நமக்கு நாமே திட்டத்துக்கு ரூ.100 கோடி நிதி அனுமதி- கலெக்டர்களின் அனுமதியோடு பணிகளை தொடங்க வழிமுறை வெளியீடு
- நமக்கு நாமே திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கடந்த 1997-98-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தபட்டது.
- 2007-2008-ம் ஆண்டு நமக்கு நாமே திட்டம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு 2011-ம் ஆண்டு முடிய செயல்படுத்தப்பட்டது.
சென்னை:
மக்களின் சுய உதவி, சுய சார்பு எண்ணம் ஆகிய வற்றை வலிமைப்படுத்தவும் பரவலாக்கவும், மக்கள் பங்கேற்புடன் கூடிய நமக்கு நாமே திட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கடந்த 1997-98-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு 2001-ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது.
அதன் பிறகு 2001-2002-ம் ஆண்டு கிராம தன்னிறைவு திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டு 2006-ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது. 2007-2008-ம் ஆண்டு நமக்கு நாமே திட்டம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு 2011-ம் ஆண்டு முடிய செயல்படுத்தப்பட்டது.
இப்போது மீண்டும் 2021-2022 முதல் நமக்கு நாமே திட்டம் ஊரகப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.100 கோடியை அரசு ஒதுக்கி உள்ளது. இதற்காக அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி பள்ளிக் கட்டிடங்கள் கட்டுதல், காம்பவுண்டு சுவர் அமைத்தல், சமுதாய கூடம் கட்டுவது, மகளிர் விடுதிகள் கட்டுதல், ஊர் சந்திப்புகளில் கோபுர மின் விளக்குகள் அமைத்தல், பள்ளிக் கூடங்களில் கூடைப் பந்து, பூப்பந்து தளம் அமைத்தல், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கால்நடை மருந்தகங்கள், நூலகம், சத்துணவு மையங்கள், சிறிய பாலங்கள், பூங்கா, விளையாட்டு மைதானம், உடற்பயிற்சிகூடம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கலெக்டர்களின் அனுமதியுடன் செயல்படுத்தலாம்.
இதற்காக அரசு விரிவாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.