சிங்கம் இறங்குனா காட்டுக்கே விருந்து.. ரஞ்சி போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி முகமது சமி அசத்தல்
- நீண்ட நாட்களுக்கு பிறகு ரஞ்சி போட்டியில் முகமது சமி களமிறங்கினார்.
- பெங்கால் அணி சார்பாக முகமது சமி விளையாடினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சமிக்கு, கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அந்த உலகக் கோப்பையில் 7 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரமாதப்படுத்திய சமி, கடந்த நவம்பருக்கு பிறகு எந்த போட்டியிலும் விளையாடவில்லை.
இந்த ஆண்டு தொடக்கத்தில் முகமது சமி இடது கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். காயம் காரணமாக ஓய்வில் இருந்த முகமது சமி, குணமடைந்து பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு ரஞ்சி போட்டியில் முகமது சமி களமிறங்கினார். மத்திய பிரதேசம் மற்றும் பெங்கால் அணிகள் மோதிய போட்டியில் பெங்கால் அணி சார்பாக முகமது சமி விளையாடினார்.
இப்போட்டியில் 19 ஓவர்கள் பந்துவீசிய சமி 4 மெய்டன் ஓவர்களை வீசி 54 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ரஞ்சி கோப்பையில் முகமது சமி சிறப்பாக விளையாடினால் ஐபிஎல் ஏலத்தில் அவரை ஏலம் எடுக்க ஒவ்வொரு அணிகளும் போட்டி போடும் என்பது குறிப்பிடத்தக்கது.