ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய அணியின் அதிரடி தொடருமா?- நாளை 3-வது 20 ஓவர் போட்டி
- ஜிம்பாப்வே தொடரில் முதல் 2 போட்டியில் இவர்கள் இடம் பெற முடியவில்லை.
- சாய்சுதர்சன் 2-வது 20 ஓவர் போட்டியில் அறிமுகமாகி இருந்தார்.
ஹராரே:
சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் தொடரில் 2 போட்டி முடிவில் 1-1 என்ற சமநிலை காணப்படுகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 13 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது. 2-வது போட்டியில் இந்தியா 100 ரன் வித்தியா சத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் ஆட்டம் ஹராரேயில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
இந்த போட்டியிலும் இந்திய அணி அதிரடி தொடருமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும், பந்துவீச்சில் ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். கடந்த போட்டியில் இந்திய அணி 234 ரன் குவித்து இருந்தது. இந்த போட்டியிலும் வென்று இந்தியா முன்னிலை பெறும் வேட்கையில் உள்ளது.
சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணி கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறது.
இரு அணிகளும் நாளை மோதுவது 11-வது ஆட்ட மாகும். இதுவரை நடந்த 10 போட்டிகளில இந்தியா 7-ல், ஜிம்பாப்வே 3-ல் வெற்றி பெற்றுள்ளன.
நாளைய போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணியுடன் ஜெய்ஸ்வால், சஞ்சுசாம்சன், ஷிவம்துபே ஆகியோர் இணைந்துள்ளனர்.
வெஸ்ட்இண்டீசில் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இவர்கள் 3 பேரும் நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஜிம்பாப்வே தொடரில் முதல் 2 போட்டியில் இவர்கள் இடம் பெற முடியவில்லை.
தற்போது அவர்கள் இந்திய அணியில் இணைந்து உள்ளதால் சாய்சுதர்சன், ஹர்ஷித் ரானா, ஜிதேஷ் சர்மா ஆகியோர் நாடு திரும்புகிறார்கள். இவர்கள் முதல் 2 போட்டிகளுக்கு மட்டும் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
இதில் சாய்சுதர்சன் 2-வது 20 ஓவர் போட்டியில் அறிமுகமாகி இருந்தார். ஆனால் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.