சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி நர்சிங் மாணவிகள் 15 பேருக்கு வாந்தி-மயக்கம்
- விடுதியில் தயாரிக்கப்பட்ட பூரி, கிழங்கினை இரவு உணவாக நர்சிங் மாணவிகளுக்கு வழங்கினர்.
- இரவு சாப்பிட்ட பூரி, கிழங்கு உணவில் ஏற்பட்ட ஒவ்வாமையால் வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினர்.
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலை நகரில் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இதில் நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவிகள் இங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை கல்லூரியில் நர்சிங் படித்து முடித்துவிட்டு வழக்கம் போல விடுதிக்கு வந்தனர். விடுதியில் தயாரிக்கப்பட்ட பூரி, கிழங்கினை இரவு உணவாக நர்சிங் மாணவிகளுக்கு வழங்கினர். இதனை சாப்பிட்டு தங்களது அறைக்கு படுக்க சென்றனர்.
அப்போது ஒவ்வொரு மாணவியாக வெளியில் ஓடி வந்து வாந்தி எடுத்தனர். ஒரு சில மாணவிகள் மயங்கி விழுந்தனர். தகவலறிந்த விடுதி காப்பாளர் வாந்தி எடுத்த, மயங்கி விழுந்த மாணவிகளை ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவே அனுமதித்தார். அங்கு நர்சிங் மாணவிகள் 15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இரவு சாப்பிட்ட பூரி, கிழங்கு உணவில் ஏற்பட்ட ஒவ்வாமையால் வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினர். மேலும், 15 பேரும் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.