விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி நடைபெறாமல் போனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ரூ.548 கோடி இழப்பு

Published On 2024-11-14 06:33 GMT   |   Update On 2024-11-14 06:33 GMT
  • சாம்பியன்ஸ் டிராபி நடைபெறாமல் போனால் பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டிய நிதி கணிசமாக குறைக்கப்படும்.
  • இதனால் பாகிஸ்தான் தனது முடிவை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

துபாய்:

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தான் நடத்துகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயில் விளையாட விரும்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டவட்டமாக தெரிவித்தது.

பி.சி.சி.ஐ. தனது நிலைப்பாட்டை ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தெரிவித்து இருந்தது. இந்திய அணி வர மறுப்பதால் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்துவதை பாகிஸ்தான் கைவிட முடிவு செய்துள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாட செல்ல மறுப்பது தொடர்பாக இந்தியாவிடம் விளக்கம் கேட்குமாறு ஐ.சி.சி.யிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டு இருந்தது. இந்தியா மோதும் ஆட்டங்களை மட்டும் துபாயில் நடத்த வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது.

இதற்கிடையே சாம்பியன்ஸ் டிராபி போட்டியை நடத்த முடியாமல் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டாலோ அல்லது ஒத்திவைக்கப்பட்டாலோ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.548 கோடி இழப்பு ஏற்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் தனது நிலையில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தால் ஐ.சி.சி.யால் பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். அந்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நிதி கணிசமாக குறைக்கப்படும். இதனால் பாகிஸ்தான் தனது முடிவை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா மோதும் ஆட்டங்களை துபாயில் நடத்துவதே அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் சரியான முடிவாக இருக்கும். ஆனால் இது குறித்து ஐ.சி.சி. எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

Tags:    

Similar News