விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய 'பி' அணி தொடர்ந்து ஆதிக்கம்

Published On 2022-08-02 08:57 GMT   |   Update On 2022-08-02 08:57 GMT
  • நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் இந்திய ‘பி’ அணி 3-1 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது.
  • இன்று 5-வது சுற்று ஆட்டம் நடக்கிறது. ஓபன் பிரிவில் இந்திய ‘பி’ அணி ஸ்பெயினை எதிர் கொள்கிறது.

சென்னை:

சர்வதேச செஸ் கூட்டமைப்பு, இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழக அரசு சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப்போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று உள்ளனர். ஆண்கள் பிரிவில் 188 அணிகளும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.

11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்று உள்ளன. ஆண்கள் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய 'பி' அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் இந்திய 'பி' அணி 3-1 என்ற கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது.

இந்திய 'ஏ' அணி பிரான்சுடன் மோதிய ஆட்டம் 2-2 என்ற கணக்கில் 'டிரா' ஆனது. இந்திய 'சி' அணி 1.5-2.5 என்ற கணக்கில் ஸ்பெயினிடம் தோற்றது.

4 சுற்றுகள் முடிவில் ஓபன் பிரிவில் இந்திய 'பி' அணி, அர்மெனியா, இஸ்ரேல், இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய 5 நாடுகள் தலா 8 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளன.

ஆனால் இதில் இந்திய 'பி' அணிதான் போர்டு பாயிண்டில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

குகேஷ், சரின் நிகில், பிரக்ஞானந்தா, அதிபன், சத்வானி ஆகியோரை கொண்ட இந்திய 'பி' அணி 15 போர்டு பாயிண்டுகளை பெற்று உள்ளது.

இந்திய 'ஏ' அணி 7 புள்ளியுடன் 7-வது இடத்திலும், இந்திய 'பி' அணி 6 புள்ளியுடன் 20-வது இடத்திலும் உள்ளன.

பெண்கள் பிரிவில் இந்திய அணி 4-வது சுற்றில் அங்கேரியை எதிர் கொண்டது. இதில் இந்திய 'ஏ' அணி 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய 'பி' அணி 2.5-1.5 என்ற கணக்கில் எஸ்டோனியாவை தோற்கடித்தது. இந்திய 'சி' அணி 1-3 என்ற கணக்கில் ஜார்ஜியாவிடம் தோற்றது.

பெண்கள் பிரிவில் 4-வது சுற்றில் முடிவில் அசர்பெய்ஜான், போலந்து, உக்ரைன், இந்திய 'ஏ', பிரான்ஸ், இந்தியா 'பி', ருமேனியா ஆகியவை தலா 7 புள்ளிகளுடன் உள்ளன.

இன்று 5-வது சுற்று ஆட்டம் நடக்கிறது. ஓபன் பிரிவில் இந்திய 'பி' அணி ஸ்பெயினை எதிர் கொள்கிறது. இந்திய 'ஏ' அணி ருமேனியாவுடனும், இந்திய 'சி' அணி சிலியுடனும் மோதுகின்றன.

பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி பிரான்சுடனும், இந்திய 'பி' அணி ஜார்ஜியாவுடனும் இந்திய 'சி' அணி பிரேசிலுடனும் மோதுகின்றன.

Tags:    

Similar News