3-வது வெற்றி யாருக்கு?- நெல்லை-திருச்சி அணிகள் மோதல்
- 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
- திருச்சி வெற்றி பெற்றால் 6 புள்ளியை பெறும்.
நெல்லை:
8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந் தேதி சேலத்தில் தொடங்கியது. 11-ந் தேதியுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தது. 9 ஆட்டங்கள் சேலத்தில் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து கோவையில் 2-வது கட்ட ஆட்டங்கள் கடந்த 13-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை 8 போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டி தொடரில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும்.
இதுவரை 17 ஆட்டங்கள் முடிந்துள்ளன. நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் 8 புள்ளியுடனும், 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 புள்ளியுடனும், நெல்லை ராயல் கிங்ஸ் 5 புள்ளியுடனும் முதல் 3 இடங்களில் உள்ளன. திருச்சி கிராண்ட் சோழாஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் தலா 4 புள்ளிகளுடனும், மதுரை பாந்தர்ஸ் 3 புள்ளியுடனும், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் தலா 2 புள்ளிகளுடனும் உள்ளன.
டி.என்.பி.எல். போட்டியின் 3-வது கட்ட ஆட்டங்கள் நெல்லையில் இன்று தொடங்குகிறது. வருகிற 24-ந் தேதி வரை அங்கு 6 போட்டிகள் நடத்தப்படுகிறது.
நெல்லை இந்திய சிமெண்ட்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நெல்லை-திருச்சி அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் 3-வது வெற்றியை பெறப்போவது யார்? என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல்லை அணி மோதிய ஒரு ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. அந்த அணி வெற்றி பெற்றால் 7 புள்ளியுடன் முன்னேறும். திருச்சி வெற்றி பெற்றால் 6 புள்ளியை பெறும்.