தேசிய சீனியர் ஹாக்கி: வெற்றியுடன் தொடங்கியது தமிழக அணி
- 13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
- 28 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
சென்னை:
தேசிய சீனியர் ஹாக்கியில் தமிழக அணி தனது முதலாவது ஆட்டத்தில் 15-1 என்ற கோல் கணக்கில் அசாமை ஊதித்தள்ளி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது.
தமிழ்நாடு ஹாக்கி அமைப்பு சார்பில் 13-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
தொடக்க விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி, டாக்டர் கலாநிதி வீராசாமி எம்.பி., தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு ஹாக்கி அமைப்பின் தலைவர் சேகர் மனோகரன், பொதுச் செயலாளர் செந்தில் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த போட்டியில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் அரியானா, தமிழ்நாடு, கர்நாடகம், மராட்டியம், குஜராத், பெங்கால், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட 28 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.
இதில் முதலாவது லீக் ஆட்டத்தில் (டி பிரிவு) பஞ்சாப்பை எதிர்த்து விளையாட வேண்டிய திரிபுரா விலகியதால் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மற்றொரு ஆட்டத்தில் (இ பிரிவு) மணிப்பூர் 7-2 என்ற கோல் கணக்கில் மத்தியபிரதேசத்தை தோற்கடித்தது. 'டி' பிரிவில் மராட்டிய அணி 22-0 என்ற கோல் கணக்கில் உத்தரகாண்ட்டை துவம்சம் செய்தது.
'பி' பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழக அணி 15-1 என்ற கோல் கணக்கில் அசாமை எளிதில் தோற்கடித்து போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. தமிழக அணியில் சுந்தரபாண்டி 3 கோலும், கேப்டன் சோசுவா பெனடிக்ட் வெஸ்லி, கனகராஜ் செல்வராஜ், தினேஷ் குமார் தலா 2 கோலும், சதீஷ், தனுஷ், பிருத்வி, கவின் கிஷோர், கார்த்தி, சோமன்னா தலா ஒரு கோலும் அடித்தனர்.
இன்று (சனிக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஜார்கண்ட்-ஆந்திரா (காலை 7 மணி), சண்டிகார்-கோவா (காலை 8.45 மணி), உத்தரபிரதேசம்-கேரளா (காலை 10.30 மணி), புதுச்சேரி-ராஜஸ்தான் (பிற்பகல் 2 மணி), அசாம்-இமாச்சல பிரதேசம் (மாலை 3.30 மணி) அணிகள் மோதுகின்றன.