தி.நகரில் தொழிலாளியிடம் ரூ.2½லட்சம் அபேஸ்: பஸ்களில் கூட்ட நெரிசலில் நகை-பணம் பறிக்கும் 2 பெண்கள் கைது
- மயிலாடுதுறையில் பதுங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் தனிப்டை போலீசார் கைது செய்தனர்.
- கடந்த 15-ந் தேதி கிண்டியில் மாநகர பஸ்சில் பயணம் செய்த பெண் ஒருவரிடம் 3½பவுன் நகையை பறித்ததையும் ஒப்புக்கொண்டனர்.
போரூர்:
சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். தொழிலாளி. இவர் கடந்த 16-ந் தேதி மாலை மகளின் திருமணத்திற்கு நகை வாங்குவதற்காக மனைவியுடன் ரூ.2½லட்சம் ரொக்கத்துடன் மாநகர பஸ்சில் (12ஜி) தி.நகருக்கு சென்றார்.
பஸ்சில் இருந்து இறங்கிய இருவரும் பிரபல கடையில் நகை வாங்கிவிட்டு பணத்தை செலுத்த பையை பார்த்தபோது ரூ.2½ லட்சம் மாயமாகி இருந்தது.
மாநகர பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
உதவி கமிஷனர் பாரதிராஜா, சப் - இன்ஸ்பெக்டர் மகாதேவன் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சந்தேகத்திற்கிடமான 2 பெண்கள் விஜயகுமார் பயணம் செய்த பஸ்சில் பயணம் செய்தது தெரிந்தது.
விசாரணையில் அவர்கள் பரமக்குடியை சேர்ந்த உறவினர்களான கவிதா மற்றும் ரேகா என்பது தெரிந்தது. மயிலாடுதுறையில் பதுங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் தனிப்டை போலீசார் கைது செய்தனர்.
இருவரும் சேர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பஸ்சில் தனியாக பயணம் செய்பவர்களை குறி வைத்து பணம் மற்றும் நகைகளை திருடி வந்தது தெரியவந்தது.
அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் நகை பறிப்பு, திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. கடந்த 15-ந் தேதி கிண்டியில் மாநகர பஸ்சில் பயணம் செய்த பெண் ஒருவரிடம் 3½பவுன் நகையை பறித்ததையும் ஒப்புக்கொண்டனர்.