செய்திகள்

ரஜினி ரசிகர் மன்றத்தில் உள்ள தி.மு.க. தொண்டர்கள் வெளியே வருவார்கள்: மா.சுப்பிரமணியன்

Published On 2018-01-02 07:14 GMT   |   Update On 2018-01-02 07:14 GMT
ரஜினி தனிக்கட்சி தொடங்க போவதாக அறிவித்துள்ளதை தொடர்ந்து அவர் ரசிகர் மன்றத்தில் உள்ள தி.மு.க.வினர் மன்றத்தில் இருந்து வெளியேறுவார்கள் என மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி 234 சட்டசபை தொகுதியிலும் போட்டியிட போவதாகவும் ரசிகர் மன்றத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதுடன், ஒவ்வொரு தெருவிலும் மன்றங்களை உருவாக்க வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு கூறி இருந்தார்.

இதையொட்டி ஒவ்வொரு ஊரிலும் ரசிகர் மன்றத்தில் ஆட்களை சேர்க்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கட்சியில் இருந்தும் பலர் ரஜினி மன்றத்துக்கு செல்லக்கூடும் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

இதுகுறித்து தி.மு.க.வின் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

ரஜினிக்கு எல்லா கட்சியிலும் ரசிகர்கள் உள்ளனர். அவரது நடிப்பை ரசிக்கும் ரசிகர்கள் சிலர் தி.மு.க.விலும் இருக்கலாம்.

அவர் தனிக்கட்சி தொடங்க போவதாக அறிவித்துள்ளதால் ரஜினி ரசிகர் மன்றத்தில் உள்ள தி.மு.க.வினர் மன்றத்தில் இருந்து வெளியேறுவார்கள்.

தி.மு.க. என்பது உணர்வு பூர்வமான இயக்கம். தலைவர் கலைஞர், செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வழியை பின்பற்றுகிற தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் ரஜினி பின்னால் செல்ல மாட்டார்கள்.

ஏனென்றால் ரசிகனாக இருப்பது வேறு. அரசியல் என்பது வேறு. சமூக வலை தளங்களில் தி.மு.க. தொண்டர்கள் தங்களது உணர்வுகளை தெளிவாக வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். எனவே தி.மு.க. தொண்டர்களை சந்தேகப்பட வேண்டியதில்லை. தி.மு.க.வினர் யாரும் ரஜினி பக்கம் 100 சதவீதம் செல்ல வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

#tamilnews
Tags:    

Similar News