அணை மீனுக்கு அதிகரிக்கும் மவுசு: மேட்டூரில் இருந்து கேரளாவுக்கு சென்ற 15 லட்சம் மீன்குஞ்சுகள்
- ஜூன் 1-ந் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி வரையிலான காலம் பாசன ஆண்டாக கணக்கிடப்படுகிறது.
- கடல் போன்ற பிரம்மாண்டமான நீர் பரப்பில் விடப்படும் மீன் குஞ்சுகள் பெரிய அளவிலான மீன்களாக சில மாதங்களில் வளர்ச்சியடைந்து, ஆண்டு முழுவதும் மீனவர்களுக்கு கிடைத்துவருகிறது.
தமிழகத்தில் 12 மாவட்டங்களின் பாசனத்துக்கான நீரை வழங்கி, விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக திகழ்வது மேட்டூர் அணை. இந்த அணை மீன் உற்பத்தி மூலமாக, மீனவர்கள் பல ஆயிரம் பேருக்கு வாழ்வளித்து வருகிறது. மேட்டூர் அணை மீன்களுக்கு சுவை அதிகம். கர்நாடகாவுடன் குடகுவில் உற்பத்தியாகும் காவிரி ஒகேனக்கல் வழியாக பல அற்புதமான மூலிகைகளை கடந்து மேட்டூர் அணைக்கு வருகிறது. இந்த மூலிகை நிறைந்த நீரில் வளரும் மீன்கள் என்பதால் மேட்டூர் அணை மீன்களுக்கு இயல்பாகவே ருசி அதிகமாக உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இதனைப் பயன்படுத்தி மேட்டூர் மீன் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாக அணையில் மீன் குஞ்சுகள் விடப்படும். இதை மீன் விதைப்பு என்பார்கள்.
ஜூன் 1-ந் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி வரையிலான காலம் பாசன ஆண்டாக கணக்கிடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பரப்பு 53 சதுர மைல் கொண்டது. அது மட்டுமல்ல, அணையின் நீர் மட்டம் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும்போது, அணையில் தேங்கும் நீரானது அடிபாலாறு தொடங்கி காவிரியில் ஒகேனக்கல் வரையிலும் தேங்கி நிற்கும்.
எனவே, கடல் போன்ற பிரம்மாண்டமான நீர் பரப்பில் விடப்படும் மீன் குஞ்சுகள் பெரிய அளவிலான மீன்களாக சில மாதங்களில் வளர்ச்சியடைந்து, ஆண்டு முழுவதும் மீனவர்களுக்கு கிடைத்துவருகிறது.
காவிரி ஆறு வனப்பகுதி வழியாக பாய்ந்து வருவதால், இயற்கையாகவே அதில் மீன்களுக்கு தேவையான சத்துகள், உணவுகள் இருக்கும். காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் முன்னர் மேட்டூர் அணையின் கரையோரங்கள், காவிரி கரையோரங்களில் கிராம மக்கள் கம்பு, கேழ்வரகு, சோளம், நிலக்கடலை உட்பட பல்வேறு பயிர்களை பல நூறு ஏக்கருக்கு மேல் நடவு செய்திருப்பர்.
காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, உடனடியாக, பயிர்களை அறுவடை செய்துவிடுவர். அந்த அறுவடை எச்சங்கள் அணை நீரில் மூழ்கிவிடும்போது, அவை மீன்களுக்கு மிகச்சிறந்த உணவாக அமைந்து விடுகிறது.
எனவே, மேட்டூர் அணையில் மீன்கள் செழித்து வளருவதுடன், சுவையானவையாகவும் இருக்கின்றன. குறிப்பாக, தமிழகத்திலேயே சுவை மிகுந்த மீன்கள் கிடைப்பது மேட்டூர் அணையில்தான். எனவே, மேட்டூர் அணையில் பிடிக்கப்படும் மீன்களை தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் செல்வர்.
மீன்பிடி தொழில் அணையில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு மட்டுமல்லாது, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டம் வரை காவிரி கரையோர மீனவர்களுக்கு வாழ்வாதாரத்தைக் கொடுத்து வருகிறது.
இந்த சுவையான மீன்கள் மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் முயற்சியால் சமீபத்தில் தமிழக சட்டசபைக்கும் சென்றன என்பது குறிப்பிடத்தக்கது. எம்.எல்.ஏ.க்கள் மேட்டூர் அணை மீன் உணவை சுவைத்து சாப்பிட்டனர். தற்போது இந்த மீன்கள் கேரளாவுக்கும் செல்கின்றன.
மேட்டூரில் செயல்பட்டு வரும் அரசு மீன் குஞ்சு உற்பத்தி, வளர்ப்புப் பண்ணையில், கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை உள்ளிட்ட மீன்களின் வளத்தை பெருக்கும் வகையில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை ஆண்டுதோறும் ஜூலை தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் வரை சீரான இடைவெளியில் மேட்டூர் அணையில் விடப் படுகின்றன.
அதேபோல, ஒவ்வொரு மாவட்டத்தின் மீன் வளத்துறைக்கும், அண்டை மாநிலத்துக்கும் மீன் குஞ்சுகள் வழங்கப்படுகின்றன. தற்போது, மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகின்றன. இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை உள்ளிட்ட மீன்கள் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இன முதிர்ச்சியடைந்து இனப்பெருக்கம் செய்யும். அப்போது, மீன் குஞ்சுகளை கண்டறிந்து சேகரித்து வழங்குவதில் சிக்கல் உள்ளது. இதனால் தூண்டுதல் முறையில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தாய், தந்தை மீன்களை வளர்த்து ஊசி மூலம் ஹார்மோன் செலுத்தப்படுகிறது.
பின்னர், 4-வது நாளில் நுண் மீன் குஞ்சுகள் சேகரிக்கப்பட்டு, 1 மாதத்துக்கு விரலிகளாக வளர்க்கப்படுகின்றன. 15 முதல் 17 நாட்களில் இள மீன் குஞ்சுகளாகவும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கேராளவில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்ய தேவையான வசதிகள், இடங்கள் இல்லாததால் மேட்டூர் அரசு மின் குஞ்சு உற்பத்தி, வளர்ப்புப் பண்ணையில் ஆண்டு தோறும் குறிப்பிட்ட இடைவெளியில் வாங்கிச் செல்கின்றனர். அதன்படி, 15 லட்சம் கட்லா, ரோகு, மிர்கால் நுண்மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வேலூர் மாவட்டத்துக்கு 6 லட்சம் நுண் குஞ்சுகள், 1.52 லட்சம் இள மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்பட்டன என்றனர்.