கொள்ளைபோனது 170 பவுன் பிடிபட்டது 1 பவுன்- வடமாநில வாலிபரை வைத்து கூட்டாளிகளை தேடும் போலீசார்
- தனிப்படை போலீசார் முக்கிய குற்றவாளிகளை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 170 பவுன் கொள்ளை போன நிலையில் ஒரு பவுன் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குஜிலியம்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே தனியார் சிமெண்ட் ஆலை உள்ளது. இந்த ஆலையின் மேலாளராக இருப்பவர் திருநாவுக்கரசு (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர் கடந்த மாதம் 22ந் தேதி தனது மனைவியுடன் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 170 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்கள் கொள்ளை போனது.
இதே போல் அருகில் வசிக்கும் உதவி பொது மேலாளர் செந்தில் (42) என்பவர் வீட்டில் ரூ.10 ஆயிரம், பாஸ்கர் வீட்டில் ரூ.40 ஆயிரம் பணம் திருடு போனது.
அதற்கு அடுத்து வசிக்கும் வேல்முருகன் என்பவர் வீட்டிலும் கொள்ளையர்கள் உள்ளே புகுந்த போது அங்கு எதுவும் கிடைக்காததால் விட்டுச் சென்றனர்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின் பேரில், டி.எஸ்.பி. துர்காதேவி வழிகாட்டுதலின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் இசக்கிராஜா, சரத்குமார் அடங்கிய தனிப்படை போலீஸ் குழு அமைக்கப்பட்டது.
தனியார் சிமெண்ட் ஆலையில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியில் இருப்பதால் அவர்கள் யாரேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தினர். மேலும் அரியலூர் உள்ளிட்ட சிமெண்ட் கம்பெனிகள் உள்ள இடங்களில் இதேபோல் அதிக அளவு நகை பணம் கொள்ளை போன சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் விசாரணை நடத்தப்பட்டது.
முக்கிய கைரேகைகளை வைத்து ஆய்வு செய்ததில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த கொள்ளையர் இதில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் மத்தியபிரதேசம் விரைந்தனர்.
அங்குள்ள தார் மாவட்டம் பசோலி பகுதியில் அம்மாநில போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தற்போது அதே பகுதியை சேர்ந்த பாயாமெர்சின் பாப்ரியா (30) என்பவரிடம் இருந்த நகையை பரிசோதனை செய்தனர். அந்த நகையை கொள்ளைபோன உரிமையாளரிடம் செல்போன் மூலம் காட்டியதில் அது தனது நகை என உறுதி செய்தார். இதனை தொடர்ந்து அந்த வாலிபரை குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். இதில் கொள்ளைக்கு மூளையாக இருந்த நபர் பல்வேறு இடங்களில் நகைகளை கொடுத்து வைத்திருப்பதும், அதில் ஒரு பவுன் மட்டும் தனக்கு கிடைத்ததும் தெரிய வந்துள்ளது.
அதன்பேரில் அந்த வாலிபரை கைது செய்து வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளிகளை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
170 பவுன் கொள்ளை போன நிலையில் ஒரு பவுன் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.