null
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது டெஸ்ட்: தர்மசாலாவில் இருந்து இந்தூருக்கு மாற்றம்
- தர்மசாலா ஆடுகளத்தின் வெளிப்புற பகுதி இன்னும் தயாராக இல்லை.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் கொண்ட தொடரில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது டெஸ்ட் இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டு இருந்தது.
இந்த நிலையில் தர்மசாலாவில் நடைபெற இருந்த 3-வது டெஸ்ட் போட்டி மாற்றப்பட்டுள்ளது. ஆடுகளத்தின் வெளிப்புற பகுதி இன்னும் தயாராக இல்லை. மேலும் மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் தர்மசாலாவில் நடைபெற இருந்த டெஸ்ட் போட்டி மாற்றம் செய்யப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) ஆடுகள பராமரிப்பாளர் தபோஸ் சட்டர்ஜி ஆடுகளம் குறித்த அறிக்கை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தர்மசாலாவில் நடைபெற இருந்த போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூருக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதை பி.சி.சி.ஐ. இன்று அறிவித்தது.