விளையாட்டு

3-வது வரிசையில் வாய்ப்பு கேட்டு அதை சரியாக பயன்படுத்திய திலக்- சூர்யகுமார் பாராட்டு

Published On 2024-11-14 05:01 GMT   |   Update On 2024-11-14 05:01 GMT
  • திலக் வர்மா என்னிடம் வந்து நான் 3-வரிசையில் பேட்டிங் செய்யவா? என்று கேட்டார்.
  • அவருடைய குடும்பத்தினருக்காகவும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

செஞ்சுரியன்:

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. செஞ்சுரியனில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன் குவித்தது.

திலக் வர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 56 பந்தில் 107 ரன்னும் (8 பவுண்டரி, 7 சிக்சர்), அபிஷேக் சர்மா 25 பந்தில் 50 ரன்னும் ( 3 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்தனர். கேசவ் மகாராஜ், ஷிமிலேன் தலா 2 விக்கெட்டும், மார்கோ ஜான்சென் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மார்கோ ஜான்சன் 17 பந்தில் 54 ரன்னும் (4 பவுண்டரி, 5 சிக்சர்) கிளாசன் 22 பந்தில் 41 ரன்னும் (1 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டும், வருண் சக்கவர்த்தி 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா , அக்ஷர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-

இந்த போட்டியின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது. பயம் இல்லாமல் ஆடுங்கள் என்பதை தான் நாங்கள் அணியின் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்துகிறோம். நாங்கள் எந்த மாதிரியான கிரிக்கெட்டை விளையாட நினைத்தோமோ அதை செயல்படுத்தினோம். பயிற்சியின் போது அதிரடியாக ஆடுவதற்கு முயற்சி செய்கிறோம்.

வீரர்கள் சில போட்டிகளில் எளிதில் ஆட்டம் இழந்தாலும் அதிரடியாக ஆட வேண்டிய உத்வேகத்தில் இருக்கிறார்கள். ஆக்ரோஷமும், உத்வேகமும் இருந்தால் மட்டுமே 20 ஓவரில் கிரிக்கெட்டில் வெற்றி பெற முடியும்.

முதல் 20 ஓவர் போட்டி முடிந்த பிறகு திலக் வர்மா என்னிடம் வந்து நான் 3-வரிசையில் பேட்டிங் செய்யவா? என்று கேட்டார். இதனால் இந்த ஆட்டத்தில் 3-வரிசையில் அனுப்பி வைத்தேன். அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இது மகிழ்ச்சி அளிக்கிறது. வாய்ப்பு வேண்டும் என்று கேட்டு அதை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். அவருடைய குடும்பத்தினருக்காகவும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.

இந்த வெற்றி மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி ஜோகன்ஸ்பர்கில் நாளை நடக்கிறது.

Tags:    

Similar News