செய்திகள்
விபத்துக்குள்ளான வேனை படத்தில் காணலாம்.

கங்கைகொண்டான் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர்-பெண் பலி

Published On 2018-07-09 06:02 GMT   |   Update On 2018-07-09 06:02 GMT
கங்கைகொண்டான் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் மற்றும் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
கயத்தாறு:

நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் வேளார்குளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 52 ). இவரது மனைவி பார்வதி (50). இவர்களது உறவினர் திருமணம் சமீபத்தில் நடந்தது. இதையடுத்து திருமண தம்பதிகளை மறுவீடு அனுப்ப கோயம்புத்தூருக்கு நேற்று ஒரு வேனில் புறப்பட்டு சென்றனர்.

வேனில் முருகன், பார்வதி மற்றும் 2 சிறுமிகள் உள்பட 10 பேர் சென்றனர். அவர்கள் கோவையில் புதுமண தம்பதியை விட்டு விட்டு மீண்டும் நெல்லையை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

வேனை மானூர் அருகே உள்ள தெற்குபட்டியைச் சேர்ந்த ஜெயபால் (42) என்பவர் ஓட்டிவந்தார். அவர்களது வேன் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள புலவர்த்தான்குளத்தில் இன்று காலை வந்தது. அப்போது அந்த பகுதியில் லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்தது.

சாலை வழுவழுப்பாக இருந்ததால் வேகத்தை குறைக்க வேன் டிரைவர் பிரேக் பிடிக்க முயன்றார். ஆனால் சாலையில் மழைநீர் நின்றதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே வேனின் டிரைவர் ஜெயபால், பயணம் செய்து வந்த பார்வதி ஆகிய இருவரும் பலியானார்கள்.

வேனில் இருந்த இசக்கிமுத்து(37), அவரது மனைவி மணிமாலா(32), முருகன்(34), அவரது மனைவி பரமேஷ்வரி(33), லட்சுமி(62), சுதர்சன்(22) உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்கள். இதில் அதிர்ஷ்டவசமாக வேனில் பயணம் செய்த 2 சிறுமிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கங்கை கொண்டான் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், படுகாயமடைந்த 7 பேரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் பலியான பார்வதி, ஜெயபால் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கங்கை கொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News