தமிழ்நாடு

மீஞ்சூர் அருகே வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு 100 நாள் பணியாளர்கள் வாக்குவாதம்

Published On 2023-05-26 07:15 GMT   |   Update On 2023-05-26 07:15 GMT
  • வேலைக்கு முறையான ஊதியத்தை வங்கிக் கணக்கில் இருப்பு வைக்காமல் காலதாமதம் செய்கிறார்கள்.
  • வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரி கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டினர்.

பொன்னேரி:

மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் பூங்குளம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சம்பளம் நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கக்கோரி 100 நாள் வேலைதிட்ட பணியாளர்கள் வேலையை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், ஊராட்சி துணைத் தலைவர் ரமேஷ் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களை பணியாளர்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சம்பளப்பணம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தார். இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து 100 நாள் பணியாளர்கள் கூறும்போது, வேலைக்கு முறையான ஊதியத்தை வங்கிக் கணக்கில் இருப்பு வைக்காமல் காலதாமதம் செய்கிறார்கள். இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோர். இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரி கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டினர்.

Tags:    

Similar News