலை நிறுத்தும் வகையில் விளையாடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் பென்ஸ் டோக்சை ரூ.16.25 கோடிக்கு சி.எஸ்.கே. அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால் அவர் இதுவரை 2 ஆட்டத்தில் மட்டுமே விளையாடி உள்ளார். காயத்தால் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.

காயத்தில் இருந்து தற்போது பென்ஸ்டோக்ஸ் குணமடைந்துள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. பென்ஸ்டோக்ஸ் இடம் பெற்றால் மொய்ன் அலி நீக்கப்படுவார். சேப்பாக்கம் மைதானத்தில் மொய்ன் அலி சிறப்பாக பந்துவீசக் கூடியவர். பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்துவீச்சில் அவர் நேர்த்தியாக உள்ளார். இதனால் மொய்ன் அலி நீக்கப்படுவாரா? என்று உறுதியாக தெரியவில்லை. வீரர்கள் தேர்வில் கேப்டன் டோனி மாற்றம் செய்யமாட்டார் என்று தெரிகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது. அந்த அணி சி.எஸ்.கே.வுக்கு பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

அந்த அணியில் இன்று சுனில் நரீன் நீக்கப்படுவார் என்று தெரிகிறது. பெர் குசனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

முன்னதாக மாலை 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் அணி 7-வது வெற்றிக்காகவும், பெங்களூர் அணி 6-வது வெற்றிக்காகவும் காத்திருக்கின்றன.

Tags:    

Similar News