செய்திகள்

கனமழையால் பயிர்கள் பாதிப்பு: ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன்

Published On 2017-11-08 04:25 GMT   |   Update On 2017-11-08 04:26 GMT
கனமழையால் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் ஆறுதல் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் விளக்குமுகத்தெருவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தமிழ் மாநில காங்கிரஸ் மாநில தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் நீரில் மூழ்கி அழுகிய நிலையில் உள்ள விளைநிலங்களை பார்வையிட்டார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சீர்காழி வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் பெய்த கனமழையால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டுள்ளனர். நெற்பயிரை அழிக்கக்கூடிய தண்ணீர் முழுமையாக வடியவில்லை என்பதுதான் வேதனையான செய்தி, இதற்கெல்லாம் காரணம் அரசு முறையாக ஆறுகள், வாய்க்கால்கள், ஏரிகள், வடிகால் வாய்க்கால்களை தூர்வாரவில்லை. மராமத்து பணிகளை அரசு அறிவித்திருந்தாலும்கூட அதன் செயல்பாடுகள் எந்த இடத்திலும் முழுமை பெறவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது. எனவே அரசியலுக்கு இடம் கொடுக்காமல் எல்லா கட்சிகளும் ஓர்அணியில் நின்று சாதாரண பகுதியில் வாழ்கின்ற ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கக்கூடாது என்ற உணர்வோடு இனிவரும் காலங்களில் தூர்வாரும் பணி மராமத்துபணி ஆகியவற்றை முறையாகவும், சரியாகவும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் இன்னும் அதிகாரிகள் வந்து பார்க்கவில்லை என மக்கள் குறைகூறுகிறார்கள். அதற்கு ஏற்றவாறு நிற்கின்ற தண்ணீர் அதேநிலையில் நின்றுகொண்டிருக்கிறது. அதேபோன்ற பகுதிகளில் அதிகாரிகள் அதிக அக்கறை காட்ட வேண்டும். பயிர் இன்சூரன்ஸ் உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். சம்பா ஏக்கருக்கு 25 ஆயிரம் செலவு செய்துள்ளனர்.

நாகை, திருவாரூர், தஞ்சையில் ஒரு பகுதி விளைநிலங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழிந்த நிலையில் உள்ளது வேதனைக்குரிய ஒன்று. விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் இந்த மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு நியாயமான முறையில் பதில் கூற வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் ஆறுதல் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று பார்த்து வீடுகளுக்கும், கால்நடைகளுக்கும் நிவாரண உதவி கொடுக்க வேண்டும்.

நாகை மாவட்டத்தில் மீனவர்கள் ஒரு வாரமாக வாழ்வாதாரத்தைத் தேடி கடலுக்கு செல்ல முடியாமல் 5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். மீனவர்களுக்கும் உதவிகரமாக அரசு இருக்க வேண்டும். இனிமேல் மழைபெய்தால் வடிகால் வசதி முறையாக இருக்க வேண்டும். முழுமையாக தூர்வார வேண்டும். அந்த பணியை அரசு சரியாக செய்யாததால் மக்கள் இன்று கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அரசு விழித்துக்கொண்டு தங்களுடைய செயல்பாடுகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

Similar News