தேசிய சீனியர் ஹாக்கி: சத்தீஸ்கரை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறிய அரியானா
- 2 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அரியானா கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
- தமிழ்நாடு (பி பிரிவு) கர்நாடகா (சி பிரிவு) ஆகிய அணிகள் ஏற்கனவே கால் இறுதிக்கு தகுதி பெற்றன.
சென்னை:
தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் 13-வது தேசிய சீனியர் ஹாக்கிப் போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 28 அணிகளும் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும்.
போட்டியின் 5-வது நாளான இன்று காலை நடந்த 'ஏ' பிரிவு ஆட்டத்தில் அரியானா-சத்தீஸ்கர் அணிகள் மோதின. இதில் அரியானா 13-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
அரியானா அணியில் சஞ்சய் 4 கோல்களையும், கோபினூர் பிரீத்சிங் 3 கோல்களையும், தீபக், ரஜத் தலா 2 கோல்களையும் அபிஷேக், முகுல் சர்மா தலா ஒரு கோலும் அடித்தனர். சத்தீஸ்கர் அணிக்காக கார்த்தி யாதவ் கோல் அடித்தார்.
அரியானா அணி பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத்தை 22-1 என்ற கோல் கணக்கில் வீழத்தி இருந்தது. 2 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அரியானா கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
தமிழ்நாடு (பி பிரிவு) கர்நாடகா (சி பிரிவு) ஆகிய அணிகள் ஏற்கனவே கால் இறுதிக்கு தகுதி பெற்றன. தமிழக அணி தொடக்க ஆட்டத்தில் 15-1 என்ற கணக்கில் அசாமையும், 2-வது போட்டியில் 13-1 என்ற கணக்கில் இமாச்சல பிரதேசத்தையும் தோற்கடித்து இருந்தன. கர்நாடக அணி தத்ரா நகர் கவேலி (5-0), பீகார் (12-1) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது.
இன்று காலை நடந்த 2-வது போட்டி டி பிரிவில் உள்ள பஞ்சாய்-மராட்டியம் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.