கிரிக்கெட் (Cricket)

தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? கடைசி போட்டியில் தென்ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்

Published On 2024-11-15 01:19 GMT   |   Update On 2024-11-15 01:19 GMT
  • தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
  • மழையால் ஆட்டம் பாதிக்கப்பட சிறிய அளவில் வாய்ப்புள்ளது.

ஜோகன்னஸ்பர்க்:

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்ரர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்திய அணியில் முதல் ஆட்டத்தில் சதம் அடித்த விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் அடுத்த இரு ஆட்டங்களில் 'டக்-அவுட்' ஆனார். முந்தைய மோதலில் திலக் வர்மாவின் சதமும், அபிஷேக் ஷர்மாவின் அரைசதமும் வெற்றிக்கு உதவின. கேப்டன் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் தான் பெரிய அளவில் இல்லை. அவரும் ரன்குவித்தால் அணி மேலும் வலுவடையும். பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய் கைகொடுக்கிறார்கள். இதே உத்வேகத்துடன் ஆடி தொடரை கைப்பற்ற நமது வீரர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த ஆண்டில் இந்திய அணி ஆடும் கடைசி சர்வதேச 20 ஓவர் போட்டி இது என்பதால் வெற்றியோடு முடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தென்ஆப்பிரிக்க அணி உள்நாட்டில் தொடரை இழக்காமல் இருக்க கடுமையாக போராடும். கடந்த ஆட்டத்தில் 220 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்கா நெருங்கி வந்து 11 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணியில் தொடக்க ஜோடியின் செயல்பாடு மெச்சும்படி இல்லை. மிடில் வரிசையில் மில்லரும் ஜொலிக்கவில்லை. எனவே ஒருங்கிணைந்து ஆடினால் சரிவில் இருந்து எழுச்சி பெறலாம்.

போட்டி நடக்கும் ஜோகன்னஸ்பர்க்கில் இந்திய அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில் இங்கு நடந்த ஆட்டத்தில் இந்திய அணி சூர்யகுமாரின் சதத்துடன் 201 ரன்கள் குவித்து, தென்ஆப்பிரிக்காவை 95 ரன்னில் மடக்கியது நினைவிருக்கலாம்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், ரமன்தீப்சிங், அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய்.

தென்ஆப்பிரிக்கா: ரையான் ரிக்கெல்டன், ரீஜா ஹென்ரிக்ஸ், மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஜீ அல்லது இன்கபா பீட்டர், அன்டில் சிம்லேன், கேஷவ் மகராஜ், லுதோ சிபம்லா.

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட சிறிய அளவில் வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News